ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2025

வசிஷ்டரும் அருந்ததியும்

வசிஷ்டரும் அருந்ததியும்


அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் பதினாறு வருடங்கள் வளர்ச்சி பெறுகின்றான். பதினாறாவது வயதில் அக்கால மக்கள் அவனுக்குப் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். திருமணத்தைச் செய்து வைக்கும் பொழுது கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றார்கள்.
 
துருவன் தான் கண்ட உண்மைகளைத் தன் மனைவி பெற வேண்டும் என்று உணர்வுப் பூர்வமாகச் சொல்லுகின்றான்.
 
அவனுடைய மனைவி கேட்கின்றது. தனக்குள் பதிவு கொண்ட உணர்வின் துணை கொண்டு “விண்ணை நோக்கி ஏங்குகின்றது…” இவன் கண்ட பேருண்மைகளை அவளும் காணுகின்றாள்… அறிவுபூர்வமாக அறிகின்றாள்.
 
தன் கணவனால் பெற்ற சக்தியால் பேரின்பப் பேரானந்த நிலைகள் அடைகின்றாள்.
 
1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணரும் பருவமும்
2.அதை நுகர்ந்தறிந்து தனக்குள் மகிழ்வுறும் உணர்வாக  வெளிப்படுத்துவதையும்
3.நஞ்சினை ஒடுக்கும் ஆற்றலாக… “தான் நுகரும் உணர்வு ஒளிக் கற்றைகளாகத் தன் உடலில் இருந்து வெளிப்படுவதையும்…” உணர்கின்றாள்.
 
இவ்வாறு தன் கணவனால் பெற்ற சக்தியால் இந்தப் பிரபஞ்சத்தை அறிந்திடும் உணர்வுகள் தனக்குள் வளரும் தன்மை பெற்று…
1.கணவன் அந்த உயர்ந்த நிலைகளை மேலும் மேலும் பெற வேண்டும் என்ற
2.ஏக்க உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றாள்.
 
துருவனோ தான் உபதேசித்த உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அதன்வழி தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வுகளைக் கண்டு அவனும் பேரானந்தப் படுகின்றான். அப்பொழுது இரு மனமும் ஒன்றாகி “ஒருவரை ஒருவர் உயர்த்தி எண்ணும் நிலை வருகின்றது…”
 
ஒருவர் சொல்லை ஒருவர் உயர்த்தும் நிலை வரும் பொழுது தான் அதற்கு நளாயினி என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள். தன் கணவன் சொல்லைச் சிரமேல் கொண்டு அதன் வழி நடப்பதை நாமெல்லாம் புரிந்து கொள்வதற்காக நளாயினி என்று காரணப்பெயரை வைக்கின்றார்கள்.
 
தன் கணவன் சொன்ன சொல்லைத் தனக்குள் உயர்த்தி அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணர்வதோடு மட்டுமல்லாது அகண்ட உலகில் நட்சத்திரங்கள் எவ்வாறு உணவை உட்கொள்கின்றது…? என்பதை அறியும் பருவம் வருகின்றது.
 
அந்த நட்சத்திரங்கள் உணவாக உட்கொண்ட உணர்வுகள் நமது பிரபஞ்சத்தில் பரவும் பொழுது சூரியன் அதை உணவாக உட்கொள்வதையும் அதன்வழி அது வளர்ச்சி பெற்று வெளிப்படும் உணர்வுகளால் கோள்களும் அணுக்களும் எப்படி உருப்பெறுகின்றது…? என்ற நிலையையும் அவள் அறிகின்றாள்.
 
1.தான் கண்ட உண்மையைத் தன் கணவருடன் ஒன்றி அந்த உண்மையின் தன்மைகளைச் சொல்வதும்
2.இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு அதன்ன் வழியில்
3.அகஸ்தியன் தன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும்… மனைவி உயர்ந்த சக்தி பெறுகிறதென்றும் உணர்கின்றான்.
 
அந்த உணர்வுகள் அனைத்தும் அவர்கள் உடல்களில் விளையப்பட்டு இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை பெறுகின்றது. இரு உயிரும் எதைக் கவர்ந்ததோ அதைக் கருவாக உருவாக்கும் திறன் பெறுகின்றார்கள்.
 
துருவனின் உடலில் விளையும் உணர்வுகள் துருவ மகரிஷியின் மனைவியின் உடலிலும் விளைகின்றது.
 
அதற்கு அருந்ததி என்று, காரணப் பெயரை வைக்கின்றார்கள். தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி அதனுடன் இணைந்து வாழ்ந்திடும் நிலையை அருந்ததி என்று பெயரை வைக்கின்றார்கள்.
 
வசிஸ்டரும் அருந்ததியும் என்றால் வசிஸ்டர் ஆண்பால் அருந்ததி தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகள்.
1.இருவரும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மையை இரண்டறக் கலந்து ஒன்றாக
2.உயிருடன் இணைக்கும் பருவம் பெறுகின்றார்கள்.
 
உயிருக்குள் வெப்பம் என்ற நிலைகள் இருப்பினும் ஈர்க்கும் காந்தம் பெண்பால் அருந்ததி என்றும் தன்னுடன் இயக்கும் உணர்வுகளை வசிஸ்டர் என்றும் காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
 
இவ்வாறு வளர்ந்த உணர்வுகள் “சத்தியவான் சாவித்திரி…” உயிருடன் ஒன்றிய உணர்வாக மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் தகுதி பெறுகின்றார்கள்.
 
இதைத்தான் நமது ஞானிகள் நாமெல்லாம் கண்டுணர்வதற்குச்
1.சந்தர்ப்பத்தால் ஏற்படும் இணைப்பும் அதனால் உருப்பெறும் சக்தியும்
2.அவைகளுக்குக் காரணப் பெயர்களை வைத்து அழைத்து அகஸ்தியன் தொடர்களை நாமும் கண்டுணரும்படிச் செய்கின்றார்கள்.
 
அவ்வழியில் வளர்ந்தவர்கள்தான் எதைக் கூர்மையாக எண்ணி அந்த உணர்வினை இருவரும் ஒன்றாக இணைந்துப் பெற்றனரோ… இணைந்து இன்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.
 
துருவ நட்சத்திரமாக வாழ்ந்தாலும் அகண்ட உலகின் தன்மையைத் தன் உணர்வுக்குள் பெறும் தகுதியும் பெறுகின்றனர்.
 
நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் வரும் நிலையைக் கவர்ந்து அது உமிழ்த்தும் உணர்வலைகள் பால்வெளி மண்டலங்களாகப் படர்கின்றது. அணுக்களின் தன்மைகள் சுழற்சியில் வரப்படும் பொழுது தூசிகளாக மாறுகின்றது.
 
இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பொருளைக் காற்று அழுத்ததால் அழுத்தப்படும் பொழுது அதை மிகவும் நுண்ணிய தூசிகளாக (பவுடர்) மாற்றுகின்றார்கள்.
 
அகஸ்தியரும் அவர் மனைவியும், துருவ நட்சத்திரமாகும் பொழுது
1.பிற மண்டலங்கள் அகண்ட உலகில் அது பெறும் உணர்வுகள் தூசுகளாக வருவதையும்… பிரபஞ்சத்தில் அது பரவுவதையும்
2.பிரபஞ்சத்தில் பரவுவதை நமது பூமி துருவப் பகுதியில் ஈர்க்கப்படும் பொழுது இடைமறித்து அந்த உணர்வின் தன்மையை
3.எப்படி, நமது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் துருவப் பகுதியில் இடைமறித்து அதைத் தனக்குள் எடுத்து வளர்க்கின்றதோ
4.அதைப் போன்றுநமது பூமியில் விளைந்த இவர்கள் இருவரும் ஒன்றானபின்
5.அதைக் கருவாக்கும் நிலைகள் பெற்று ஒளியின் சுடராக இன்றும் மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.
 
அகஸ்தியரும் அவர் மனைவியும் இருவரும் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வை ஒளியின் அணுவாக மாற்றியது போன்று அக்காலங்களில் பெற்ற மற்ற மக்கள் ஆறாவது அறிவு ஏழாவது நிலைகள் பெற்றுத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள். “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைந்து விட்டார்கள்.
 
ஆகவே நாம் அனவரும்
1.இதே வழியில் அதை உற்று நோக்கி அந்த உணர்வினைக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால்
2.நாமும் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து ஒளியின் சரீரமாவது திண்ணம். எமது அருளாசிகள்.