ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 22, 2016

நல்லது நமக்குள் வராது தடைப்படுத்துவது எது? எதனால்?

காட்டுப் பகுதியில் தாவர இனங்கள் அதனதன் உணர்வு கொண்டு கூட்டமைப்பாக இருக்கின்றது. அதிலே தன் இன மரங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அதனுடைய அலைவரிசை அதிகமாகின்றது.

அதிலே சிறு சிறு செடிகளாகவோ அல்லது அந்த மாற்று மரங்களின் தன்மை குறைவாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது, அதிகமாக அடர்த்தியாக இருக்கும் மரங்கள் அது தனது உணர்வால் கவரப்படும் பொழுது அதன் அருகிலே இருக்கக்கூடிய அடர்த்தி குறைவான (மாற்று) மரங்களுக்கு அதன் உணர்வைக் கவரும் திறன் இழக்கப்படுகின்றது.

ஏனென்றால், அடர்த்தியின் தன்மை வரப்படும் பொழுது அந்த மரங்களுக்கு வரும் சத்தினை இது தடைப்படுத்தி இது மறைத்துவிடுகின்றது.

ஆகவே, அப்பொழுது அந்த மரம் மிகவும் சிரமப்பட்டுத்தான் வளர்ச்சி பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைக் குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு மரங்கள் குறைவதும் அதனின் உணர்வின் வேகங்கள் எவ்வாறு வருகின்றது? என்று அதை உணரும்படிச் செய்தார்.

இப்பொழுது நமக்கு நோய் என்று வந்து விட்டால் நமக்கு வேதனை வருகின்றது. வேதனைப்படும் பொழுது அந்த நேரத்தில் நல்லதை யாராவது சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மறுப்போம்.

வேதனைப்பட்டுள்ளோர்களுக்கு வேதனைப்படும் நிலைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தால் ரசித்துக் கேட்பார்கள். அப்பொழுது அந்த நேரத்தில் அவர்களுடைய வேதனைகள் தெரியாது.

அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது “இது நல்லது.., அது அப்படி இருந்தது..,” என்று உயர்ந்த குணங்களைப் பற்றி நீங்கள் சொன்னாலும் அதற்கு எதிர்மறையாகி அதனுடைய நிலைகளை நாம் கேட்க மறுப்போம்.

ஏனென்றால் அந்த வேதனை உணர்வு நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நுகராதவண்ணம் தடைப்படுத்தி நமக்குள் தீமைகளையே விளைய வைக்கும்.

நமக்குள் தீமையை விளைவிக்கும் இத்தகையை நிலைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.

அதற்குத்தான் செடிகளுக்கு உரம் போடுவது போன்று அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளுக்குள் வலு ஏற்றும்படிச் செய்கின்றோம்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் இணையச் செய்தால், நல்ல உணர்வுகள் இயங்கவிடாமல் செய்யும் தீய உணர்வுகளை அருள் மகரிஷிகளின் உணர்வுகள் செயலிழக்கச் செய்துவிடும்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நம் ஆன்மாவில் பெருக்கச் செய்தால் அதனின் அடர்த்தி அதிமாகி தீமை செய்யும் உணர்வின் அலைகள் நம் அருகே வராதபடி நம்மைப் பாதுகாக்கும்.

நலம் பெறுக வளம் பெறுக, மகரிஷிகளின் அருள் சக்தி பெறுக.