ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 23, 2016

கால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்

மோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,?” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் செய்வதில்லை.

தன்னைச் சார்புடையோர் அல்லாது வரும்பொழுது அது பகைமை உணர்வுகளை நுகர்ந்து சீறிப் பாய்ந்து தாக்கும் நிலை வருகின்றது.
 
ஒரு மனிதனை அன்பு கொண்டு அரவணைக்கும் தன்மை வந்துவிட்டால் அந்த உணர்வின் தன்மை அவர் வரும் பொழுதே மோப்பத்தை வைத்து “என் நண்பன்..,” என்று சொல்வோம்.

அதே சமயத்தில், தன் குழந்தை என்ற நிலையில் அவன் பண்பு கொண்டு வளர வேண்டும் என்றும் பண்பு கொண்டவனாக வர வேண்டும் என்று எண்ணுகிறோம்.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பண்பு கொண்ட உணர்வை வளர்த்து நமக்குள் அந்தப் பண்பு கொண்ட அணுவின் தன்மையாக வளர்கின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவனுக்குள் விளைய வேண்டும். அவனையறியாது இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் தன்மை வேண்டும் அறிந்துணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ணுவதே அந்தப் பண்பான நிலைகள்.

இத்தகைய உணர்வை வளர்த்து அவனிடம் சொல்லி அணுகும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து பதிவாக்கிவிட்டால் அவன் மோப்பம் அந்தப் பண்புகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் இருளை மாய்க்கின்றான்.

ஆனால், வெறி கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது நமக்குள் எந்தக் குணத்தின் தன்மையை அதிகமாக வைத்துக் கொள்கின்றோமோ அந்த வெறி கொண்ட உணர்வின் தன்மையாகத்தான் நாம் வெளிப்படுத்துவோம்.

அந்த உணர்வுகள் வெளிப்படும்பொழுது எவரின் உடலில் ஏற்கனவே இருளச் செய்ததோ அந்த உணர்வுகள் இங்கே மோப்பத்தைக் காணும் பொழுதே தன் மேல் வெறுப்படையும் தன்மையும் இருளச் செய்யும் நிலையும் வருகின்து.

இன்று கால பைரவர் என்று சொல்கிறோம். அதன் பொருள் என்ன?

நாம் நுகர்ந்த உணர்வுகள் நாம் மோப்பத்தால் எடுக்கப்படும் பொழுது பைரவர் என்று சொல்லும் பொழுது அதனின் வலிமை கொண்டு அதைத் தீமை என்று உணரச் செய்கின்றது.

தன் உடலைக் காக்கத் தன் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. அதனை வீழ்த்தும் உணர்வுகளை இங்கே தூண்டுகின்றது.

ஆகவே தான் கால பைரவர் என்றும் அதற்கு நாயைக் காவலாக வைத்துள்ளார்கள். வெகு தொலைவில் வரும் உணர்வை நுகர்ந்தறிந்து தன் எஜமானைக் காக்கும்.

தன் எண்ணத்தில் பிறர் மேல் வெறுப்பின் உணர்வுகள் உருவாக்கிவிட்டால் அது தன்னைக் காக்கும்.

உதாரணமாக, தந்தை வெறுப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வின் தன்மை குழந்தையின் உடலில் வரும் உணர்வுகளை இருளச் செய்துவிடும்.

இருண்டு விட்டால் எந்த வெறுப்பின் தன்மை உருவாகியதோ மீண்டும் யாரிடம் (குழந்தையிடம்) இந்த உணர்வின் தன்மை வந்ததோ அந்த உணர்வை நுகர்ந்து மீண்டும் தந்தைக்குள் இருண்டு போகும் நிலையே வருகின்றது.

ஆக, எவர் உடலிலிருந்து வெறுப்பின் தன்மை வந்ததோ அந்த உடலைக் காக்க விரும்புகின்றது.

இருப்பினும் இந்த உடலின் மோப்பம் கண்டு அந்தச் சமயம் நுகர்ந்தாலும் நுகர்ந்த உணர்வு பகைமை உணர்வாகித் தனக்குள் (தந்தைக்குள்) சின்னாபின்னமாக்கி விடுகின்றது.

உடலில் நோயாக மாறுகின்றது. வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.

ஆனால், இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்?

கால பைரவர் அவர் தீமைகளை வெல்லக் கூடியவர் என்று அவருக்குக் கொண்டு போய் அர்ச்சனை செய்து யாகங்கள் செய்கின்றோம்.

அர்ச்சனை செய்து யாகங்களைச் செய்து அந்த பைரவரை வசப்படுத்தினால் “நாம் விரும்பியதை.., நமக்குச் செய்வார்..,” என்று இப்படி மனிதனின் வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழும்படிச் செய்துள்ளார்கள்.

மதங்களை உருவாக்கி மதத்தில் இயற்றிய சட்டங்களை நமக்குள் உருவாக்கி அதனின் சாங்கிய நிலைகளை உருவாக்கும் பொழுது அதுவே நமக்குள் கடவுளாக நின்று செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

“மதத்தின் அடிப்படையில் நாம் செயல்படும் உணர்வுகளே..,” நம்முள் அதிகமாகச் செயல்படும் பொழுது உள் நின்று அதன் வழியே நம்மை இயக்குகின்றது.

ஞானிகள் காட்டிய வழி முறைகள் இன்று மாறிவிட்டது.

நமக்குள் எது இயக்குகின்றது? நாம் நுகரும் குணங்கள் எப்படிப்பட்டது? என்பதைத் தன்னைத்தான் அறிதல் என்ற நிலைக்குத்தான் ஞானிகள் உருவங்களை அமைத்துத் தெய்வத்தின் செயலாகக் காட்டினார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் நடந்தோம் என்றால் தன்னை அறிந்து, வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைந்து அழியா ஒளியின் சரீரம் பெற முடியும்.