ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2016

“புதிய பூமி”

நீங்கள் அனைவரும் இந்த உலகுக்கு எடுத்துக்காட்டாக நிறைவுபடுத்தி அந்த உணர்வின் தன்மை நாம் பெறவேண்டும் என்று “நான்…,” மட்டும் இல்லாதபடி அனைவரும் பெறவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அருள் ஞானத்தை நாம் நமக்குள் சமைத்து விளைய வைத்த அந்த அருள் ஞானிகளின் உணர்வை எல்லோருக்கும் ஊட்டுதல் வேண்டும்.

ஆக, பிறர் அந்த எண்ணங்களை எண்ணும் பொழுது அவர்களும் அதைச் சுவைத்து அதன் வழியில் அவர்கள் பெற முடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைத்தான் புதிய பூமியாக அமைத்தது. அதிலே புதிய உணர்வை வளர்ப்பதும் அங்கே மத பேதம் இன பேதம், மொழி பேதம் என்று எத்தகைய பேதமும் வரக்கூடாது.

அருள் ஞானத்தின் நிலைகளே ஒளிச் சுடராக அங்கே வளர வேண்டும். அங்கே வரும் அனைவருக்குள்ளும் மகிழ்ச்சியின் தன்மை பெருக வேண்டும். அருள் ஞானம் அவர்களும் பெறவேண்டும்.

ஏனென்றால், “உலகைக் காக்கும் அருள் உணர்வுகள்..,” வளரவேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்வது.

நான் ஒருவனாகச் செய்யவில்லை. நானாகச் செய்வதற்கு வலுவில்லை.

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் ஒலிக்கின்றது. உணர்வின் அலைகள் படர்கின்றது. உங்கள் மனங்கள் உருவாகின்றது. அந்த உணர்வின் செயலாக.., “நீங்கள் தான் உருவாக்குகின்றீர்களே.., தவிர நானல்ல”.

நீங்கள் எங்கே இருந்தாலும் சரி குருவின் உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி அந்த ஐக்கியமாகும் உணர்வு கொண்டு செயல்படுத்துங்கள். அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து அதுவே உங்களுக்குள் வளர்ந்து அதனின் செயலாக்கமாக உங்களை அது இயக்கத் தொடங்கும்.

பதிவு செய்த நாடாவில் உள்ள இசையை மீண்டும் போடும் பொழுது அதை மகிழ்ந்து கேட்கின்றோம், அதைப் போன்று மகரிஷிகளின் உணர்வு (அதைப்) பதிவு செய்த “நாடாவாகத்தான்.., நான் இருக்கின்றேன்”.

அந்த நாடாவில் வரும் ஒலியை நானும் நுகர்கின்றேன். எனக்குள் மகிழ்ந்திடும் நிலையைப் பெருக்குகின்றேன். எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்ற நிலையைத்தான் உருவாக்குகின்றேன்.

ஒரு இனிமையான இசையைக் கேட்கும் பொழுது அகமகிழ்ந்திடும் நிலைகளை நீங்கள் வெளிப்படுத்துகின்றீர்கள்.

அதைப் போன்று உங்களுக்குள் அந்த அருள் உணர்வுகள் இசைந்து “உங்களை அது மகிழ்ச்சி அடையச் செய்யும் பொழுது..,” அதைக் கண்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.

இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.

ஆகவே, இதைச் சீராகக் கடைப்பிடிக்கும் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தத் துயரத்திற்கும் நீங்கள் இடம் தராதீர்கள். குறையான உணர்வுகளை உங்களுக்குள் புகவிடாதீர்கள்.

கணவன் மனைவி நீங்கள் இருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை சிஷ்டரும் அருந்ததியும் போன்று கவர்ந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று உங்கள் மனதினை உயர்த்துங்கள். இவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் அது சொர்க்கபூமியாக.., “புதிய பூமியாக” இருக்கும்.

ஆக, புதிய பூமி என்பது தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞான நிலைகள் கொண்டு உருவானது. அதை நாம் அனைவரும் உருவாக்கிக் கொண்டுள்ளோம்.

“அதனின்.., உருவின் தன்மையை.., உலகம் பார்க்க வேண்டும்” என்றால் அங்கே அருள் ஞானம் பேச வேண்டும். அருள் ஞானத்தின் உணர்வுகளை அங்கே பரப்ப வேண்டும். அருள் ஞானம் வளர வேண்டும்.

இந்தப் புதிய பூமியில் ஒவ்வொருவரும் தன்னை அறிதல் வேண்டும். தன்னை அறிந்து செயல்படும் திறன் அனைவரும் வேண்டும். “அனைவரும் வாழ வேண்டும்..,” என்ற எண்ண உணர்வுகள் உருப்பெறவேண்டும்.

உலகில் வாழும் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அதைத்தான்  நமக்குள் பெருக்க வேண்டும்.

அருள் ஞானிகள், அருள் மகரிஷிகளின் உனர்வுகள் அனைவரும் பெறவேண்டும். அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும். உலக மக்கள் அனைவரும் ஒன்றி வாழும் நிலைகள் பெறவேண்டும்.

இதைப் போன்ற எண்ணங்களை நாம் ஒவ்வொருவரும் வளர்த்தல் வேண்டும். இதுவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் “புதிய பூமி”.