இது வரையிலும் உபதேசித்த உணர்வின்
தன்மை கொண்டு “நான் பேசுகின்றேன்..,” என்று யாரும் எண்ண வேண்டாம். மகரிஷிகளின் உணர்வின்
அலைகளே இந்த “உணர்வின் ஒலிகளை..,” எழுப்பிக் கொண்டுள்ளது.
இன்று நாடக்களில் காந்த ஊசியை
(COMPUTER DRIVES WITH LASER) வைத்துப் பதிவு செய்து கொண்ட பின் அதை இயக்கும்போது பதிவானது
திரும்பவும் ஒலிக்கின்றது.
அதைப் போன்று தான் நமது குருநாதர்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகள் எனக்குள் பதிந்தது. பதிந்த உணர்வின் அலைகளே
உபதேசமாக இங்கே வெளி வருகின்றது.
“அவர்..,” எனக்குள் இருந்து
கொண்டு பேசவில்லை.
சிலர் என்ன நினைக்கின்றார்கள்
என்றால் என் உடலுக்குள் வந்து “அவர் பேசுகின்றார்..,” என்று. அவர் இந்த நரகலோகத்திற்குள்ளேயா
வருவார்..,?
வர மாட்டார்.
அவர் தனக்குள் பெற்று வளர்த்துக்
கொண்ட உயர்ந்த உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார். அந்தப் பதிவைத்தான் நினைவாக்கி அந்த
உணர்வின் தன்மை நீங்கள் பெறவேண்டும் என்று இதைச் செய்கின்றேன்.
அவரிடம், “எல்லாம் சரி..,”
என்று சொல்லிவிட்டு காசுக்காக வேண்டும் என்று எண்ணி இருந்தேன் என்றால் இந்த உடலுக்குக்
காசைத் தேட வேண்டும் என்ற உடலின் இச்சைதான் எனக்கு வந்திருக்கும்.
அருள் ஞானத்தை நான் பெற்றிருக்க
முடியாது. அந்த ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியையும் இழந்திருப்பேன்.
ஆக, காடு மேடெல்லாம் பல காலம்
என்னை அலையச் செய்தார் குருநாதர். அங்கே பல அனுபவங்களைப் பெறும்படி செய்தார். பேரண்டத்தின்
பேருண்மைகளை எல்லாம் எனக்குள் காட்டினார்.
அப்பொழுது, நான் அவரை உற்று
நோக்கிக் கூர்ந்து கவனித்த அந்த உணர்வுகளே எனக்குள் அழமாகப் பதிவானது. அதைத்தான் உங்களிடம்
சிறுகச் சிறுக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
குருநாதர் தன் உடலை விட்டு
அகன்றபின் ஒளியின் நிலைகள் பெறவேண்டும் என்றார்.
ஒளியின் நிலைகள் பெறும் உணர்வை
நாடாக்களில் (MEMORY DEVICE) பதிவு செய்வது போல் என் உடலுக்குள்
அதை ஊழ்வினையாகப் பதிவு செய்தார்.
பதிந்த உணர்வை நான் திரும்ப
எண்ணும் பொழுது வினைக்கு நாயகனாக அது இயக்குகின்றது. அதன் மூலம் “நானும் பெறுகின்றேன்..,
உங்களையும் பெறச் செய்கின்றேன்”.
இது தான் இதில் உள்ள நிலை.
அவ்வாறு பதிந்த நிலைகள் கொண்டு
எனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகள் தான் இசையாக மாறுகின்றது. ஆனால், அவ்வாறு பெற்ற அருள்
ஞானத்தை எனக்குள் அடக்கி வைத்துக் கொண்டால் நான் நுகரும் தன்மை இல்லை.
குருநாதர் காட்டிய அருள் வழியில்
“ஒன்று.., இரண்டு.., மூன்று..,” என்று படிப் படியாகத் தொடச் சொன்னார்.
அவர் எந்த இசையில் படித்தாரோ
அந்த உணர்வின் தன்மை தான் இங்கே இயக்கப்படும் பொழுது நானும் பெறுகின்றேன். உங்களுக்கும்
கிடைக்கச் செய்யும் சந்தர்ப்பதை ஏற்படுத்துகின்றேன். இவ்வளவு தான்.
யார் ஒருவர் இதைப் பெற்று
மகிழ்கின்றீர்களோ அந்தப் பேரானந்தத்தை நுகரும் ஆனந்த நிலைகள் உங்களுக்குள் வளரும்.
அதைத்தான் செய்யச் சொன்னார் குருநாதர்.
ஆகவே, நீங்கள் இதைப் படித்துணர்ந்தபின்
எப்பொழுதெல்லாம் இதை நினைவுக்குக் கொண்டு வருகின்றீர்களோ பதிந்த மகரிஷிகளின் பேராற்றல்மிக்க
அருள் சக்திகள் உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும்.
தீமைகளை அகற்றிடும் பேராற்றல்
பெறுவீர்கள். அந்தச் சக்திகளை நீங்கள் நுகர முடியும். அதே சமயத்தில் உங்கள் சொல்லைக்
கேட்போருக்கும் அந்த அருள் உணர்வுகள் உண்வாகக் கிடைக்கின்றது.
அப்பொழுது அவர்களும் மகிழும்
நிலைகள் பெறுகின்றார்கள். இதுதான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய பேரானந்தப் பெரு
வாழ்வு.