என்னைக் குருநாதர் காட்டுக்குள்ளும்
மேட்டுக்குள்ளும் சில நஞ்சான தீய இடங்களில் கொண்டு போய் அமரச் செய்தார்.
அந்த நஞ்சின் தன்மை எண்ணத்தால்
எப்படித் தாக்குகின்றது? நஞ்சற்ற நிலைகளை நீ எப்படிப் பெறவேண்டும்? என்ற அனுபவத்தைக்
கொடுத்தார்
ஏனென்றால், இன்றைய காற்று
மண்டலத்தில் மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட இயக்கப்பட்ட நஞ்சுகள் பலவாறு இந்தப்
பூமி முழுவதுமே படர்ந்திருக்கின்றது.
இதற்குள் நாம் நல்லதை எண்ணினாலும்
இந்த நஞ்சின் தன்மை கவர்ந்து நம் நல்ல குணங்களை இயக்கவிடாது நாம் எப்படித் தவிக்கின்றோம்?
இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான்
கடும் விஷச் சக்திகள் கொண்ட தாவர இனங்களின் மத்தியில் என்னை அமரச் செய்தார் குருநாதர்.
அதை நான் நுகரப்படும் பொழுது
என்னுடைய சிந்தனையே அழிந்திடும் நிலை வருகின்றது. இந்த உணர்வினை அங்கே எனக்குள் இணைத்துக்
காட்டுகின்றார்.
அங்கே சென்றபின் மயக்கம் வந்துவிடும்.
அத்தகைய செடிகளுக்குப் பக்கத்தில் சென்றாலே மயக்கம் வந்துவிடும்.
உனக்குள் அந்த நஞ்சின் தன்மை
இயக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதுதான் அனுபவம்.
இன்றைய உலகில் பிறர் செய்யும்
நிலைகளும் பிறர் செய்யும் தவறுகளும் அதிகமான அளவில் நாம் பார்த்துக் கேட்டு அறிந்துணர
நேருகின்றது. நம்மையறியாமலே அவைகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
பிறர் செய்யும் தீமையான உணர்வுகள்
நமக்குள் வந்தபின் நல்லதை எண்ணும் பொழுது நாம் நல்லதை வளர்க்க முடியாத நிலைகள் எப்படி
இருக்கின்றது என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
நஞ்சான தாவர இனங்கள் மத்தியில்
அந்த மணத்தை நுகரப்படும் பொழுது நுகர்ந்தாலே மயக்கம் வருகின்றது.
ஆகையினால், ஞானிகள் கண்டுணர்ந்த
பேருண்மைகளை அந்தத் தத்துவத்தைச் சொல்லப்படும் பொழுது இவருடைய தத்துவத்தை நாம் எப்படி
ஏற்றுக் கொள்வது?
இப்பொழுது மக்கள் மத்தியில்
இருக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் பாவிப்பயல், இவன் உருப்படுவானா..,? என்று
ஒருவரைச் சொல்லப்படும் பொழுது நல்ல மனம் கொண்டவர்கள் என்ன செய்கின்றோம்?
அவன் சும்மா இருக்கின்றான்.
நீ ஏன் இப்படிப் பேசுகின்றாய்? என்று அவன் உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. இவன்
நல்ல குணத்தைச் செயல்படுத்த முடியவில்லை.
இப்படித்தான் இருக்கின்றது
உலகம் என்ற நிலைகளில் தீமைகளில் சிக்கப்பட்டுத் தீமையான உணர்வுகளைப் பதிவு செய்த பின்
இது தான் இயக்குகின்றது.
நல்லதை இயக்கமுடியவில்லை.
நல்லதை வளர்க்க முடியாதபடி தத்தளிக்கின்றான். ஞானத்தின் அருள் பெறத் தெரியாதபடி தவிக்கின்றான்.
ஆகவே, இந்த மக்கள் மத்தியில் என்ன செய்யப் போகின்றாய்?
தீமைகளுக்கு மத்தியில் அமரப்படும்
பொழுது உண்மையின் தன்மை உனக்குள் நீ அறிய முடியவில்லை. இதை மாற்ற வேண்டும் என்றால்
என்ன செய்யவேண்டும் என்று வினா எழுப்பினார்.
துருவ மகரிஷிகளின் அருள் மணங்கள்
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி அந்தச் சக்தி
பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும்.
துருவ மகரிஷி அவர் வாழ்ந்த
காலத்தில் இதைப் போன்ற தீமைகளை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றி அகண்ட அண்டத்தின் இயக்கத்தையும்
அறிந்து பேரருள் பேரொளியாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்.
அந்த மணங்களை நுகர்ந்தால்
அவர் நஞ்சினை ஒளியாக மாற்றியது போன்று நீ பெற முடியும், மக்களையும் பெறச் செய்ய முடியும்
என்று அனுபவபூர்வமாக எனக்கு உணர்த்திக் காட்டினார்.
இதைப் போன்று அனுபவ வாயிலாகப்
பெற்ற அரும் பெரும் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நீங்களும்
பெறமுடியும், பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.