இன்று சில வீட்டிற்குள் பார்த்தால்
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கீரியும் பாம்பும் போல் தான் வாழ்கின்றனர். என்னுடைய உபதேசங்களையும்
கேட்டுக் கொள்கின்றார்கள். ஆனால், அதைக் கடைப்பிடிப்பதில்லை.
ஆக, கேட்டுப் பயன் என்ன இருக்கின்றது?
எதற்காக வேண்டி இதைக் கேட்கின்றோமோ அந்த ஞானத்தைப் பெறவேண்டும்.
எனக்குக் கூட்டம் தேவையில்லை.
அருள் ஞானம் பெறும் அருள்ஞானிகளின் அமைப்பு தான் எனக்குத் தேவை. அந்த அருள் ஞானத்தை
வளர்ப்போர் தான் தேவை.
என்னைப் போற்றித் துதிப்போர்
தேவையில்லை. என்னைப் போற்றிப் புகழ்வதில் பயனில்லை. ஆனால், அந்தப் போற்றல் எவ்வாறு
இருக்க வேண்டும்?
அந்த அருள் மகரிஷிகளின் அருள்ஞானத்தை
நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டி அந்த உணர்வின் தன்மையால் உலகம் போற்றும் உத்தமர்களாக நீங்கள்
வளர வேண்டும். அதுதான் என்னைப் போற்றுவதாகும்.
இல்லை என்றால் என்னைத் தூற்றுவதாகத்தான்
ஆகுமே தவிர நமது குருநாதரையும் தூற்றுவதாகத்தான் வருமே தவிர இதில் பயனில்லை.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து
விடுபடும் அருள் சக்திகளை கணவன் மனைவி இரு பாலர்களும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
கணவன் மனைவிக்குள் நீங்கள்
ஒன்றி வாழும் நிலைகள் பெற்று குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை எப்படி மாற்றிட
வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வாருங்கள்.
அதிகாலையில் துருவ நட்சத்திரத்திலிருந்து
வரும் பேரருள் பேரொளியினைப் பெறவேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில்
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அலைகளை எளிதில் கவர முடியும்.
யாம் உங்களுக்குள் பதிவு செய்த
எண்ணம் கொண்டு அதை நுகர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர
வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.
கணவன் மனைவி ஒருவருக்கொருவர்
அந்தச் சக்தி பெறவேண்டும் என்று தியானியுங்கள். இருவரும் ஒன்று சேர்த்து இவ்வாறு எண்ணினால்
உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கல்களிலிருந்து விடுபடும் உபாயங்கள் அங்கே தோன்றும்.
இதனின் துணை கொண்டு நீங்கள்
வாழ்ந்து வந்தால் இன்று இந்த நஞ்சு கலந்த உலக உணர்வுகளிலிருந்து மீட்டிடும் நிலைகள்
உங்களுக்குக் கிடைக்கும்.
ஏனென்றால், உலகம் எங்கேயோ
போய்க் கொண்டுள்ளது. மனித உருவையே மாற்றிடும் அளவிற்கு இந்தக் காற்று மண்டலம் நச்சுத்
தன்மையாக மாறி எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றது.
இதிலிருந்து மீள வேண்டும்
அல்லவா.
அன்று அகஸ்தியன் தன் உணர்வு
கொண்டு துருவ நட்சத்திரமானான். அவன் வழியைப் பின்பற்றியவர்கள் அவனுடைய அரவணைப்பில்
விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.
கணவன் மனைவி நாம் அவர்களுடன்
ஒன்றி வாழும் நிலைக்கு வளர வேண்டும். என்றும் பேரானந்த பெரு நிலை என்று வாழ்ந்திடல்
வேண்டும்.