ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2016

ஜல்லிக்கட்டுக் காளையிடம் குருநாதர் கொடுத்த அனுபவம்

ஒரு சமயம் குருநாதர் என்னை வயல் காட்டிற்குள் கூட்டிக் கொண்டு செல்கின்றார்.

எங்கெயோ ஜல்லிக்கட்டு நடத்தியிருக்கின்றார்கள் போலிருக்கின்றது. அந்தப் பக்கமாக ஓடி வருகின்றது ஒரு மாடு.

இது வந்தவுடன் “அதைப் பிடிடா..,” என்றார் குருநாதர். அதற்குக் “குசும்பைப் பாருடா..,” என்கிறார்.

“சாமி.., அது நம்மைத் தூக்கி வீசிவிடும்..,” என்றேன் நான்.

அது என்னைத் துரத்த ஆரம்பித்தது. நான் ஓட ஆரம்பித்துவிட்டேன். என்னை விடமாட்டேன் என்கிறது, துரத்திக் கொண்டே வருகின்றது அந்தக் காளை.

வந்தவுடன் நான் இப்படி அப்படி என்று என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை.

அது ஓடி வந்து என்னை விரட்டுவதைப் பார்த்தால் “புஷ்.., புஷ்..,” என்று வருகின்றது. எங்கேயோ ஜல்லிக்கட்டு விட்டிருக்கின்றார்கள். அது இங்கே தப்பி வந்திருக்கின்றது.

என்னை இப்படியெல்லம் விரட்டுகின்றது.

ஒரு கினற்றுக்குள் “ஜங்…,” என்று குதித்துவிட்டேன். இதை விட்டால் வேறு வழியில்லை.

கினற்றுக்குள் குதித்தவுடன் குருநாதர் என்ன செய்தார்?

“ஏய்.., இங்கே வா..,” என்கிறார்.

யாரை?

அந்த மாட்டைக் கூப்பிடுகின்றார். “இங்கே நில்..,” என்கிறார். அவன் வெளியில் வருவான் “பிடித்துக் கொள்..,” என்கிறார்.

எனக்கு “எப்படி இருக்கும்” என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எல்லாச் சக்திகளையும் கொடுத்தார். நான் அவர்களுக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று பல பேர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

குருநாதர் என்னைப் பல வகையிலும் சிரமப்படுத்தித்தான் பல அனுபவங்களை நேரடியாகக் கொடுத்தார்.

அதில் தீமை எப்படி வருகின்றது? பயம் எப்படி வருகின்றது? அந்த உணர்வுகள் எல்லாம் உன் உடலுக்குள் சென்றால் உனக்குள் என்ன நடக்கின்றது? அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகள் எப்படி உனக்கு வருகின்றது?

அப்பொழுது தப்பிக்க வேண்டும் என்றால் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?

பயத்தால் உன் உடலுக்குள் சென்ற அந்தத் தீமையான உணர்வுகள் உன் உடலுக்குள் விளையாது அதை எப்படிச் செயலிழக்க வைக்க வேண்டும்? என்று பல உண்மைகளை எனக்குள் நடத்திக் காட்டினார்.

துருவ மகரிஷிகளின் உணர்வை நீ பருகினால் உனக்குள் அறியாது சேர்ந்த அந்தத் தீய உணர்வுகள் செயலிழக்கும் என்று அதை நீ எப்படிக் கவர வேண்டும் என்ற மார்க்கத்தைக் காட்டினார்.

அப்படி எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தத் தீமையை வென்ற உணர்வுகளைத்தான் உபதேச வாயிலாகத் உங்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

ஆகவே, உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகள் வருகின்றதோ அந்த நேரத்தில் யாம் பதிவாக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து அதைச் சுவாசித்தால் உங்களை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்கே குருநாதர் எனக்குக் கொடுத்த அந்த அனுபவங்களைச் சொல்லி வருகின்றோம்.