நீங்கள் உயர்ந்து வாழ்ந்திட
தவமிருக்கின்றேன். எனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லை.
சதா துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் நீங்கள் பெறவேண்டும்
என்ற அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.
விஞ்ஞான அறிவால் எந்தெந்த
வகையில் தீமைகள் விளைகின்றது? அதிலிருந்து உலக மக்களை எவ்வாறு காத்திட வேண்டும் என்ற
உணர்வினைச் செலுத்தி அந்த ஆற்றல்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
அனைவருக்கும் இந்தச் சக்திகள்
கிடைக்க வேண்டும் என்று சதா எண்ணுவதே என்னுடைய தவமாகும்.
தியானம் செய்யும் நீங்களும்
இதைப் போன்று உலக மக்கள் நலம் பெறத் தியானியுங்கள். உலக மக்கள் நலம் பெறத் தவமிருங்கள்.
அந்தப் பண்படும் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துப் பழக வேண்டும்.
அப்படிச் செய்தால்தான் விஞ்ஞான
அறிவால் இனி வரும் பேரழிவிலிருந்து நம்மைக் காத்து மக்களையும் காக்க முடியும்.
தனக்குள் மோதுவதைச் சூரியன்
தன் அரவணைப்புடன் தான் கவர்ந்து நஞ்சினைப் பிளந்து ஒளியின் சுடராக இந்த உலகத்தை இந்தப்
பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.
இதைப் போல நமது குருநாதர்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நம் அனைவரது உணர்வுகளையும் ஏற்று அந்த நஞ்சினைப் பிளந்து
நஞ்சினைப் பிளந்திடும் உணர்வலைகளைப் பரப்பிக் கொண்டுள்ளார்.
நாமெல்லாம் அருள் ஒளியின்
சுடராகப் பெற்று பேரொளியாக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. குருநாதரின் அருளை அனைவரும்
பெறும் தகுதியை இந்த உபதேசத்தின் மூலமாக ஏற்படுத்துகின்றோம்.
அனைவரும் குரு அருளைப் பெற்று
அவரின் துணை கொண்டு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட எனது
ஆசியும் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள்
அனைவரும் மகிழ்ந்து வாழ்வதைக் காண வேண்டும். அதில் பேரானந்த நிலைகளைப் பெறவேண்டும்
என்று தான் குருநாதர் எமக்குச் சொன்னார்.
ஆகவே, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின்
அருள் துணை கொண்டு உலக ஞானம் பெற்று இனி வரும் காலங்களை மகிழ்ச்சி பெறும் நிலையாக மாற்றுவோம்.
மெய்ஞானம் பெறுவோம். மெய்
உலகைப் படைப்போம், என்றும் பதினாறு என்ற நிலையில் விண்ணிலே என்றுமே ஒளியாக வாழ்வோம்.