ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2016

களிமண்ணால் செய்த விநாயகரை வருடந்தோறும் கடலிலே கரைக்கின்றோம் ஏன்?

விநாயகர் சதுர்த்தி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உட் பொருள் என்ன என்று பார்ப்போம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த உணர்வினை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வருகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணத்தால் பதிவு செய்திருந்தால் இந்த நினைவு கொண்டு காலை சூரிய உதய நேரத்தில் அதை எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவையும் ஜீவான்மாவையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்

பின் நம் வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். தொழில் செய்யும் இடங்களில் எங்களுடன் பணி புரிவோர் எங்கள் வாடிக்கையாளர்கள் அனவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்கள் உடல் நலம் பெறவேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும் என்று சூரிய உதய நேரத்தில் நாம் அனைவரும் இந்தச் சக்தியைக் கவர்தல் வேண்டும்.

எல்லோரும் சேர்ந்து இவ்வாறு கவர்ந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் இணைந்து நமக்குள் நம்மையறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் பகைமை உணர்வுகள் அனைத்தையும் செயலற்றதாக்கி விடுகின்றது.

இந்தப் பரமான பூமியில் பரவிக் கொண்டிருக்கும் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை நமக்குள் இந்த ஆற்றல்மிக்க சக்தி இணைந்து கொண்ட பின் விலகிச் செல்லச் செய்துவிடுகின்றது.

எப்படி வேப்ப இலையின் சத்தை அந்த மணத்தைக் கண்டபின் ரோஜாப்பூவின் மணங்கள் நகர்ந்து ஓடுகின்றதோ, ரோஜாப்பூவின் நறுமணத்தைக் கண்டபின் பிற தீமைகள் நகர்ந்து ஓடுகின்றதோ இதைப் போன்றுதான் தீமையான உணர்வுகளை விலகச் செய்தல் வேண்டும்.

நம் வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் இந்த நிலைகள் பெறவேண்டும் என்று இந்தப் பகைமை உணர்வை சதுர்த்தி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நாம அனைவரும் ஈர்க்க மறுக்கும் அந்தத் தீமைகளை விளையவைக்கும் உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்வதில்லை.

அதே சமயம் சூரியனின் காந்தப் புலனறிவு வெளிவரும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் தீமை செய்யும் உணர்வுகள் சிக்கி, தாவர இனங்கள் வளரும் நிலைகளுக்கு அப்பால் அது சென்றுவிடுகின்றது.

பின், பூமியின் மைய வட்டத்திற்குத் தரை மார்க்கத்திற்கு வருவதில்லை. அவ்வாறு அது அலைகளாகச் செல்லும் பொழுது கடலின் ஈர்ப்பலைக்குள் சிக்கிவிடும்.

அதிலுள்ள ஹைட்ரஜன் அந்த வலுக் கொண்ட உணர்வின் அலைகள் கொண்டது, ஹைட்ரஜன் என்றால் தீமைகளை விளைய வைக்கும் உணர்வின் சத்து கொண்டது.

அதற்குள் உள்ள காந்தப் புலனறிவு அது தன் இனத்தை அதாவது நாம் அனைவரும் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான அலைகளை அது கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்திவிடுகின்றது.

அதனால், இந்தப் பரமான பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்களும் அது பரிசுத்த அணுக்களை விளையவைக்கும் தன்மை உருவாகின்றது.

நம் வாழ்க்கையில் ஒரு வருடம் முழுவதும் நாம் பிறருடைய குறைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் அதை நம் உடலிலிருந்து கரைத்திடல் வேண்டும்.

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் உருவத்தை உருவாக்கி தான் வளர்ந்த நிலையை நினைவில் கொண்டு தீமைகளைக் கரைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சாஸ்திரங்களில் இது உண்மை.

எப்படிக் களிமண்ணில் செய்து நாம் கடலில் கொண்டு கரைக்கின்றோமோ இதே போல மனிதனின் உடலில் விளைந்த இந்தத் தீமைகளைக் கரைத்திடல் வேண்டும்.


வருடந்தோறும் விநாயகரைக் களிமண்ணால் செய்து அதைக் கடலிலே கரைக்கும் நிலையைக் காட்டியதன் உட்பொருளே நாம் அனைவரும் அருள் மகரிஷிகளின் உணர்வைத் நமக்குள் சேர்த்து தீமையை விளைய வைக்கும் உணர்வலைகளை ஒட்டு மொத்தமாகக் கடலிலே இறக்கி அதைக் கரைத்துவிட வேண்டும் என்பதைத்தான் சொன்னார்கள் ஞானிகள்.