மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின்
அருள் சக்திகளை நாம் பெற்று, அவர் வழியைப் பின்பற்றி பேரானந்தப் பெருநிலையை நாமும்
பெறுவோம்.
அவரின் அருளை நாம் பெறவேண்டும்
என்றால் நாம் பார்ப்போரெல்லாம் பேரானந்தப் பெருநிலை பெற வைக்க வேண்டும். அவர்கள் பேரானந்தப்
பெருநிலை பெறும் உணர்வலைகள் வருவதை நாம் நுகர வேண்டும்.
நமக்குள் பேரானந்தத்தை வளர்த்திட
வேண்டும்.
ஒரு நெல் பயிரை நாம் விளைய
வைத்து அதை நாமும் உட்கொண்டு மகிழ்கின்றோம். அதே சமயத்தில் இதை மற்றவரும் உட்கொண்டு
மகிழ்ந்திட வேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் நாம் அந்தப் பயிர்களை
விளையச் செய்வோம்.
ஆக, “யாரும் இதை வாங்கக் கூடாது..,
உட்கொள்ளக் கூடாது..,” என்ற எண்ணத்தில் விளைய வைப்பதில்லை. இதைப் போல குரு அருளை வளர்ப்போம்.
மற்றவர்களையும் நாம் பெறச் செய்வோம்.
ஏனென்றால், ஈஸ்வரபட்டாய குருதேவர்
நமக்கு “எவ்வளவு பெரிய.., பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார்..,” என்று எண்ணுங்கள்.
குறைகளை அகற்றுங்கள். மெய்ப்பொருளைக்
காணும் உணர்வை உயர்த்துங்கள். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று ஏங்குங்கள். அதையே தவமாக்குங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று தியானியுங்கள். தியானம் என்பது முதலில் அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் வளர்த்துப்
பழகுவது.
ஒரு பாத்திரத்தில் நாம் பல
பொருள்களைப் போட்டுச் சமைக்கின்றோம் என்றால் அதில் சமைத்த பொருள்களுக்கொப்பத்தான் வாசனை
வரும்.
எல்லாப் பொருள்களையும் நாம்
போட்டுச் சமைத்தபின் “சிறிதளவு.., உப்பைப் போட்டுப் பார்க்கலாமே..!” என்று தன் இஷ்டத்திற்குச்
சேர்த்தால் என்ன ஆகும்?
சமைத்த அந்த உணவைச் சாப்பிடுபவர்கள்
அனைவரும் “உப்பு அதிகமாகிவிட்டது..,” என்று தான் சொல்வார்கள். இதைப் போன்று நாம் சமைக்கும்
உணர்வின் சுவையே அதைக் கேட்போரின் நிலைகள் மனம் மகிழும்.
ஆக, நமக்குள் அருள் ஞானியின்
உணர்வுகளைத் தியானத்தால் எடுத்து அனைவரும் பெறவேண்டும் என்று ஏங்கி அனைவருக்கும் அதைக்
கிடைக்கச் செய்யவேண்டும்.
அதைத்தான், “மகரிஷிகளின் அருள்
சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெறவேண்டும்
என்று தவமிருப்போம்”.
எல்லா ஆலயங்களுக்கும் சென்று
அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தியானிப்போம். இந்த ஆலயத்திற்குள்
வரும் ஒவ்வொருவரும் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தவமிருப்போம்.
அங்கே வைத்திருக்கும் கனியைப்
போன்று மலரைப் போன்று பாலைப் போன்று பன்னீரைப் போன்று சந்தனத்தைப் போன்று அந்த நறுமணங்கள்
அனைத்தும் நாங்கள் பெறவேண்டும்.
இந்த ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும்
அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று இதை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
மலரைப் போன்ற மணமும் மகரிஷிகளின்
அருள் சக்தியும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் நாங்கள் பெற வேண்டும். இந்தக்
கோவிலுக்கு வரும் அனைவரும் அந்த நிலை பெறவேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.
அதற்குப் பதில் கோவிலுக்குள்
போய் “நான் தவமிருந்து.., இந்தத் தெய்வத்தைப் பெறப் போகின்றேன்..,” என்றால் இது தவமில்லை.
ஆக, இந்த உடலான கோவிலுக்குள்
இந்த அருள் ஞானங்கள் அனைவருடைய அன்பையும் நீங்கள் பெருக்க வேண்டும். அனைவரும் மகிழ்ந்திட
வேண்டும் என்று இங்கே கூட்டிட வேண்டும். இதுதான் கோவில்.
நம் உடலே கோவில். இதைத்தான்
திருமூலர், “ஊன் உடம்பு.., ஆலயமடா..,” என்று பாடினார்.
நாம் அவர் சொன்ன நிலைகளை
“சிறிதளவாவது உணர்ந்திருக்கின்றோமா..,” சற்று சிந்தித்துப் பாருங்கள்.