ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2016

மற்றவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ்வதைப் பார்த்து நாமும் ஆசைப்படுகின்றோம்... அழியாச் சொத்து எது?

டயானா, தான் வாழ்ந்த காலத்தில் ஆடைகளை எவ்வளவோ செலவழித்து வாங்கும் அளவிற்குச் செல்வம் இருந்தது. செல்வாக்கும் தன்னிடம் இருந்தது.

அன்று இறந்த டயானாவின் ஆடைகளை எத்தனையோ கோடி விலைக்கு ஏலத்தில் விற்கிறார்கள். ஆக, மற்றவர்களுக்கும் பல கோடிப் பணம் கொடுத்து அந்த ஆடையை வாங்க வேண்டும் என்ற ஆசையை அது ஊட்டுகின்றது.

அந்த ஆசையைத்தான் முதலிலே (டயானா) அது வளர்த்தது. ஆனால், “வாழ வேண்டும்..,” என்று எண்ணிய அவளுக்கு அங்கே “நொடிக்குள் மரணம் சம்பவித்தது”.

அதையும் நாம் நுகர்கின்றோம், அறிகின்றோம். “இருந்தாலும்.., ஆசை நம்மை விட்டபாடில்லை.

“அவர் வளர்த்துக் கொண்ட ஆசையை” நமக்குள் பதித்துக் கொண்டபின் “ஏன்.., நாமும் அவரைப் போல் வரக்கூடாது..,” என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதே வழியில், “மெய்ஞானிகள்.., பிறவியில்லா நிலை அடைந்தனரே..,” அதை நாம் பெறலாம்.

நாம் ஏன் அந்தப் “பிறவியில்லா நிலை அடைய முடியாதா..,?” என்று அவர்கள் வழி சென்று அருள் மகரிஷிகளின் உணர்வை வளர்த்தால் நாம் அதைப் பெறுகின்றோம்.

இல்லை என்றால் மீண்டும் இழிநிலை சரீரத்தைப் பெறுகின்றோம். பேய் மனம் கொண்டு மற்றொர்களைத் தாக்கிடும் நிலை உருவாகும்போது பேய் மனம் கொண்டு ஒன்றைத் தாக்கி அதை உணவாக ரசித்திடும் நிலைதான் வரும்.

இன்றைய உலகில் மனிதனுக்குள் அந்தப் “பேய் மனம்..,” தோன்றிவிட்டது அசுர உணர்வுகள் வளர்ந்து விட்டது.

மற்றவர்களைத் துன்புறுத்துவது, சித்திரவதை செய்வது, கொலை செய்வது, இதையெல்லாம் செய்து ரசிக்கும் தன்மைதான் வருகின்றதே தவிர மற்றவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மறைந்துவிட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும்?

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக உணர்த்திய மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு அந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

மெய்ப்பொருள் காணும் அருள் நெறி எனக்குள் வளர வேண்டும் என்று ஒவ்வொருவரும் உங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறத் தயங்காதீர்கள்.

இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் மற்றவர்களுடைய நிலைகளை எண்ணாதீர்கள்.

ஏனென்றால், “என்னைத் தவறாக நினைக்கின்றார்கள்.., கேவலமாகப் பேசுகின்றார்கள்..,” என்று அவர்களுடைய உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அதன்வழி தான் நமக்குள் வரும்.

நாம் பார்க்கும் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வினை ஊட்டுங்கள். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வின் வலுவினை உங்களுக்குள் பெறுங்கள்.

நம் உடலே நமக்குச் சொந்தமில்லை. நாம் சேமித்த எந்தச் சொத்தும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், நம் உயிரான்மாவிற்குச் சேர்க்கும் மகரிஷிகளின் அருள் சக்தி ஒன்றுதான் என்றுமே அழியாத சொத்து.

அந்தக் கணக்கினைக் கூட்டினால் என்றுமே நாம் நிலைத்திருக்க முடியும். பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையை அடையலாம்.