ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2013

துன்பங்களையும், இன்னல்களையும், வேகவைத்து ஆற்றலாக மாற்றுங்கள் - ஞானகுரு

1. கருணைக் கிழங்கை வேக வைப்பது போன்று, துன்பங்களை வேக வைக்க வேண்டும்
நாம் இன்று வாழும் நிலைகளில், இந்த வாழ்க்கையே பிரதானம் என்று ஒவ்வொரு நிமிடத்திலும், சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பல இன்னல்களிலிருந்து நாம் மீள்வதற்கு யாம் ஏற்படுத்தும் சந்தர்ப்பம் தான், இந்த உபதேசமே.

ஆக அந்த வியாசனைப் போன்று, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று நாம் அனவரும் ஏங்கி,
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற்று,
இந்த ஆற்றல்மிக்க உணர்வின் அலைகள் கொண்டு
விண்ணின் ஆற்றலை நமக்குள் செலுத்தி,
மனித வாழ்க்கையை இருளச் செய்து கொண்டிருக்கும்
அந்த இருளான சூழ்நிலையை, உணர்வின் சக்தியை மாற்றுவோம்.
நாம் கருணைக் கிழங்கை வேக வைத்து, அதிலுள்ள விஷத்தை நீக்கி, சத்துள்ள ஆகாரமாக நமக்குள் மாற்றிக் கொள்கின்றோம். இதைப் போன்று, மனித வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகையை துன்பங்கள் வந்தாலும், நேர்ந்தாலும், அதை நாம் இந்தத் தியானத்தின் வழிகொண்டு நீக்க முடியும்.

மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்று, நம் வாழ்க்கையிலே ஏற்படுத்தும் பல இன்னல்கள் இருந்தாலும், கருணைக் கிழங்கை வேக வைத்தது போன்று, நமக்குள் துன்புறுத்திக் கொண்டிருக்கும் இந்த உணர்வின் ஆற்றலை, செயலிழக்கச் செய்ய வேண்டும்.

அப்பொழுது, கருணைக் கிழங்கைப் போன்று, நமக்குள் ஆற்றல்மிக்க வலுவான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் நிலையாகின்றது.

சூரியன் தன் ஆற்றலால், விஷத்துடன் மோதி எப்படி ஒளிக்கதிரானதோ, இதே போன்று நம் உடலுக்குள் உணர்வின் ஆற்றல்களை ஒளியாக மாற்றி, நாம் விண் செல்ல முடியும்.
 2. ஈஸ்வராய குருதேவர் எமக்கு மெய்ஞானிகளின் ஆற்றலைப் பெறச் செய்த முறை  
அந்த விண் செல்லும் மார்க்கத்தின் உணர்வின் சத்தை, மெய்ஞானிகள் எவ்வாறு பெற்றார்களோ, அந்த ஆற்றல்மிக்க சக்தியை நமது குருநாதர் எமக்குள் பதித்து, அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெறும் மார்க்கத்தைக் காட்டினார். அதன் வழி அதை யாம் பெற்று, அந்த உணர்வின் அலையை யாம் உணர முடிந்தது.

அந்த உணர்ந்த நிலைகள்,
சுவாசித்த அந்த உணர்வின் அலையை
மீண்டும் அதை யாம் எடுக்கும் பொழுது
அந்த உணர்வின் அலையே
“யாம் இப்பொழுது பேசும் அலைகள்”.

அதை நீங்கள் எந்த அளவிற்கு செவி கொண்டு கவனித்து, இந்த உணர்வின் அலைகளை நீங்கள் உணர்கின்றீர்களோ, இந்த உணர்வின் ஆற்றல்மிக்க சக்திகள் உங்கள் உடலிலே பதிவாகின்றது.

நமது குருநாதர், அந்த ஆற்றல்மிக்க மெய்ஞானியின் அருள் சக்தியை யாம் பெறுவதற்கு அதற்கு முன் சந்தர்ப்பத்தை நிகழ்த்தி, அதற்குண்டான ஆர்வத் துடிப்பை ஏற்படுத்தினார்.

அந்த ஆர்வத் துடிப்பிற்குள்,
அந்த உணர்வின் ஆற்றலை எமக்குள் செலுத்தி,
அந்த ஆற்றல்மிக்க சக்தியை,
மெய்ஞானியின் அருள் சக்தியை யாம் பெறுவதற்கு
பல சம்பவங்களை நிகழ்த்தினார்.
எமக்குச் சிரமத்தை ஏற்படுத்தி
அதைக் கொடுத்தார்.
3. இன்னலையும், துன்பத்தையும் நீக்கும் சக்திகளை நீங்கள் பெற யாம் காட்டும் வழி
ஆனால், இதே போன்று உங்கள் வாழ்க்கையிலே எப்பொழுதெல்லாம் உங்களுக்குச் சிரமங்கள் தோன்றுகின்றதோ, சந்தர்ப்பம் உங்களுக்குள்
இன்னலையும், மன பயத்தையும்,
கோபத்தையும், ஆத்திரத்தையும்,
விரக்தியையும், தோற்றுவிக்கின்றதோ,
இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலே நாம் இந்த தியானம் எடுத்துக் கொண்டவர்கள் ஆத்ம சுத்தி என்ற ஆயுததைப் பயன்படுத்துங்கள்

நாம் கருணைக் கிழங்கை வேகவைத்து, எப்படி நமக்குள் சத்தாகச் சேர்த்துக் கொண்டோமோ, அதே போன்று மெய்ஞானியின் அருள் சக்தியை உங்களுக்குள் சேர்த்து, உங்களுக்குள் துன்பத்தை விளையவைக்கும் இந்த உணர்வின் செயலை அடக்குங்கள்.

ஆக, துன்பங்களை விளையவைக்கக்கூடிய உணர்வின் ஆற்றல் நம் உடலுக்குள் சென்று, உடலிலே வியாதியும், எண்ணத்திலே பல கலக்கமும், மனவேதனையும், மனக்குடைச்சலும், ஏற்படுத்தும்
அந்த உணர்வின் ஆற்றலை,
அது நம்மை ஆட்டிப்படைக்காதபடி
அதை ஆற்றல் மிக்க சக்தியாக மாற்றுங்கள்.
                      
கருணைக் கிழங்கைச் சாப்பிட்டபின்,
எப்படி ஆரோக்கிய நிலைகள் பெறுகின்றோமோ, அதே போன்று,
எத்தகையை துன்பங்கள் நமக்குள் வந்தாலும்,
அந்தத் துன்ப உணர்ச்சிகளை நமக்குள் தூண்டாவண்ணம்
அது நமக்குள் அடங்கி, இன்பத்தின் சொல்லாலும்,
இன்பத்தின் உணர்வுகளை நமக்குள் தூண்டி

விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய “தகுதியை ஏற்படுத்தும் ஆற்றல்களை", நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.