ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2013

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ, அந்த வாசனைதான் நம் உயிராத்மாவைச் சுழன்று நிற்கும்

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் இன்று மாமிசமோ, மற்ற அதைப் போன்ற எந்த ஆகாரத்தை அதிகமாக நாம் புசிக்கின்றோமோ, கடைசி நிலைகளிலே எண்ணும் பொழுது,  நம் எண்ணத்தில் அவைதான் வரும்.

முட்டையை அதிகமாகச் சாப்பிட்டிருந்தால், அந்த நேரத்திலும் சிறிது முட்டையைத் தொட்டு நாக்கில் வைத்தால்தான், அந்த ஜீவன் போகும். ஆக, அந்தக் கடைசி சேரத்திலே,
எந்த உணர்வின் மணம் அதில் கொண்டாடுகின்றதோ,
எந்த மாமிசத்தை,
எதை எதை அதிகமாகப் புசித்தார்களோ,
அந்த மணம் கடைசியிலே வரும்.
அந்த உணர்வின் எண்ணங்கள்தான் தோன்றும்.
அவ்வாறு தோன்றிவிட்டால், கடைசியில், அந்த உயிராத்மாவை இந்த மணம்தான் சுழன்று நிற்கும்.
இந்த உடலை விட்டுச் சென்றபின், நாம் எந்த எண்ணத்தை எண்ணினோமோ, அந்த மணம் உயிராத்மாவிலே வளரப்படும் பொழுது, உயிர் அதற்கொத்த சரீரத்திலே போய் நம்மைச் சேர்ந்துவிடும். கோழி முட்டையைச் சாப்பிட்டோம் என்றால், கோழியினுடைய வாசனை வந்து, அங்கே போய்ச் சேர்வோம்.

கோழி முட்டையை, நிறையச் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்க்ள் சிபாரிசு செய்வார்கள். விஞ்ஞான அறிவு கொண்டு, மனிதன் வாழ்வதற்கு இன்றைக்கு நேரடியாகவே மிருகங்களின் வலு கிடைக்க வேண்டுமென்பதற்காக, அதனுடைய தசைகளையும், சத்துக்களையும் நமக்குள் கொடுத்து, மனிதனைப் பிழைக்கச் செய்வார்கள்.

இந்த மனித உடலிலே நாம் வாழலாம். ஆனால், இந்த உணர்வின் சத்து நமக்குள் சென்றபின், இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்தபின், இந்த உடலைவிட்டுச் சென்றபின், நாம் எங்கே போகிறோம்? என்றுதான் தெரியாது.

இதைப் போன்று, நம் வாழ்க்கையில் வரக்கூடிய, நம்மை அறியாமல் செயல்படும் இந்த நிலைகளிலிருந்து, நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும். அதற்காக, மெய்ஞானிகள் எத்தனையோ வகைகளைச் சொல்லி இருக்கின்றார்கள்.

ஆகவே, அந்த மெய்ஞானிகள் சொன்ன அந்த மீட்டிடும் வழிகளைத்தான் யாம் உபதேசித்து, அதைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை, இப்பொழுது உங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

யாம் சொல்லும் இந்த தியானத்தைக் கடைப்பிடித்து,
உங்கள் உடல்களிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கூட்டிக் கொண்டு,
அதன்பின், இந்தக் காற்றிலே மிதந்து கொண்டிருக்கக்கூடிய
ஞானிகளின் உணர்வை நீங்கள் சுவாசிப்பதற்கு
யாம் பழகிக் கொடுக்கின்றோம்.

ஆக, இந்த அருள்ஞானிகளின் மணங்களைச் சுவாசித்தால் நம் உயிராத்மாவில் அருள் மணமே வரும். இதை வளர்க்கக்கூடிய சந்தர்ப்பம் மனிதனுக்குத்தான் உண்டு. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.