ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2025

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை


மரத்திற்கு வேண்டிய உரத்தைப் போடுகின்றோம். அதை ஏற்றுக் கொண்டு நல்ல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது.
 
அதே சமயத்தில் சில நச்சுத்தன்மைகள் அந்த மரத்தினுடைய வேரிலே பட்டு அது ஊடுருவி விட்டால் அந்த விழுதிலே நஞ்சு கலந்து மரம் கெட்டு விடுகிறது.
 
இதைப் போல
1.நம்மை அறியாமல் இருளான உணர்வுகளைச் சுவாசிக்க நேரும் பொழுது
2.அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இட்ட அந்த உணர்வின் சத்தான நிலைகள் உண்டு.
3.அந்தச் சத்தைத்தான் உங்கள் உணர்வுகளுக்குள் ஏற்றிக் கொடுக்கின்றோம்.
 
உங்கள் வாழ்க்கையில் எது எல்லாம் உங்களுக்குள் தேய்மானம் ஆகிச் சிந்திக்க முடியாமல் இருந்ததோ சிந்தித்துச் செயல்பட முடியாமல் இருந்ததோ
1.அதை மாற்றியமைக்க மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை
2.செவிப்புலன் கொண்டு கேட்கச் செய்கின்றோம்.
 
எனக்கு என் குருநாதர் எப்படி உண்மைகளைக் காட்டினாரோ தைப் போன்று தான் உங்களுக்கும் சொல்கிறோம்.
 
எந்தெந்த நல்ல மனதுடன் எல்லோருக்கும் நன்மைகளைச் செய்தீர்களோ பிறருடைய துன்பத்தை இழுத்து உங்கள் நல்ல குணத்தைச் செயல்பட முடியாதபடி உங்கள் உடலுக்குள் தொல்லையும் துன்பமும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததோ
1.அந்தத் துன்பத்தை நீக்க நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி உங்களை இந்த அருள் உணர்வைக் கேட்கும்படி செய்து
2.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற உணர்ச்சியின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.அந்த உணர்வாலே சுழன்று கொண்டிருந்த விஷத்தின் தன்மை நீங்கி
4.மெய் ஒளியின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து நீங்கள் இழுத்துச் சுவாசித்து
5.அந்தச் சத்தான நிலைகள் பெற்று உயிரின் நிலைகள் ஒளியாக மாற்றி
6.குருநாதர் எப்படி ஒளியின் சரீரமாகச் சென்று விஷம் தனக்குள் எதுவும் அணுகாத நிலை பெற்றாரோ
7.எனக்கு குருநாதர் காட்டிய அந்த நிலையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.
 
காரணம் நமக்குள் எதைப் பதிவு செய்து கொள்கின்றோமோ நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். ஆனால் நாம் அறியாதபடி அந்த உணர்வுக்குள் விஷம் பட்டு விஷத்திலிருந்து எழ முடியாத நிலைகள் வந்து விடுகின்றது.
 
அந்த விஷத்தை நீக்கும் ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆவலில் தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.
 
அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்வதற்குத் தியானத்தின் முறையை குருநாதர் எனக்கு எப்படி வழி காட்டினாரோ அதே வழியில் நீங்களும் தியானத்தைச் செய்து கொண்டால் இந்த காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும்.
 
மரத்திற்கு உரமான சத்தைக் காட்டிய பின் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றில் மறைந்திருக்கும் தன் சத்தினை எடுத்துத் தான் எப்படி வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றே
1.உங்கள் நல்ல உணர்வின் தன்மையைக் காக்க மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை நீங்கள் சுவாசித்து
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காத்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் மூச்சுக்குள் உடலுக்குள் நலமும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும் நிலையும் ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெறும் நிலையும்
4.இந்த உடலிலிருந்தே உயிரின் தன்மை உணர்வுகள் ஒளியாக மாறி
5.என்றும் பதினாறு என்ற ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை நீங்களும் பெற முடியும்.
 
அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு விண் சென்றார்களோ அதே போன்று நீங்களும் அந்த மெய் ஒளியின் சுடரின் நிலைகள் கொண்டு அந்த மெய் வழியில் செல்லக்கூடிய தகுதியைப் பெறுவீர்கள்.
 
குருநாதர் காட்டிய வழியில் தான் யாம் உங்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.