ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2022

நோய் உருவாகாதபடி நாம் விழித்திருக்க வேண்டியதன் அவசியம்

 

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி நாம் வேதனைப்படும் உணர்வுகளை எடுப்போம் என்றால்
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகளில் அது சுரக்கும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
2.வேதனை உணர்வுகள் உறையப்பட்டு அது மோதப்பட்டு அதனின் உணர்வுகள் கற்களாக உருபெறுகிறது.

அவ்வாறு உருப்பெற்று விட்டால் இந்தப் பித்தத்தையே விஷம் கொண்ட கற்களாக அது மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்று சிறுநீர்ப் பைகளிலும்... இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னியில் மணலைப் போன்று அது தேங்கி விட்டால் அந்த விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து விஷத்தையே தனக்குள் எடுத்து இரத்தத்தில் வரும் மாசுகளைச் சுத்திகரிக்கும் தன்மை இழந்துவிடுகிறது

கிட்னி பழுதடைந்து விடுகின்றது. அதனின் உணர்வின் தன்மை உடல் முழுவதும் தீமையை உருவாக்கும் நிலையாக உருவாகி விடுகின்றது.

பின் உடல் முழுவதும் விஷத் தன்மைகள் பரவி அடுத்து மாற்று உறுப்புகளை மாற்றித்தான் விஞ்ஞான அறிவு கொண்டு வாழ வேண்டி உள்ளது. அப்படிச் செயல்பட்டாலும் அதிலிருந்து முழுமையாக மீள்வது என்பது மிகவும் கடினமாகி விடுகிறது.

இதைப் போன்றுதான் நாம் சுத்திகரிக்கும் உறுப்பான கல்லீரல் போன்ற உறுப்புகளில் விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகரித்து விட்டால் அங்கே உணர்வின் தன்மை வளர்ச்சி பெறப்படும் போது அதுவும் பாழடைகிறது.

ஏனென்றால்...
1.சில கடுமையான நிலைகளை உருமாற்றும் அல்லது கரைத்திடும் திறன் கொண்ட
2.அமிலத்தை உருவாக்கும் திறனை நம் கல்லீரல் இழந்து விட்டால்
3.மற்ற கடின பொருள்களைக் கரைக்கச் செய்யும் தன்மையும் அது செயல் இழந்துவிடுகிறது.

இதைப் போன்று வாழ்க்கையில் நாம் எடுக்கும் விஷத் தன்மையான உணர்வுகளால் நஞ்சான அணுக்கள் விளையத் தொடங்கி விட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாழடையும் தன்மையே அடைகிறது.

இயற்கையிலே ஒவ்வொரு இனப் பறவைகளும் தன் தன் குஞ்சுகளுக்கு என்று அது உணவைத் தேடிச் சென்று அதை வாயிலே ஊட்டுகின்றது.

எப்போது...?

அந்தக் குஞ்சுகள் இரைக்காக ஏங்கி இருக்கும் பொழுது அதனதன் இனம் அதனதன் வழியில் உணவாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது. இதைப் போன்றுதான்
1.நம் உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் நம் உயிரே தாயாகின்றது.
2.அதனால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு அது எதனின் வழியில் வேதனையின் நிலைகள் உருவானதோ
3.அந்த வேதனையான உணர்வு தான் அதற்கு உணவாகத் தேவை.
4.அதே வேதனை உணர்வைத்தான் உயிர் உணவாகக் கொடுக்கும்.
5.வேதனையால் உருவான அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டி ஏங்கப்படும் போது
6.உயிர் (தாய்) காற்றிலிருந்து கவர்ந்து அந்த வேதனையான அணுக்களுக்கு உணவைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றது.

நல்ல குணங்கள் கொண்டும் நாம் வாழ்ந்திருப்பினும் வேதனை என்ற குணங்கள் வரும் பொழுது அதனின் ஆற்றல் பெருகி விடுகின்றது. அதனின் மலங்கள் உடலில் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல குணங்களுக்குக் கிடைக்கும் உணவு தடையாகி... அதனின் வலு இழக்கப்படுகின்றது.
1.சரியான வளர்ச்சி பெறுவதில்லை
2.நாம் நல்லதை எண்ணினாலும் நம்மால் முடியாது போகிறது.

அது காலத்தால் தடைப்படும் போது அந்த விஷத்தை உருவாக்கும் விஷ அணுக்களின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகப் பெருகி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.ஒரு புளியங்கொட்டை அது மண்ணில் செடியாக முளைக்கும் போதே
2.அதைக் கிள்ளி எறிந்து விட்டால் ஒன்றும் சிரமமில்லை
3.அதைப் பிடுங்க கோடாரியோ மற்ற ஆயுதமோ தேவையில்லை.

ஆனால் பெரிய மரமாக வளர்ந்த பின் அதை வெட்டக் கோடாரி அவசியம் தேவை. ஏனென்றால் மரங்களைக் கோடாரி போன்ற போன்ற ஆயுதத்தை வைத்துத் தான் வெட்ட முடியும்.

ஆனால் செடி சிறியதாக இருக்கும் பொழுது தெரிந்து கொண்டால் எளிதாக நீக்க முடியும். அதனால் தான் விழித்திரு...! என்று சொல்வது

மரம் பெரிதாக வளர்ந்த பின் அதனுடைய விழுதுகளைப் பாய்ச்சி விட்டால் கட்டிடத்தையே பலவீனமாக்கிவிடும்... நடந்து போகும் பாதையும் தடுத்துவிடும்.

ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டால் பாதையும் மறைக்காது... கட்டிடத்தையும் இடிக்காது. ஆகவேதான் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.நமது வாழ்க்கையில் எந்த வழியில் தீமை என்ற உணர்வை நாம் நுகர்ந்தாலும்
2.அடுத்த கணம் அது நம் உடலுக்குள் வளராது விழித்திருத்தல் வேண்டும்.

தீமைகளைக் கேட்டுணர்ந்த பின்... அல்லது பார்த்துணர்ந்த பின்... அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா...! என்று எண்ணி அந்தச் சக்திகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த வேதனையை உருவாக்கிய உணர்வுக்குள் மகரிஷிகளின் உணர்வை இவ்வாறு பாய்ச்சப்படும் போது அதை அடக்கி அதன் தன்மையை மாற்றிவிடும்.