ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 9, 2022

ஈஸ்வரபட்டர் கொடுக்கும் “ரிமோட் கண்ட்ரோல் சக்தி”

 

குருநாதர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடை அருகே அமர வைத்து உபதேசமாகக் கொடுத்தார். பன்றி சாக்கடையின் நாற்றத்தை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக வளர்ந்து வந்தது.

நாற்றமான உணர்வுகளை நீக்கப்பட்டு நாற்றத்தை நீக்கிடும் உணர்வின் எண்ணங்களாக மனிதனாக எப்படி வளர்ந்து வந்துள்ளோம்…? என்பதை உணர்த்தவே அங்கே உபதேசித்தார் குருநாதர்.

சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே. சாக்கடையற்ற நிலையாக
1.நாற்றத்தை நீக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வை நீ இங்கிருந்து பெறு.
2.அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நீ பெற்றால் அந்த நாற்றத்தை நுகரவிடாது
3.அதை அறியத் தான் உதவும்… அந்தத் தீமை உனக்குள் விளையாது.

அதைப் போன்று இந்தச் சாக்கடையான வாழ்க்கையில் இருக்கும் அந்த உணர்வினை நீக்கி மெய்ப்பொருளைக் கண்டுணரும் அந்த சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் உன்னை இங்கே அழைத்தேன்.

காரணம் இன்று இந்தக் காற்று மண்டலமே சாக்கடையாக இருக்கின்றது. இதை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நுகரும் தன்மையைத் தான் அடைந்துள்ளோம்.

விருப்பு வெறுப்பு வேதனை என்று
1.பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர
2.குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவில்லை.

ஆகவே நாற்றத்தைப் பிளந்த பன்றியைப் போன்று குறைகளை நீக்கி நல்லதை நுகரும் ஆற்றல் பெற வேண்டும்.

பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அவர்கள் குறைகள் அகல வேண்டும்… தெளிந்துணர்ந்து செயல்படும் தன்மை நமக்குள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அவ்வாறு எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கும் சக்திகளாக அங்கே தோன்றுகின்றது.

தீமைகளை அகற்றிடும் நிலையையும் தீமைகள் உனக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இங்கே சாக்கடை அருகே உன்னை அமரச் செய்து உனக்கு உணர்த்தியது.

ஆனால் சாக்கடையை நுகர்ந்து அய்யய்யே… என்று எண்ணினால் அதை நினைக்கும் பொழுதெல்லாம் உனக்குள் சாக்கடையை நுகரும் உணர்வே அதிகமாக வருகின்றது.

அந்தச் சாக்கடை நீக்க வேண்டும்… அதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வருகின்றது.

அதைப் போன்று தான்...
1.நீ யாரைக் கண்டாலும்... எவரைக் கண்டாலும்… அங்கே காணும் குறைகள் எதுவாக இருப்பினும்
2.அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினை உனக்குள் ஏற்றுக் கொண்டு
3.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று நீ இதை எண்ணுவாய் என்றால்
5.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் மெய்ப்பொருள் காணும் நிலையாக உனக்குள் வள்ரும்.

இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இருந்தாலும் குறை என்று அது அறிவிக்கச் செய்கின்றது.
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்த வேண்டும்
2.அதற்கடுத்து அதைப் பயன்படுத்தக்கூடாது.

ஆனால் அறிவிக்கச் செய்யும் நிலையையே திரும்பத் திரும்ப எண்ணி
1.இப்படிச் செய்தான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்தால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா…?
2.அவனை விடக்கூடாது...! என்று எண்ணும் பொழுது
3.நமக்குள் அறிவித்த அந்த நிலை… நமக்குள் எது தவறு...? என்று காட்டியதோ
4.அந்தத் தவறை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாகவே வளர்த்துவிடும்.

ஆக தவறை நீக்கும் நிலைகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனித வாழ்க்கையில் குறை இல்லாது நடந்தவர் யாருமில்லை. ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வு வரும் பொழுது குறையான உணர்வாக அதை ஈர்க்கப்படும் பொழுது…
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.,குறைகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று நாம் எண்ண வேண்டும்.

அது தான் முக்கியம்.

அந்தக் குறைகளை நீக்க அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வலுவாக ஏற்றுக் கொண்டால்… நாம் எடுத்துக் கொண்ட அந்த ரிமோட் கண்ட்ரோல் சக்தி யாருடன் பழகினாலும்… பேசினாலும்… அவர்களை அறியாது இயக்கும் தீமைகளை நீக்கிடும் சக்தியாகவும்… அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகவும் அங்கே இயக்கச் செய்யும்.

இதை நாம் செய்து பழக வேண்டும்.

இன்று நாம் உபயோகப்படுத்தும் டி.வி. மற்ற எலெக்ட்ரானிக் சாதனகளில் மூடி மறைத்து இருப்பதை “ரிமோட் கண்ட்ரோல்…” என்ற அந்த பட்டனைப் போடும் பொழுது சீராக இயக்குகிறது.. படமோ பாடலோ அல்லது எந்த இயக்கமாக இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே அதைக் கவர்ந்து இயக்க முடிகின்றது

இதைப் போன்றுதான் மெய் ஞானிகளின் ஆற்றலை நாம் எடுத்து
1.அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும் பொழுது
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலையாக ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) ஆக
3.நம்மை அந்த ஞானிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் அங்கிருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும். நமக்குள்ளும் அது வராதபடி நல்ல உணர்வுகளைத் தெளிந்து கொள்ளும் நிலையாக வரும்.

இதைத்தான் மகா சிவராத்திரி என்று இருளுக்குள் மறைந்த பொருளைக் கண்டுணர்ந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பெறும் நிலையாக மகா…! அனைத்தும் நமக்குள் உண்டு என்று காட்டியுள்ளார்கள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் தெரிந்திடும் நிலையாக சிவன்ராத்திரி என்று விழித்திருப்போம்.
1.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக
2.விழித்திருக்கும் அந்த உணர்வின் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.