ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2022

உடலைச் சக்கையாக்கி… “உயிரை மணியாக்கும்” பக்குவத்திற்கு நாம் வளர வேண்டும்

 

1.என்னுள்ளே நான்... என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள் உள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள்ளுள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி… உயிரை மணியாக்க…
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்...” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.

ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.

நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே… “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில்

இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.

இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.

“மனிதனின் எண்ணம் தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.

மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.

விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!

அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.

எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர... “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.

ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும்… “உயிராத்மாவை வித்தாக்கி”
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்…!

தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
1.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவப்படுத்தி
2.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
3.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
4.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.

தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.