ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 19, 2022

தனித்திருந்து... “விழித்திருத்தல் வேண்டும்...”

 

விழித்திரு... விழித்திரு... விழித்திரு... “தனித்திரு...!” என்ற நிலைகளைச் சொல்வார்கள். ஆனால் “விழித்திரு... தனித்திரு...” என்றால் எப்போதுமே
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் கலக்காது
2.பிறருடைய உணர்வுகள் நமக்குள் கலந்துவிடாது
3.தனித்த அந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
4.அந்த மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி நாம் தனித்து வாழ முடியும்.

இல்லை என்றால் பிறருடைய தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்கிவிடும். அதனால்தான் நீ விழித்திரு... நீ தனித்திரு... என்று காரணங்களைச் சொல்லி ஞானிகள் ஒவ்வொரு நிலைகளிலும் கூறுகின்றார்கள்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் விழித்திருந்து அந்த உணர்வின் தன்மையை தனக்குள் வளர்த்துக் கொண்டால் பிறிதொரு தீமை செய்வோருடைய உணர்வுகள் நம்மை இயக்காது.

இந்த உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் தனித்தே... தனித்தன்மையில் வாழ்கின்றோம்.

துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக மற்றொன்று இதை இயக்கிடாது அது தனக்குள் இயக்கப்பட்டு ஒளியின் தன்மையாக “தனித்தன்மையாக...” வளர்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எவரொருவர் விழித்திருந்து... தீமை தனக்குள் வளராது அது தனித்துத் தன் ஒளியின் சுடராக மாற்றினார்களோ...
1.அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சுடராக ஆகி
2.அவரவர்கள் நிலைகளுக்கேற்ப தனித்தே வாழ்கின்றார்கள் “தனித்தன்மை கொண்டு...”

ஆகவே நாம் இந்த மனிதனின் வாழ்க்கையில் நாம் எதனின் தன்மை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அடுத்தவருடைய தொடர்பு கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஒருவருக்கொருவர் இணை சேர்த்து ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ்கின்றோம்.

கோள்களும் அதே போன்று தான் அதனதன் நிலையில் வளர்ந்து அதனதன் தனித்தன்மையில் வளர்ந்தாலும் அதனில் விஷத்தன்மைகள் வளர்கின்றது. ஆனாலும்
1.சூரியன் “தனித்தன்மை கொண்டு...” வரும் நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக அது மாற்றுகின்றது
2.இதைப் போன்றுதான் நாம் தனித்திருந்து விழித்திருத்தல் வேண்டும்.

சூரியன் எப்படி நஞ்சினைப் பிரித்து அதனுடைய தனித்தன்மையைக் காட்டுகின்றதோ... தனித்த நிலைகள் அதனுடைய ஒளியின் தன்மையாக அது செயல்படுகின்றதோ... இதைப் போன்றுதான் தீமையின் உணர்வுகள் ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் சேராது நமக்குள் தனித்திருத்தல் வேண்டும்... அதே போல விழித்திருத்தல் வேண்டும்...!

ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு நல்லவருடைய உணர்வுகளையும் அறிந்தாலும் அதிலே அவர்களுடைய உணர்வுகளில் சிக்கி...
1.அவருடைய உணர்வுகளுக்கு அடிமையாகி விடாது “தனித்திருப்பது நல்லது...”
2.தனித்திருப்பது என்றால் நாம் விழித்திருப்பது நல்லது.

தீமைகள் எப்பொழுதும் நமக்குள் ஊடுருவாது அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து... அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கித் தீமைகள் தன்னை நாடாது தனித்தன்மையாக நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளிலிருந்து அகன்று... நாம் தீமையற்றவர்களாக வாழும் நிலை பெற வேண்டும்.

1.மகரிஷிகள் தனித்திருந்து... அவர்கள் விழித்திருந்ததனால் தனித்திருக்கும் நிலை பெற்றார்கள்
2.அதனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.நமது வாழ்க்கையில் விழித்திருக்கும் உணர்வும்
4.நமது வாழ்க்கையில் தனித்து வாழும் நிலைகளும் .
5.நமது வாழ்க்கையில் தீமையற்ற நிலைகளும் வளர்ந்திடும் நிலைகள் பெறுகின்றோம்.

இதை நினைவுபடுத்தும் நன்னாள் தான் சிவன்இராத்திரி.