ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2022

பித்துப் பிள்ளையான (பித்துக்குளி) ஈஸ்வரபட்டர்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் பொழுது ஒன்றுமறியாத பித்தன் என்றே எண்ணினோம். ஆனால்
1.பித்தான உடலுக்குள் நின்று
2.ஒளியான சத்தை தனக்குள் வளர்த்து உலகின் தன்மை அறிந்துணர்ந்து
3.அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்.

மாமரத்தில் உருவாகும் காய் முதலில் புளிப்பின் தன்மை அடைந்தாலும் முதிர்வில் கனியாகி மற்றவர்கள் ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

அதைப் போன்று நம் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை நுகராது இனித்த வாழ்க்கை என்ற நிலையைத் தனக்குள் எடுத்து
2.நஞ்சினை வெறுத்து மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.”தன்னிச்சையாக…” மகிழ்ந்திடும் உணர்வுடன் செயல்பட்டார்.
4.அப்படி இருக்கும் நிலையை... அவரைப் பார்ப்போருக்கு பித்தனைப் போன்று காணப்பட்டார்.

பிற்காலங்களில் அவர் உணர்த்திய உணர்வின் ஒலிகள் கொண்டு தான் அதை அறிய முடிந்தது.

இந்தப் பூமியில் வாழ்ந்த உடல் பற்றை அவர் அகற்றிவிட்டு அந்த மெய் ஞானிகள் மீது பற்று கொண்டு அந்த அருள் உணர்வுகளை அவர் வளர்த்துக் கொண்டு ஒளியின் தன்மை பெற்றார்.

நமக்குள் எதைப் பற்ற வேண்டும் எதைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக உணர்த்தினார்.

வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையும் பிறரை வெறுத்திடும் நிலையும் பிறரை அழித்திடும் உணர்வுகளையும் நமக்குள் இணையவிடாது அதை வெறுத்து அந்தத் தீமைகளைப் பற்றிடாது அருள் ஞானியுடன் பற்று கொண்ட உணர்வுகளை வளர்த்து அதைக் காத்திடும் நிலையாக நீ எவ்வாறு இருக்க வேண்டும்…? என்றும் உணர்த்தினார்.

என்னைப் பிறர் காணும் பொழுது நான் பித்தனாக இருக்கின்றேன். காரணம்
1.இந்தப் புவியின் ஆசை கொண்ட நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கும் பொழுது
2.என்னைப் பித்தன் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்
3.ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு அவர்கள் தான் பித்தராக இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை.

பித்தனாகி… இந்த உடலின் தன்மைக்கோ பித்தைப் போன்ற உடலின் உணர்ச்சிகளுக்கோ… நான் அடிமையாவதில்லை. உணர்ச்சிகளை அடக்கி
1.அந்த மெய் ஞானிகளின் உணர்வை நான் பெற வேண்டும் என்று
2.அந்தப் பித்துப் பிள்ளையாகத்தான் (பித்துக்குளி) நான் இருக்கிறேனே தவிர
3.இவர்களைப் போன்று உடலின் பித்துப் பிள்ளையாக நான் இல்லை…! என்று எம்மைத் தெளிவாக்கினார் குருதேவர்.