ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 3, 2022

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் கவரப் பழகிக் கொண்டால் சுகக் கேடுகளை மாற்ற முடியும்

 

இந்த மனித வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நாம் வெறுப்படையும் போது மகிழ்ச்சி இழக்கப்படுகின்றது. அதே சமயத்தில் வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை உணர்வுகள் நமக்கு மகிழ்ச்சி கொடுப்பதில்லை.

அது போல் எத்தனையோ பேர் எத்தனையோ விதமான ரண வேதனைகளைப் படுகின்றனர்.. அதனை நாம் நுகரும் பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை.

1.ஆனால் நுகர்ந்து… அதை எல்லாம் அறிந்து கொண்டாலும் நம் இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
2.இது எல்லாம் உடலில் சுகக் கேடான விளைவுகளாகின்றது.

ஆகவே நமது சுகங்களைக் கேடாக்கும் இத்தகைய தீய உணர்வின் தன்மைகளை நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும். அந்தச் சுகக் கேடுகளை மாற்றுவதற்கு அருள் உணர்வினைப் பெற்றால் ஒளியின் உணர்வாக மாற்ற முடியும்… அறியாது வந்த நோயிலிருந்து விடுபட முடியும்.

1.மனித உடலிலிருந்து சுகக் கேடுகளை மாற்றியவன் தான் அகஸ்தியன்
2.அவன் பேச்சை மற்றவர் கேட்டாலும் அல்லது அவன் பார்வை மற்றவர் மீது பட்டாலும்
3.அவர்களின் சுகக் கேடுகளை மாற்றி… அறிவின் தெளிவாக மாற்றிடும் திறனாக வருகிறது.

அவன் வாழ்ந்த காலத்தில் இத்தகைய சுகக் கேடுகளை மாற்றிய உணர்வுகள் அனைத்தும் அவன் உடலிலிருந்து வெளிப்பட்டுள்ளது. அதைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமக்கு முன் இங்கே அது பரவிக் கொண்டும் இருக்கின்றது.
2.அதை நீங்கள் பெறுவதற்குத் தான் இப்போது பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

சுகக் கேடு என்பது மனிதனுக்கு இருள் சூழும் நிலையே. வேதனையோ வெறுப்போ கோபமோ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகள் வந்தால் இருள் சூழும் நிலையாகிச் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

செயல் குன்றி… வலிமை இழந்து… நல்லதைப் பெற முடியாத நிலையிலும்… மகிழ முடியாத நிலையிலும் வந்து விடுகின்றது.

இதிலிருந்து விடுபடும் ஆற்றலை நாம் பெறுவதற்கே ஞானிகள் “தை பிறந்தால் வழி பிறக்கும்…” என்று தெளிவாக்கியுள்ளார்கள். சூரியனால் வளர்க்கப்பட்டதை எடுத்து அதைச் சுவையாகப் (சமைத்து) படைத்து சூரியனுக்கு அர்ப்பணிப்பதாகக் காட்டினார்கள்.

சூரியனுக்குப் படைக்கச் சொன்னதன் காரணம் என்ன…?

சூரியனின் வெப்ப காந்தங்கள் தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வு எதுவோ… அதனின் உணர்வு வலு கொண்டு அவை அவை கவர்ந்து அதைக் கொண்டு தான் தாவர இனங்கள் எல்லாமே உருவாகின்றது.

அதைப் போன்று…
1.மனிதனான பின் நாம் பலவற்றையும் சேர்த்து சுவைமிக்க உணர்வை... உணவை (பொங்கலை) உருவாக்குகிறோம்
2.அதை ஆவியாக… கலவைகளாக அனுப்பப்படும் பொழுது அதைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகிறது.
3.ஆனாலும் அதில் உள்ள சத்தை நாம் உணவாக உட்கொள்கிறோம்… மகிழ்ச்சி தோன்றுகிறது.

பலசரக்குகளைப் போட்டுச் சமையல் செய்யும் பொழுது வெளிப்படும் நல்ல மணங்களை.. அனைத்தும் கலந்த அந்தச் சக்தியின் தன்மைகளச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

இது மனிதனால் உருவாக்கப்பட்ட நிலை தான்... இருந்தாலும் சூரியன் கவர்ந்து கொள்கிறது. நாம் உணவாகச் சமைத்து நமக்கு வேண்டிய சுவையாக்கி நல்ல உணவாக உட்கொள்ளும் பொழுது அந்தச் சுவையின் உணர்ச்சி (மகிழ்ச்சி) வெளி வருகிறது… சூரியன் அதையும் கவர்கிறது.

1.சூரியன் கவர்ந்த அந்த மகிழ்ச்சியான உணர்வை மீண்டும் நமது ஆன்மாவாக மாற்றி
2.நாம் சுவாசித்து உயிரிலே படும் பொழுது மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்ச்சிகளை ஊட்டி
3.எல்லோருக்கும் அந்தச் சந்தோசத்தை ஊட்டுகின்றது.

அத்தகைய மகிழ்ச்சியைப் பெறுவதற்குத் தான் சூரியனுக்குப் படைக்கச் சொன்னார்கள் ஞானிகள்.