ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2022

விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்

 

உயிரின் (கதிரியக்கம்) துடிப்பு ஒலிகள் விண்ணிலே தோன்றியது தான். இதை முதலில் உணர்தல் வேண்டும்.

அதே சமயத்தில் மற்ற அணுக்களும் விண்ணிலே தோன்றியதுதான். ஆனாலும் பூமிக்குள் வந்தபின் பூமிக்குள் மண்ணாக மறைந்து மற்றதுடன் கலந்து விடுகிறது.

இதிலே உருவாகும் உணர்வின் ஆவியின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் நிலைகளுக்கொப்ப அணுக்களாக மாறுகிறது.

அத்தகைய அணுக்களின் துணை கொண்டு தாவர இனங்களாக உருவாக்கினாலும்
1.அதிலே தோன்றிய உயிரினமும் அதை உணவாக உட்கொண்டால் இந்த புவியின் ஈர்ப்பிலேயே நிலைத்திருக்கும்.
2.இதனின்று கடந்து செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆதியிலே
1.பேராற்றல் மிக்க பேரண்டங்களிலிருந்து அவை உமிழ்த்தும் துகள்களை
2.பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் வீழ்த்தி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றவாறு சக்திகளாக மாற்றி.. கோள்களாக உருவாக்கி
3.கோள்களில் இருந்து வருவதை வடித்து அந்த நஞ்சினைப் பிரித்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சிகரமாகத் திகழ்ந்ததோ
4.அதைப் போன்று விண்ணின் நிலைகளைக் கொண்டு
5.ஒரு நட்சத்திரத்தின் மின் கதிரியக்கப் பொறி மற்றொரு கதிரியக்கப் பொறியுடன் மோதும் பொழுது
6.அதனால் துடிப்பின் நிலைகள் ஏற்பட்டு தன் அருகில் இருக்கக்கூடிய கோளின் சக்தியைக் கவர்ந்து
7.அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் ஒரு உயிரணுவின் தோற்றம் (மின்னிக் கொண்டிருக்கும் நிலை) உருவாகிறது.

உயிரின் முன்னணி எதுவோ அதனின் நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களின் பொறிகளால் உருவாக்கப்பட்ட அணுவின் தன்மை எதிர் நிலையாகும் போதுதான் ஒரு இயக்கச் சக்தியாக மாறுகிறது.

அதன் வழியில் உடலின் உறுப்புகள் உருமாறி… உணர்வின் சத்து தசைகளாக மாறி… உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மாறி வந்தது தான் இயக்கச் சக்தி. பல சரீரங்களைக் கடந்து இதன் வழியில் தான் மனிதனாக இன்று நாம் வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் தெளிந்து தெரிந்து முழுமையாக உணர்ந்தவர்கள் மாமகரிஷிகள்.
1.தனது உயிரணு எந்த நட்சத்திரத்தின நிலைகள் கொண்டதோ
2.அந்த நட்சத்திரத்தின் உணர்வின் மின் அணுவின் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்துப் பேரொளியாக மாற்றிக் கொண்டார்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் இத்தனையும் பேசுகின்றேன். காரணம்… குருநாதர் இதையெல்லாம் எனக்குள் பதிவு செய்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கின்றார்.

சாமி சொல்வது அர்த்தம் புரியவில்லையே… ஏதோ ஒரு உலகத்தில் பெரிதாகச் சொல்கிறார்…! என்று விட்டுவிட்டால் அதைத் தள்ளி விட்டுவிடும்.

உதாரணமாக… திட்டுபவர்களையோ கேலி செய்பவர்களையோ உற்றுப் பார்த்து என்னை மோசம் பண்ணினார்… கேவலமாகப் பேசினார்…! என்று பதிவு செய்தால் அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாக விளையத் தொடங்குகிறது அல்லவா…! அதைப் போல்
1.சாமி சொல்லும் சக்தியை நான் பெற வேண்டும் என்று
2.இறுக்கிப் பிடித்துக் கொண்டால் இதை வளர்க்க முடியும்.

ஆதியிலே உருவான அகஸ்தியனுக்கு அவன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற விண்ணின் ஆற்றல் கொண்ட நஞ்சின் இயக்கமான உணர்வுகள் “பூர்வ புண்ணியமாக” அமைந்தது.

இந்த உணர்வின் சத்து கொண்டு அவன் விண்ணை நோக்கி ஏகும் போது…
1.அவனின் உயிரின் ஆற்றல் எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அதனின் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் ஆற்றலை ஒளியாக மாற்றி
3.தன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகளைப் பிரித்துப் பிரித்து
4.உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.

துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தை…
1.அங்கே துருவத்திலே நிலைகொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து
2.நஞ்சினைப் பிரித்து விட்டு தன் உயிரான ஒளியின் சிகரத்தை அடைந்து
3.எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு
4.இன்றும் மின்னிக் கொண்டு உள்ளான்… துருவ நட்சத்திரமாக…!

அதைப் போன்றே நம் உயிரணுவின் தோற்றம் அது எந்த நட்சத்திரத்தின் கதிரியக்கத்தால் உருவானதோ அந்த உணர்வின் சத்து கொண்டு
1.சிவன் இராத்திரி… உடலான இருளுக்குள் இருப்பதை அந்த மறைந்த நிலையை
2.தன் உணர்வின் நிலையால் (உயிரின் நட்சத்திர ஆற்றல்)… ஒலி அலைகளாக எண்ணங்களாக எப்படி மாற்றியதோ
3.அகஸ்தியனின் உணர்வினை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இணைத்து
4.இந்த வாழ்க்கையில் வரும் எத்தனையோ எதிர் நிலையான இயக்கங்கள் இருப்பினும்
5. ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் அகஸ்தியனைப் போன்று ஒளியாக மாற்ற முடியும்.

ஆக… உடலான இருளுக்குள் இருந்து தான் அந்த இருளைப் பிளந்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற வேண்டும்.