ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2022

நான்...! என்று இல்லாது “நாம்...” என்ற கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று குருநாதர் எச்சரிக்கை செய்தார்

 

மெய் ஞானிகள் அனைவரும் இயற்கையின் பேருண்மைகளைக் கண்டுணர்ந்தவர்கள். தங்கள் உடலில் வந்த தீமைகளை அகற்றி மெய் உணர்வுகளை அவர்களுக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள்.

அவர்களின் நினைவுகளைத் தான் எனக்குள் (ஞானகுரு) பதியச் செய்து எமக்கு உபதேசித்து அருளினார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

1.மனித வாழ்க்கையில் தன்னை அறியாது வந்த சோர்வடைந்த உணர்வுக்குள்
2.அந்த மெய்ஞானிகளின் உணர்வை இணைத்து அவர்களின் நினைவு கொண்டு நீ கவர்ந்தாயானால்
3.அந்த மெய் உணர்வைப் பெறும் தகுதியை நீ பெறுகிறாய்.

அதனின் உணர்வு உனக்குள் விளைய... விளைய... உன்னிடமிருந்து வெளிப்படும் எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் உணர்வுகளில் ஓ... என்று ஜீவன் பெற்று ம்... இன்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.

இவ்வாறு நீ எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை... நீ பிறர் நலமாக இருக்க வேண்டும் என்றும்... அவர்கள் மெய் ஞானிகளின் அருள் ஆற்றல் பெற வேண்டும் என்றும்... ஏக்க உணர்வுடன் வரும் பொழுது அனைத்து உணர்வின் சத்தைப் பெற்று நீ வலுப்பெற்றவன் ஆகிறாய்.
1.அந்த உயர்ந்த சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ
2.அத்தனை பேருடைய எண்ணம் உனக்குள் வலுவாகக் கிடைக்கின்றது.

மெய் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது... இந்த உணர்வுகள் அவர்கள் உடலுடன் இரண்டறக் கலந்து... சக்தி வாய்ந்த நிலைகளாக அங்கேயும் விளைகின்றது.

விளைந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது “அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சி பெறுகின்றார்கள்...?” என்று நீ எண்ணிப் பார்க்கும் பொழுது இந்த உணர்வின் சக்தியை உனக்குள் ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றாய் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

“நாம்...” என்ற நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலு கொண்ட நிலையாக அடைகின்றோம்.

1.நான்...! என்ற நிலையில் சென்றோம் என்றால்
2.அது தனித்து நின்று மற்றவரின் உணர்வின் வலு இழக்கப்படுகின்றது... வலு கிடைக்காது.
3.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது.

குரு என்னிடம் இதை எச்சரித்தார்.

மகரிஷிகளும் ஞானிகளும் உயர்ந்த ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டார்களோ... எப்படிக் கலந்து உறவாடினார்களோ அந்த உணர்வின் சக்தியை நீ பெற வேண்டும் என்று தான் உனக்குள் அதை இணைக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகின்றேன்... ஆக “நாம்... ஆகின்றேன்...”

இதைப்போல அனைவருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அவர்களுடன் இணைந்த நீயும்... அவர்கள் ஆகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்து... அவர்கள் ஆகின்றார்கள்

இதைப் போன்றுதான் “நாம்...” என்ற நிலைகளில் அந்த அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலிருந்து பல பல தீமைகள் (நஞ்சுகள்) வந்தாலும் அந்தப் பலவும் ஒன்றாக இணைந்து சூரியன் ஒளியின் சுடராக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக இயக்குகிறது.

அதைப் போல நீயும் மெய் ஞானிகளின் உணர்வைப் பருக வேண்டும். அதைப் பருகிடும் சக்தியைப் பெற வேண்டும் என்றால் அனைவருக்கும் நீ அதைப் பெறச் செய்ய வேண்டும்.

அதனின்றுதான் நீ அதைப் பெறுகின்றாய்...! என்ற நிலையைக் குரு தெளிவாக எனக்கு வழிகாட்டினார். அவர் எனக்குக் காட்டிய அதே அருள் வழியைத் தான் உங்களுக்கும் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.குருநாதர் காட்டிய வழியில் நாம் சென்று
2.ஒளியின் சரீரமாக அனைவரும் ஆக முடியும்...! என்ற நிலைக்குத் தான் இந்த உபதேசம்...!