காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா... அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா...? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.
முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.
அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.
காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்
அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.
உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை... ஆத்ம உணர்வை அறியாமல்... எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.
தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.
அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்...
1.இவர்களுக்கே இந்த நிலை...
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்... நாம் என்ன செய்ய முடியும்...! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு... மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்... தனது...” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.
நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு... பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து... அதைத் தன் சக்திக்குகந்தாக்கி... மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.
அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று...
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் சாந்தம் என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.
நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.