ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2022

எவ்வளவு தைரியசாலியாக உடல் வலுவுள்ளவராக இருந்தாலும்... சோர்வு வந்து விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய விடாது

 

இன்று ஒன்றுமே செய்ய வேண்டாம்...! பத்திரிக்கையைப் படித்தாலே போதும்... அல்லது டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.

இந்த வீட்டில் கொள்ளை அடித்தார்கள்... அந்த வீட்டில் திருடினார்கள்... இப்படி ஏமாற்றினார்கள்... பல கொடுமைகள் நடக்கிறது... என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. நமக்குள் அது எல்லாம் பதிவாகிக் கொண்டே வரும்.

இன்றைய உலகில் வலு உள்ளவன் என்ன செய்கிறான்...?

காட்டில் உள்ள மிருகங்கள் தன் வலுவைக் கொண்டு தான் மற்றதை அடித்துப் புசிக்கின்றது. அதைப் போன்றுதான் இன்று பத்து நூறு பேர் சேர்ந்து வலுவாகி விட்டால் அவர்கள் தான் ராஜா.

அடுத்தவர்களிடம் ஒரு இடத்தை நான் கேட்கிறேன் கொடு...! என்பார்கள். கொடுக்கவில்லை என்றால்... “பார்க்கலாம்...!” என்பார்கள்.

பின் தன்னுடைய அதிகாரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு “எனக்குத் தான் அது சொந்தம்...” என்பான். எந்த வகையில் நீ வருவாய்...? பார்ப்போம்...! என்பார்கள்.

இன்று இந்த அளவிற்கு மனிதனுடைய ஆக்கிரமிப்பு உணர்வுகள் அதிகமாகி விட்டது. நாம் தவறு செய்யவில்லை விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் இன்று பத்திரிகையிலே பார்க்கின்றோம்... படிக்கின்றோம்.

இப்படி எல்லாம் நடந்தது...! என்று உடனுக்குடன் நாம் அறிகின்றோம் ஆனால் அதை என்ன... ஏது...? என்று எண்ணும் போது இந்த அறிவின் தன்மை நமக்குள் பதிவாகி அங்கே உருவான உணர்வின் ஒலியை நாம் நுகர்ந்து அதையே உடலில் அணுவாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
1.முதலில் படிக்கும் போது ஒன்றும் தெரியாது
2.அணுக்கள் விளைந்து விட்டால் அடிக்கடி இந்த நினைவு வரும்.

பத்திரிக்கையைப் படித்தோம் டி.வியில் பார்த்தோம் என்று அடுத்தவரிடம் பேசுகிறோம் அல்லவா.
1.இங்கே இப்படி நடந்தது அங்கே இப்படி நடந்தது என்று (இரண்டாவது தரம்) சொல்லும் பொழுது
2.இந்த உணர்வுகள் உடலில் உருவான அணுவிற்கு மீண்டும் சாப்பாடாகப் போய்க் கொண்டே இருக்கின்றது.
3.தன் இனத்தை அது பெருக்க ஆரம்பித்து விடுகின்றது.

நம் உடலில் நல்ல உணர்வுகளைப் பெருக்குவதற்கு... நல்லதைக் கொஞ்ச நேரமாவது பேசுகிறோமா என்றால் இல்லை. பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது.
1.என்னதான் நல்லது செய்தாலும்
2.இப்படி ஆகிவிட்டதே...! என்ற நிலையில் தான் இருக்கின்றோம்.

இதைத்தான் “விழித்திரு...” என்ற நிலைகளில் அந்தத் தீமை வரப்படும் போதெல்லாம் அதை இடைமறித்தல் வேண்டும்... விழித்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்... எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்... என்ற உணர்வினை எடுத்துவிட்டு
1.எந்தக் காரியம் நடைபெற வேண்டுமோ...
2.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
3.என்னை நினைக்கும் போதெல்லாம் அவர் நல்லவராகும் நிலைகள் வர வேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கலந்து வெளிப்படுத்த வேண்டும்.

இத்தகைய நிலைகளை இந்த வாழ்க்கையில் நாம் அதை விழித்திருந்து செயல்படுதல் வேண்டும்.

தொழிலில் முதலில் லாபம் வரும் பொழுது... எல்லாம் சந்தோசமாக இருப்போம். சிறிதளவு நஷ்டம் ஆகி விட்டால் போதும். அங்கே கொடுத்தேன் காசு வரவில்லை... இங்கே கொடுத்தேன் காசு வரவில்லை... இப்படி ஏமாந்து போய்விட்டேன்...! என்று என்ற எண்ணங்கள் தான் வரும்.

அத்தகைய எண்ணங்கள் உருவாகி விட்டால் அதனால் உருவான அணுக்கள் அதே நினைவினைச் சுவாசிக்கும்போது பலவீனமான எண்ணங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.

அதே உணர்வுகள் இதற்கு உணவாகப்படும் பொழுது இந்த நல்ல உடலில் அந்தத் தீமையின் செயலாக நம்மைச் சோர்வடையச் செய்துவிடும். சோர்வான எண்ணங்கள் அது உணவாக ஆனபின் என்ன ஆகும்...?

நாம் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் கூட...
1.உடல் வலுவாக இருக்கும்
2.சோர்வின் தன்மை வரும் பொழுது எந்த வேலையையும் செய்ய முடியாது
3.சிந்திக்கும் தன்மையைyum இழக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நீ விழித்திரு...!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் தீமை புகாது தடுக்க வேண்டும்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதன் அடிப்படைக் காரணமாக வருகின்றதோ... உடனடியாக விழித்து... அதைத் தனக்குள் அடக்க வேண்டும்

ஆகவே...
1.தீமையின் உணர்வுகள் உருவாக்கப்படும்போதெல்லாம்
2.அருள் ஞானியின் உணர்வை நாம் எடுத்து உடலுக்குள் இணைத்து
3.அந்தத் தீமைகளை அடக்குதல் வேண்டும்.