ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2022

மற்றவருடன் பேச்சுத் தொடரானாலும்... நம் நினைவுகள் உயிருடன் ஒன்றும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

 

இராமன் எப்பொழுது கல்யாணராமன் ஆகின்றான்...?

தீமைகளை விளைவிக்கும் வில்லை... அந்த அம்பினை ஒடித்து விடுகின்றான். தீமைகள் செய்யாத உணர்வினை எப்பொழுது தனக்குள் விளைவிக்கின்றானோ அப்போதுதான் மற்றவரை அரவணைக்கும் தன்மை வருகிறது... சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்... கல்யாணராமா.

அரவணைக்கும் உணர்வைத் தனக்குள் சேர்த்து... பேரன்பு கொண்ட உணர்வினை வளர்த்து ஒன்றிய நிலைகள் கொண்டு இயக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் “கல்யாணராமா...!” என்று காவிய காப்பியங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

எத்தகைய தீமையின் உணர்வுகள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அதை எண்ணி தீமை நமக்குள் விளைந்து விடாது அதை ஒழித்தல் வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தீமை செய்யும் உணர்வே நமக்குள்ளும் வரும். நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்திடும் எண்ணங்களையே அது உருவாக்கும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று என்ற உணர்வினை நமக்குள் இணைத்தால்
1.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாதபடி
2.அருள் உணர்வின் தன்மையை அரவணைப்பதாகக் கல்யாணராமனாக மாற முடியும்.

நம் உடலில் இதனின் வலிமை ஆகிவிட்டால்
1.யார் நமக்குத் தீமை செய்தனரோ அதை அடக்கும் நிலைகள் வரப்படும் பொழுது
2.இதே உணர்வின் எண்ணங்கள் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்கள் உணர்வுகளை அடக்கும் தன்மை வருகின்றது.
3.அவருடைய செயலாக்கங்கள் அவர்களையே ஒடுக்கிவிடும்
4.யார் ஒருவர் தீமை எண்ணுகின்றனரோ அவருள்ளே நின்று அவர் அதற்குள்ளேயே மடிவர்.

ஆகவே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் விளையும் தீமையை அடக்கி வலிமை மிக்கதாக மாற்றிக் கொள்ளலாம்.

இதைத்தான் விழித்திரு...! என்ற நிலைகளில் மகா சிவன்ராத்திரி என்று காட்டுகின்றார்கள்.

இந்த உலகில் ஒவ்வொரு நாளும் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் பார்த்தாலும் அந்தத் தீமை நமக்குள் விளையாதபடி ஒவ்வொரு நொடியிலும் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

பத்திரிகையைப் பார்த்துப் படித்தபின் அல்லது டி.வியைப் பார்த்தபின் அவர்கள் இப்படிப் பேசினார்கள்... இவர்கள் இப்படிப் பேசினார்கள்... இவர்கள் இதைச் செய்தார்கள்... கெடுதல் செய்தார்கள்...! என்று
1.மற்றவர்கள் பார்த்தவர்கள் பதிவு செய்ததை எண்ணத்தால் எண்ணி நாம் பேசும் பொழுது
2.அதே உணர்வு நமக்குள் பதிவாகி எந்த நிலையை அவர்கள் செய்தார்களோ அதையே நுகர்ந்து
3.மோசமான ஆள்...! என்று நாமும் அந்தக் கெடுதலையே பேசத் தொடங்குவோம்.

அப்போது அவர்கள் எத்தகைய மோசம் செய்தார்களோ அதே மோசத்தின் தன்மை நமக்குள்ளும் விளைகின்றது இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் உடனடியாக மாற்றுதல் வேண்டும்.

இதற்குத் தான் நீ விழித்திரு என்று சொல்வது...! ஏனென்றால் இதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

நாம் மறந்து இருந்தாலும்... அடுத்த கணமே...
1.மற்றவருடன் பேச்சுத் தொடரான பின் நம் நினைவின் ஆற்றலை உயிருடன் புருவ மத்தியில் ஒன்ற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
4.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்
5.எங்களைப் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும்
6.நாங்கள் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று இந்த உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

பகைமையான உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் அதே உணர்வுக்கு அது இரை தேடும்... அதற்கு உணவு கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் இணைத்து
2.அந்தத் தீமைகளை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.