ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2022

உயர் ஞான ஜோதிகளாக நாம் ஆக வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு மனிதனுக்கும்...
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை... உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.

இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு... இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.

சேவை என்பது... தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.

உடலின் சுகத்திற்குச் சேவையும்... புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல...!

மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும்… பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.

இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் “ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை…” ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திரவக எண்ணை வித்து நிலை.

1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.

ஆவியாகி... குளிர்ந்து நீராகி... நீரின் தொடர்பு கொண்டு... தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.

சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.

மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.

அதாவது... நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக்கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா...!

இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்...!