ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2022

பல இலட்சம் ஆண்டுக்கு முன் அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட அருள் மணங்கள்

 

காட்டிலே வாழும் மிருகங்கள் உணவுக்காகத் தன்னுடைய எண்ணத்தைப் பாய்ச்சி எங்கே உணவு இருக்கிறது...? என்று அறிய எண்ணுகிறது.

மனிதன் இருக்கிறான் என்றால் அந்தத் தசைகள் இருக்கிறது என்றால் உணவாக உட்கொள்ளும் மணத்தால் அதை அறிந்து கொள்கிறது. உடலிலிருந்து வெளி வரும் மணத்தை அறிந்து மனிதன் இருக்கும் பக்கம் அந்த உடலை அழைத்து வருகிறது.

இதைத் தடைப்படுத்த அதற்கு எதிர் நிலையான மணங்கள் கொண்ட பச்சிலைகளையும் மூலிகைளையும் தான் படுத்திருக்கும் குகைப் பக்கம் பரப்பிக் கொள்கிறார்கள் அன்று வாழ்ந்த மக்கள்.

தன் உணவுக்காக வரும் மிருகங்களோ விஷ ஜெந்துக்களோ
1.இத்தகைய மூலிகை மணங்களை நுகர்ந்து கொண்ட பின் அதனுடைய விஷத்தின் வலிமை குறைகிறது
2.அதனால் இவர்கள் இருக்கும் திசைப் பக்கமே வருவதில்லை.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்... மனிதன் சந்தர்ப்பத்தால் அறிந்த அறிவால் அவன் கண்ட உண்மையால் இப்படிப்பட்ட பச்சிலை மூலிகைகளின் துணை கொண்டு அக்கால முதியவர்கள் முன் வாழ்ந்தார்கள்.

ஆனாலும் அந்தக் காலத்தில் வாழ்ந்த கணவன் மனைவி கருவிலே விளைந்த குழந்தைக்கு... இவர்கள் பரப்பி வைத்த அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் கிடைக்கிறது.

1.தாயின் இரத்தத்தின் வழி வரும் மணங்களை அந்தச் சிசு நுகரப்படும் பொழுது
2.விஷத்தை அடக்கும் ஆற்றல் கருவில் வளரும் குழந்தைக்கு வருகின்றது
3.அப்படி உருவானவன் தான் அகஸ்தியன்.

பிறந்த பின் அவன் உடலிலிருந்து வெளி வரக்கூடிய மணத்தை விஷம் கொண்ட ஜந்துக்கள் நுகர்ந்தால் அவைகள் ஒடுங்கி விடுகின்றது. குழந்தைப் பருவமாக அவன் இருப்பினும் அவனைத் தாக்குவதில்லை.

இப்பொழுது நாம் படுத்தால் கொசு நம்மைக் கடிக்கின்றது. ஆனால் கருவிலே விஷத்தை முறிக்கும் தன்மை பெற்ற அந்தக் குழந்தையை எந்தக் கொசுவும் தாக்குவதில்லை... விஷ ஜந்துக்களும் தாக்குவதில்லை.

தாய் கருவிலே இருக்கும் போது பெற்ற அந்தச் சக்திகள் தான்
1.அவன் உடல் உறுப்புகள் அனைத்தையும் விஷத்தின் ஓட்டத்தை தணிக்கக்கூடிய வல்லமையாகின்றது.
2.உலகில் எத்தகைய விஷம் இருப்பினும் இவன் மணத்தை நுகர்ந்த பின் அவை அனைத்தும் ஒடுங்கி விடுகின்றது
3.இவன் (அகஸ்தியன்) அச்சமின்றி வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் பெறுவதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).