எனக்குள் (ஞானகுரு) வந்த தீமைகளிலிருந்து விடுபட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “பல உணர்வின் ஒலிகளைக் கூர்மையாகக் கேட்டுணரும்ப்படி செய்து… அந்த உணர்வை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்தார்…!”
1.அவர் பதிவு செய்யும் போது
2.அவரைக் கூர்மையாகக் கவனிக்கும் போது
3.அவர் சொன்ன நிலைகளிலிருந்து
4.எனக்கு வரும் தீய விளைவுகளிலிருந்து என் குருவை எண்ணும் போதெல்லாம்
5.எனக்குள் வந்த தீமையை நீக்கி நல்ல வினைகளை எனக்குள் வளர்க்க முடிகின்றது.
அதே சமயம் மற்றவர்கள் என்னிடம் அவர்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கேட்க வரப்படும் போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் எனக்குள் கேட்டறிந்தாலும் “அந்தக் கஷ்டம்” என்னை இயக்காதவண்ணம் மாற்ற முடிகிறது.
இப்பொழுது கசப்பு புளிப்பு காரம் போன்ற பல சரக்குகளை இணைத்து எப்படிச் சுவையாகச் சமைத்து உணவாக உட்கொள்கின்றோமோ அதைப் போல் என்னால் மாற்றிக் கொள்ள முடிகிறது.
ஏனென்றால் ஒவ்வொருவரும் என்னை அணுகும் போது அவர்களின் துன்பத்தையும் கஷ்டத்தையும் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்து தான் நான் பதில் சொல்ல வேண்டியது வரும்.
1.உங்கள் உடலில் விளைய வைத்த துன்பங்களை நீங்கள் சொல்லும் போது
2.நான் கேட்டறியப்படும் போது அந்தப் பலவும் சேர்த்து என் உடலுக்குள் வந்தால்
3.ஒரு நூறு பேர் சொல்கிறீர்கள் என்றால்.. எனக்குள் அது நோயாக உருவாக்கத் தான் தூண்டும்.
ஆனால் அவை அனைத்தும் எனக்குள் நோயாக விளையாதபடி குருநாதர் காட்டிய வழிகளில் விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து அதனுடன் கலக்கச் செய்து நான் மாற்றிக் கொள்கிறேன்.
ஒரு குழம்பை வைக்கும் போது காய்கறிகளையும் மற்றதையும் போட்டு வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை (காரலை) நீக்கிச் சுவைமிக்கதாக ஆக்குகின்றோம் அல்லவா...!
அதைப் போல் நீங்கள் பேசும்... எம்மிடம் கேட்க வரும் அந்த நிலையை
1.எனக்குள் சேராவண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.அந்தக் குழம்பைச் சுவையாக்கியது போல் எனக்குள் அந்தத் தீமை விளைவிக்காதபடி சுவைமிக்கதாக ஆக்கிக் கொள்கிறேன்.
மிளகாயை வாயிலே போட்டவுடனே ஆ… என்று அலறுகின்றோம். நம் உமிழ் நீரே காணாது போய்விடுகின்றது. ஏனென்றால் அதில் உள்ள விஷத் தன்மை அதனின் துடிப்பு நம் அங்கங்களை அவ்வளவு வேகமாக இயக்குகின்றது.
அது வேகமாக இயக்கினாலும் அதே மிளகாயைப் பல சரக்குகளுடன் சேர்த்து இந்தக் காரத்தை அதிலே அளவுடன் போடும் போது
1.இரசனை கொண்டு நம் உமிழ் நீரைச் சுரக்கச் செய்து
2.ஆகா..!. என்று நாம் ருசித்துச் சாப்பிடும் நிலையாக உணர்ச்சிகளைத் தூண்டி
3.மனிதனுக்குள் வலுவின் தன்மை கூடி சிந்திக்கக்கூடிய உணர்வை ஊட்டி
4.நம்மை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அதே காரம்...! (சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!)
இதைப் போல் தான் கோபமாகவோ வெறுப்பாகவோ சலிப்பாகவோ சஞ்சலமாகவோ வேதனையாகவோ பல சோர்வடைந்த நிலைகளில் அவரவர்களுடைய கஷ்டங்களை எம்மிடம் சொல்லி... அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணம் தேட என்னிடம் கேட்க வந்தாலும்... நீங்கள் கஷ்டப்படும் உணர்வின் தன்மை நான் கேட்டறியும் போது அந்த உணர்வுகளை என் செவிப்புலன் ஈர்த்தாலும்... அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நான் சுவாசித்து என் உயிரிலே பட்டு அதை அறிந்து தான் நான் பதில் சொல்ல வேண்டி வரும்.
1.குருநாதர் கொடுத்த சக்தி கொண்டு பல உபகாரங்களை உங்களுக்குச் செய்தாலும்
2.நான் அதை மாற்றவில்லை என்றால் நீங்கள் சொன்ன உணர்வுகள் என் உடலுக்குள் சென்று
3.கடுமையான தீய விளைவுகளை உண்டாக்கிவிடும்.
அத்தகைய நிலையை நான் சமப்படுத்துவதற்குத் தான் குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை... அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை... நீ எப்படிப் பருக வேண்டும்…? என்று தெளிவாக்கினார்.
அதை எடுத்துச் சுத்தப்படுத்தி... வேக வைத்து... அதனைச் சமப்படுத்தி... சமைத்து... ருசியாக்கி...
1.யார் உன்னிடம் சொன்னார்களோ அவர்களின் தீமைகளை நீக்க
2.அருள் உணர்வின் வாக்கினை அங்கே அவர்களுக்குள் பதிவு செய்து
3.அவர்களைத் தீமையிலிருந்து விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்...! என்று குருநாதர் சொன்னார்.
உங்களை அறியாது உடலில் சேரும் தீமையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் “குருநாதர் சொன்ன வழியில்... உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்...!”