ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2020

நல்ல மணமகன் நல்ல மணமகளைத் தேர்ந்தெடுக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறை

 

தன் மகன் திருமணத்திற்குத் தகுந்த மணப்பெண் வேண்டுமென்றால் “மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண் நமக்குக் கிடைக்கும்...” என்று இந்த உணர்வினை எண்ணிச் செயல்படுத்திப் பாருங்கள்.
 
இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும்போது அதற்குத்தக்க நல்ல இடத்தை அழைத்துக் சென்று நல்ல மணமகளைப் பார்க்க முடியும். அதே போல் நல்ல மணமகனையும் தேர்ந்தெடுக்கும் சக்தி உங்களிலே பெருகும்.
 
ஆனால் ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால்... அது உங்களைத் தான் அடிமையாக்குமே தவிர மெய் உணர்வை உங்களை அறியச் செய்யாது.
 
1.ஜாதகம் ஜோதிடம் பார்க்காது மனம் ஒத்துச் சென்றால்
2.உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.
 
ஜாதகம் பார்த்துப் பார்த்து எதுவும் ஒன்றி வரவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி... கடைசியில் சோர்வின் தன்மை அடையப்படும்போது அதற்குத் தகுந்த “சோர்வான மாப்பிள்ளையையோ சோர்வான பெண்ணையோ தான்” பார்க்கும்படி வரும்.
 
அப்படி வந்த பின் கீரியும் பாம்பும் போல தான் அவர்கள் வாழ்க்கை அமையுமே தவிர மகிழ்ச்சி பெறும் தன்மை இல்லை.
 
ஜாதகம் ஜோதிடம் பார்த்து ஆயுட்காலத்தை நிர்ணயித்துத் தான் திருமணத்தைச் செய்கின்றார்கள். எல்லாப் பொருத்தமும் இருந்தால் அவர்களுக்கு நோய் வராது...! என்பார்கள். அதன் பிரகாரம் வாழ்கின்றனரா...? நோயில்லாமல் வாழ்கின்றனரா...?
 
1.மனப்பொருத்தத்தைப் பார்த்து அருள் ஒளி பெற வேண்டுமென்று ஏங்கிப் பெற்றால்
2.ஒன்றி வாழும் நிலை பெற்று அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறுகின்றனர்.
 
ஆகவே அருள் ஞானி காட்டிய அருள் வழிகள் அவர்கள் பெற வேண்டும் அதன் வழி எங்கள் குடும்பங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
 
ஜாதகம் ஜோதிடம் என்ற நிலைகளை ஒழித்துத் தள்ளுங்கள். அருள் வழி பெற வேண்டுமென்ற நிலைகளில் நம் குடும்பம் ஒத்து வாழ வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணுங்கள்.
 
பொண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவர்கள் வாழ்க்கையில் நோயின் தன்மையை விசாரியுங்கள். குணத்தின் தன்மையை விசாரியுங்கள். நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றாரா...? என்று பாருங்கள்.  
 
இப்படித்தான் பொருத்தங்களைப் பார்க்க வேண்டும். நல்லொழுக்கத்துடன் செயல்பட்டால் இந்த முறைப்படி நாம் தியானித்தால் இந்த நல்லொழுக்கம் மீண்டும் வளர்கின்றது. தவறுகள் வராது.
 
ஆனால் தவறு செய்வோர் ஆசையின் உணர்வுகளை ஊட்டுவார். அதை ஏற்றுக் கொண்டு ஏமாந்து விட்டால் “நான் ஏமாந்துவிட்டனே...” என்று ஆன பின் திருமணமான பின் தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளே வருகின்றது.
 
ஆகவே துருவ தியானங்கள் இருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
 
1.நம் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்
2.நம் பெண் எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் தொழில் வளம் பெருக வேண்டும்
3.அதன் பார்வை அந்தக் குடும்பத்திற்கு நலம் பெறும் சக்தியாக அமைய வேண்டும்
4.அதே போல வீட்டிற்கு வரும் மருமகளும் மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்
5.மகிழ்ச்சி அடையச் செய்யும் அந்த உணர்வுகள் பெற வேண்டும்
6.அத்தகைய மணப்பெண் நம் வீட்டிற்கு வர வேண்டுமென்ற எண்ணத்தைத் தொடருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைகள் நிச்சயம் வரும்.