ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2020

கண்களால் பதிவாக்கப்படும் உணர்வுகள் சந்தர்ப்பத்தால் விசித்திரமான ரூபமாற்றங்களுக்கு எப்படிக் காரணமாகிறது…?

 

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று மிருகங்களைப் பற்றி அறியும்படி செய்தார்.
 
ஒரு சமயம் ஒரு புலி அது கர்ப்பமுற்று இருக்கிறது. ஆனால் அது அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் தன் இரைக்காக வரும் மானை உற்றுப் பார்த்து கொண்டிருக்கின்றது.
 
ஏனென்றால் இது அடிபட்டு நகர முடியாமல் இருப்பதால் தன் இரைக்காக வேண்டி எண்ணி ஏங்கிப் பார்க்கின்றது.
1.மானின் உணர்வை எண்ணி எண்ணித் தன் கண்ணால் பார்க்கப்படும்போது 
2.அந்த உணர்வுகள் அந்தப் புலியின் கருவிலே விளையத் தொடங்குகிறது.
 
அதாவது இந்தச் சந்தர்ப்பத்தில் அது நுகரும் உணர்வுகள் அந்தப் புலிக்கும் மானுக்கும் உண்டான வித்தியாசங்கள் அங்கே வருகிறது. புலி ஏக்கத்தால் தன் இரைக்காக (மானை) ஏங்குகின்றது.
 
அந்த உணர்வின் சத்து கருவிலே இருக்கக்கூடிய அந்த உயிரணுக்களில் இணைக்கப்பட்டு அது எவ்வாறு விளைகின்றது…? என்பதனை அங்கே காட்டுகிறார்.
 
இப்பொழுது உங்களிடம் இதை லேசாகச் சொல்கின்றேன். ஆனால் காட்டிற்குள் என்னை பட்டினியாக இருந்து தான் பார்க்கச் சொன்னார் எந்தப் பக்கமும் போகக்கூடாது…! என்று சொல்லிவிட்டார்.
 
1.உயிரனங்களில் தான் கண்ணால் பார்த்து நுகர்ந்தறிந்த உணர்வுகள்
2.அந்த நுகர்ந்ததை உயிர் தனக்குள் உணர்வாக அலையப் பெற்று உணர்வை அறிவாக இயக்கப் பெற்று
3.அது உடலுக்குள் பதிந்தபின் கருவில் வளரும் சிசுவிற்குள் ஒட்டுன்னி போன்று
4.அந்த உணர்வுகள் எவ்வாறு இயக்கப்படுகின்றது…? என்பதனை தெளிவாகக் காட்டுகின்றார்.
 
இன்று விஞ்ஞான அறிவில் நாம் எத்தனையோ பல பல உண்மைகளை இயந்திரங்களின் மூலமாகவும் சாதனங்களின் மூலமாகவும் நாம் பார்த்து அறிகின்றோம்.
 
ஆனால் ஆரம்பத்தில் மெய் ஞானிகள் இதை எல்லாம் கண்டுணர்ந்து தன் புலனறிவாலேயே அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பருகி அவர்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்…? என்ற நிலையை குருநாதர் உணர்த்தி…
1.என் புலனறிவிற்கு ஊட்டச் சத்தை ஊட்டிப் புலனின் அறிவு கொண்டு
2.அங்கே நடக்கும் சம்பவங்களை உற்றுப் பார்க்கும் சமயம்
3.அதனின் உணர்வின் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று அறியும்படி செய்தார்
 
அந்த அனுபவத்தைத் தான் சொல்கின்றேன். ஏனென்றால் நான் (ஞானகுரு) கல்வியறிவு அற்றவன்.
 
குருநாதர் தன் உணர்வின் வலு கொண்ட நிலையால் கண்டுணர்ந்த அந்த உண்மைகளை நீங்கள் அனைவரும் அறிந்துணர வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.
 
நமது சாஸ்திரங்களில் இந்த மெய்யுணர்வுகள் அனைத்தும் உணர்த்தப்பட்டுள்ளளது. மகாபாரதமோ இராமயாணமோ கந்த புராணமோ சிவபுராணமோ அதிலே உணர்த்தப்பட்ட உண்மைகள் அந்த சாஸ்திரம் அனைத்தும் மெய் தான்…!
 
அந்த உண்மைகளை எல்லாம் மனிதர்கள் உணர்ந்தால்…
1.அந்த ஞானிகள் சென்ற பாதையில் சென்று
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றுமே நிலை பெறுவது திண்ணம்
3.பிறவி இல்லா நிலையை நாம் பெற முடியும் என்பதை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.
 
ஆக… அந்தக் கர்ப்பமான புலி தன் இரைக்காக மானை ஏங்கிய… அந்த ஏக்கத்தின் உணர்வுகள் கருவிற்குள் இருக்கக்கூடிய சிசுவின் உணர்வுக்குள் படப்பட்டு இந்த உணர்வுகள் அதனுடைய ரூபங்கள் எப்படி மாறுகிறது…? என்று காட்டுகின்றார்.
 
அந்தப் புலி குட்டியை ஈனும் வரையிலும் என்னை அந்த இடத்தை விட்டு நகரச் சொல்லவில்லை. அதனுடைய உணர்வின் வளர்ச்சியையும் மாற்றத்தையும் அங்கேயே அமர்ந்து அதைத் தியானிக்கும்படி செய்தார்.
 
இன்று ஜோதிடம் பார்க்கின்றார்கள் அல்லவா…! அவர்கள் உடலிலுள்ளதை எல்லாம் நுகர்ந்தறிந்து… “நீங்கள் என்னென்ன நினைத்தீர்கள்…?” என்று அப்படியே சொல்வார்கள்.
 
இதைப் போலத்தான்... அந்தப் புலியின் கருவிற்குள் உணர்வின் இயக்கமும் அதனின் அலைகள் எவ்வாறு தொடர்ந்து இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக தெளியும்படி அங்கே ஊட்டினார்.
 
1.மான் இடும் மூச்சலைகள் அந்த உடலிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வலைகள் இந்தப் புலியின் உணர்வுக்குள் எப்படி இணைகின்றது...?
2.புலி சுவாசித்த உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து வரும்போது அதன் கருவிலே விளையக்கூடிய அந்த சிசு இந்தப் புலியின் ரூபம் மாறி மானின் நிலைகள் எவ்வாறு இணைகின்றது…?
3.கடைசியில் இரண்டும் கெட்டானாக எப்படி விளைகின்றது…? என்ற நிலையை நேரடியாகவே தெரியப்படுத்தினார்.  
 
 மனிதக் கருவில் கூட இது போல் சில மாற்றங்களுடன் குழந்தைகள் மிருக உடலுடனோ அல்லது மிருகத் தலையுடனோ பிறப்பதைப் பத்திரிக்கைகளிலோ டி.வி.யிலோ பார்த்திருப்பீர்கள்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் ரூப மாற்றங்கள் எப்படி அமைகிறது…? கண்களால் பார்த்து நுகரும் உணர்வுகளை நம் உயிர் எப்படி எல்லாம் உருமாற்றுகிறது..? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்…!