ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2020

பரமபதம்...!

புலி மிகவும் கொடூரமான விஷத் தன்மை கொண்டது. உதாரணமாக புலி ஒரு மானைத் தாக்கப்படும்போது அந்த விஷத்தின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள் ஊடுருவி அந்த உணர்வுகள் வலுப் பெறச் செய்கின்றது.
 
மான் இறந்து விட்டால் புலியின் ஈர்ப்பிற்குள் வந்து புலியாகப் பிறக்கின்றது. இப்படித் தான் பரிணாம வளர்ச்சி அடைந்து...
1.பல உடல்களுக்கு இந்த உடல் இரையாகி...
2.இரையாக்கிய உடலின் உணர்வின் சத்தை நுகர்ந்து தனக்குள் இரையாக்கி..
3.அந்த இரையின் உணர்வை உயிர் செயலாக்கப்படும்போது பரிணாம வளர்ச்சி அடைந்து...
4.இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது என்பதனை நாம் மறந்திடலாகாது.
 
இதை நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபதம் என்ற நிலையில் ஒரு அட்டையை வைத்திருப்பார்கள். அதிலே பார்க்கலாம்.
 
முதலில் தாயத்தைப் போடுவார்கள். விழுகும் தாயத்திற்குத் தக்க  காய்களை வைத்து அங்கே நகட்டுவார்கள். சிறுகச் சிறுகக் காய்கள் நகற்றப்படும் போது.. பாதையில் ஏணி இருக்கும். ஏணியின் பக்கம் சென்று விட்டால் மேலே சென்று விடுகின்றது.
 
சிறு ஏணியில் ஏறினாலும் அதற்கடுத்த கட்டம் விஷம் கொண்ட பாம்பு இருக்கும். அது தீண்டிவிட்டால் மீண்டும் கீழே இழுத்துக் கொண்டு வந்துவிடும். நாய் நரி போன்ற நிலைகளை அங்கே போட்டுக் காட்டியிருப்பார்கள்.
 
அடுத்து மீண்டும் தாயத்தை உருட்டி மேலே செல்லும் போது மிகப் பெரிய ஏணி மூலம் துரித நிலைகள் கொண்டு மேலே சென்று விடுகிறோம்.
 
மிகவும் வேகமாக மேலே வந்துவிட்டோம்...! என்று இறுமாப்பு கொண்டலும் அடுத்த கணம் அருகிலே பெரிய பாம்பு காத்திருக்கின்றது.
 
தாயம் அதிலே விழுந்து விட்டால் அதன் வாயின் பக்கம் சென்ற பின் நேராகக் கீழே இறக்கிப் பன்றியின் பக்கம் கொண்டு வந்து விடும்.
 
பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை எப்படி நீக்கி நல்லதை எடுத்ததோ அதைப் போல மீண்டும் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி நீக்கித் தான் அடுத்து மனித நிலைகளைப் பெற முடியும் என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.
 
1.அதாவது உயர்ந்த நிலையில் ஏணியில் மேலே சென்றாலும்
2.ஒரு விஷத்தின் தன்மை தாக்கப்படும்போது மீண்டும் கீழான பிறவிகளுக்குப் போய்விடுவோம் என்பதனை
3.இரவு முழுவதும் நாம் விழித்திருந்து சிவன் ராத்திரி... வைகுண்ட ஏகாதசி அன்று
4.இந்த விளையாட்டின் மூலமாக நம்மை உணரும்படி செய்தனர் ஞானியர்.
 
காரணம்... தீமைகளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நம் உயிரின் நிலைகள் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள்.. தீமையான உணர்விலே சிக்கினால் அதன் உணர்வு கொண்டு மீண்டும் இழி நிலையான சரீரத்தில் கொண்டு போய் நம்மைச் சேர்த்துவிடும் என்று இரவு விழித்திருக்கும் போது இத்தகைய பரமபதத்தை ஆடுவார்கள்.
 
மனிதர்கள் நாம் தெரிந்து கொள்வதற்காக சாஸ்திர விதிகள் இவ்வாறு கூறுகின்றது.
 
ஆக... பெரிய ஏணி எடுத்து தப்பிச் சென்றாலும் அடுத்து வரும் பெரிய பாம்பின் தன்மை வரும் பொழுது அதிலிருந்து தப்புவதற்கு என்ன வழி...?
 
பரமபதம் என்பது... இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் உணர்வு கொண்ட இருபத்தி ஏழு உணர்வுகளும் ஒன்றானால் அடுத்து பிறவியில்லா நிலை அடையும் நிலை.
 
1.என்றுமே பிறவியில்லா நிலைகள் கொண்டு எதுவும் எதிர்ப்பு இல்லாத நிலைகள் கொண்டு
2.அருள் உணர்வுகளைப் பெற்றால் இருளை அகற்றிப் பேரொளி என ஆக முடியும் என்பதனை
3.பரமபதம் என்று ஒரு காகிததை வைத்து அதிலே தாயத்தை உருட்டி விளையாடும் போது “தன் நிலையை அடையும் படி செய்கின்றனர்...!”
 
ஆனால் இதையெல்லாம் நாம் விளையாட்டிற்காக என்று நாம் பார்த்துத் தெரிந்து கொள்கின்றோமே தவிர இயற்கையின் உண்மையின் நிலைகளை அறியவில்லை.
 
சிவன் ராத்திரி என்று விழித்திருப்பதும் வைகுண்ட ஏகாதசி என்று விழித்திருப்பதும் அன்றைய நாள் ஒரு விளையாட்டு மூலமாக
1.பேருண்மைகளை எல்லாம் அறியும்படி நமது நாட்டின் சாஸ்திரங்கள் இருப்பினும் 
2.நமது ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வினை இன்னமும் நாம் அறியாமல் தான் இருக்கின்றோம்...!