ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2020

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை உணர்த்தினால் ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் இல்லை… என்று வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்

 

நம் உடலான சிவனுக்குள் எதனையும் உருவாக்கும் அந்த உணர்வுகள் வலுப் பெற்றாலும் எதனின் உணர்வை நாம் அதிகமாக நுகர்ந்தோமோ அதுவே நமக்குள் விளைந்து அடுத்த சரீரத்தை இது நிர்ணயிக்கின்றது.
 
1.ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும் நிலைகள்
2.உடலுக்குள் சென்று எப்படிச் சிவமாகிறது (உடலாக) என்பதை உணர்த்துவதற்குத்தான்
3.சிவன் ஆலயங்களில் நந்தீஸ்வரனை வைத்துள்ளார்கள்.
 
ஐந்து புலனறிவு கொண்ட மிருகங்கள் அது உணவுகளை உட்கொள்ளும்போது அதில் உள்ள விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்கிறது… மற்றதை மலமாக மாற்றுகின்றது.
 
ஆனால் நல்லதை உடலாக்கி விஷத்தை மலமாக மாற்றும் திறன் கொண்ட நாம்… இன்றைய வாழ்க்கையில் வேதனைப்படும் ஒரு மனிதனின் உணர்வை நுகர்வோமென்றால் (சுவாசம்) அது நம் உடலுக்குள் சென்று அணுவாக மாறி நம் உடலில் விஷத்தின் தன்மையாக உருவாக்கிவிடும்.
 
வேதனை என்றாலே விஷம். இதனின் கணக்கின் தன்மை அதிகரித்து விட்டால் அந்த விஷத் தன்மை கொண்ட அணுக்களாக உடலுக்குள் பெருகத் தொடங்குகிறது.
 
இப்படி நமக்குள் எதனை அதிகரிக்கின்றோமோ… அதன் வழிகளில்… இந்தக் கணக்கின் பிராகரம் தான்… நம்முடைய அடுத்த சரீரத்தை உயிர் உருவாக்கும் என்ற நிலையைத் தெளிவாக கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.
 
1.இதை நாம் அறிவதில்லை…
2.இதை உணர்த்துவாரும் இல்லை…
3.உணர்த்தச் செய்யும் மனிதர் இல்லை….!
 
இப்பொழுது இதை உணர்த்தினாலும் இன்று ஏற்றுக் கொள்ளும் மனிதர் இல்லை…! என்று வேதனைப்பட்டுச் சொன்னார் நம் குருநாதர் ஈஸ்வரபட்டர்.
 
சாங்கிய சாஸ்திரங்களைச் சொல்லி சிவனுக்கு அபிஷேகங்களையும் என்றும் ஆராதனையும் செய்தால் “அவன் எனக்கு ஓடி வந்து செய்வான்…!” என்ற இந்த உணர்வைத் தான் தனக்குள் பதிவாக்கியுள்ளார்கள்.
 
அதன் வழியில் உடலிலே விளைந்த அணு அதே உணர்வின் எண்ணங்களைத் தான் உருவாக்கும். அதன்படி மந்திரங்களைச் சொல்லி அதற்கு வேண்டிய அபிஷேக உணவுகளையும் கொடுத்து இந்த உணர்வை நுகர்ந்து விட்டால் நந்தீஸ்வரா…!
 
இதே மந்திர உணர்வின் அணுவாக உடலிலே உருவாகி விளைந்து… உயிராத்மாவில் இணைந்துவிடும். இதை வளர்த்துக் கொண்ட நிலையில் உடலை விட்டுப் பிரியும் இந்த ஆன்மா எங்கே போகும்..?
 
இதே மந்திர ஒலியை அடுத்து இன்னொரு மனிதன் எழுப்புவான் என்றால்…
1.இதனின் கணக்கின் பிராகாரம் அந்த உடலின் ஈர்ப்புக்குள் தான் உயிரான்மா செல்கிறது
2.நாம் சுவாசித்த கணக்கின் பிராகாரம் தான் அடுத்த உடல் என்று தெளிவாக்கினார் குருநாதர்.
 
ஆகவே சிவாலயத்தில் எதை எண்ண வேண்டும்…? எதைப் பெற வேண்டும்…? என்றும் மக்களுக்கு எடுத்துச் சொல்…! என்றார் குருநாதர்.
 
ஆகவே நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டும்…?
 
நம்மைப் போன்று இந்தப் பூமியில் வாழ்ந்தவர்கள் தன் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றினார்கள்.
 
உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகப் பெற்று கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
 
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று
2.அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

காலை 4 மணிக்கு இதை எடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்…!