ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2020

மெய்ப்பொருள் – மெய் எது...? பொருள் எது...?

சாஸ்திர விதியின் அமைப்பு எவ்வாறு என்ற நிலைகளில் நாம் அனைவரும் தெரிந்து கொண்டால் சாஸ்திரம் மெய் ஆகின்றது. மெய்ப் பொருளைக் காணும் நிலையையும் நாம் அடைய முடிகிறது.
 
ஆனால் அதற்குப் பதில் இன்று சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காண முடியாது மறைந்து விட்டது காலத்தால்...!
 
நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இந்த உண்மையினை வெளிப்படுத்தி மெய்ப்பொருள் என்பது யாது..? என்ற நிலையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
 
1.நம் உயிரே நமக்குள் மெய் ஆகிறது...!
2.அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய நிலைகள் வெளிப்பட்டாலும்
3.அதிலிருந்து நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை...
3.அதனின் உண்மையின் உணர்வை நமக்குள் மெய்யாக எடுத்துரைக்கின்றது நம் உயிர்.
 
இதைத் தான் மெய்ப்பொருள் என்று சொல்வது.
 
ஆக... பேரண்டத்தில் எத்தகைய நிலைகள் இருப்பினும்
1.நமக்குள் மெய்யை உணர்த்துவதும்
2.மெய்யின் தன்மையை அறியச் செய்வதும்
3.மெய் வழி நம்மை இயக்கச் செய்வதும் நம் உயிரே.
 
மெய் ஞானிகள் அவர்கள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உயிரின் துணை கொண்டு உலகின் நிலையையும் பேரண்டத்தின் நிலையையும் உண்மையை உணர்ந்தறிந்து அந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்தனர்.
 
தன் உயிருடன் ஒன்றிய மெய்யாக... மெய்யின் நிலையாக... இன்றும் நிலை கொண்டு சப்தரிஷி மண்டலங்களாகத் திகழந்து கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த எல்லையை அடையும் வழி முறைகளைத் தான் நமக்கு சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.