ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2020

பிரளயத்தினால் பூமிக்கு வளர்ச்சி நிலை உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பூமி தோன்றிய நாள் கொண்டே இந்தப் பூமிக்கும் ஓர் எண்ண நிலையுண்டு. இரண்டு ஆத்மாக்கள் ஒன்றுபட்டு சக்தி நிலையைச் சேமித்து இப்பூமி என்னும் பிம்பத்தை வளர்த்தது என்று ஏற்கனவே சொன்னேன்.
 
ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் கிடைக்கக்கூடிய சக்தி நிலையை வைத்துப் பல நிலைகளிலிருந்தும் பல சக்திகளை ஈர்க்கும் நிலைப்படுத்தி இப்புண்ணிய பூமியைச் சிறுகச் சிறுக வளர்த்து… இன்று இப்பூமியே தன் எண்ண நிலையில் தானே கற்றும் நிலையில் உள்ளது.
 
பூமி வளர்த்த உயிரணுக்களின் சுவாச நிலையுடன் தன் சுவாச நிலையைக் கலக்கவிட்டே இப்பூமியே சுவாச நிலை எடுத்து ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தில் சுழல்கின்றது.
 
இப்பூமியில் உள்ள அனைத்து சப்த அலைகளையுமே இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டேயுள்ளது.
 
சிறு எறும்பு முதற்கொண்டு… எண்ணங்கள் கொண்டு சுவாச நிலையை ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து ஜீவராசிகளின் சுவாச நிலையும்… தாவர வர்க்கங்களின் சுவாச நிலையும்… இயந்திர வர்க்கங்களின் சப்த ஒலியும்… அனைத்துமே இக்காற்றுடன் கலந்து இப்பூமியின் சுவாசத்திற்கு வந்து சென்று கொண்டுள்ளன.
 
இப்பூமிக்கும் ஜீவன் உண்டு… எண்ணம் உண்டு... சுவாச நிலையும் உண்டு. அழியா ஆயுட்காலமும் உண்டு.
 
மாறி மாறிப் பிரளய நிலை ஏற்படுவதெல்லாம் இன்று நாம் எப்படி பிறப்பெடுத்து வாழ்ந்து இவ்வுடல் என்னும் இப்பிம்பம் செயல்படாமல் போகும் நிலையில் நம் ஆத்மா பிரிந்து செல்கின்றதோ அந்த நிலை போன்றது தான்.
 
அதாவது பூமியின் பிரளய நிலையினால்…
1.இப்பூமியின் ஆத்மா ஜீவன் இல்லாமல்… பிரிந்து செல்லாமல்
2.ஜீவனுடனே தன் ஆத்மாவைக் காத்து கொண்டே பிரளய நிலை ஏற்படுத்தி
3.தான் வளர்த்துச் செயலாக்கிய உயிரணுக்களின் மற்ற இயற்கையின் தன்மையைச் சிறிது மாற்றி
4.”பிரளயம்…” என்ற மாற்றத்தினால் சுற்றிக் கொண்டே வாழ்கின்றது.
 
பூமி சுழல இந்தச் சப்த அலைகள்தான் இப்பூமிக்கு உயிர் நாடி. பேரிரைச்சல் கொண்ட இக்கடல் அலைகளும் ஜீவ ராசிகளின் சுவாச நிலையும் இருந்தால்தான் இப்பூமியைச் சுற்றியுள்ள இக்காற்று மண்டலத்திற்கே செயல் நிலை வருகின்றது.
 
பூமி தோன்றிய நாளில்… இன்று இருக்கும் ஓங்கார நாதத்தின் உயிர் நாடியின் சப்த அலையை விட ஒலியின் சப்த நிலை குறைவாகத்தான் இருந்தது. இப்பூமி வளர வளரத்தான் சப்த அலை ஓங்காரமுடன் வளர்ந்து கொண்ட வந்துள்ளது.
 
இப்பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலமும் வியாழன் மண்டலமும் பெரியவை. அவற்றின் சுழலும் வேகமும் இதை விடப் பல மடங்கு அதிகம் என்று உணர்த்தியுள்ளேன்.
 
சூரிய மண்டலத்தில் உள்ள உயிரணுக்களின் தன்மையும் நம் பூமியின் தன்மையும் மற்ற மண்டலங்களின் தன்மையும் மாறு கொள்கின்றது என்று உணர்த்தினேன்.
 
அந்தந்த மண்டலத்தின் சீதோஷ்ண நிலைக்கொப்பத்தான் அம்மண்டலத்திலுள்ள உயிரணுக்களின் நிலையும் இருந்திடும்.
 
எந்த மண்டலத்திலும் உயிரணுக்கள் இருந்து சுவாசம் எடுத்திடாமல் இருந்தால் அந்த மண்டலத்திற்கே ஜீவனில்லை.
1.நடமாடும் பறக்கும் ஊரும் ஜெந்துக்களுக்கு மட்டும்தான் ஜீவன் உண்டு என்ற பொருளில்லை.
2.ஒவ்வொரு மண்டலத்திலும் அம்மண்டலத்துடனே வளர்ந்துள்ள கல் மண் நீர் அனைத்திற்குமே ஜீவனுமுண்டு… சுவாசமுமுண்டு.
 
கல் பேசும் மண் பேசும் என்பதின் பொருளென்ன…? அதனதன் சுவாசமே அதனதன் சொற்கள்தான். சுவாசமில்லாமல் எந்த மண்டலமுமில்லை சுவாசம் எடுத்திடாமல் எந்த உயிரணுக்களும் இல்லை.
 
1.இஜ்ஜீவத்துடிப்பின் ஒலியினால்தான் ஒவ்வொரு மண்டலமும் வாழ்கின்றது
2.நம் பூமியின் சக்தி நிலையும் கூடிக் கொண்டே வருகின்றது.
 
கலியின் பிரளயத்திற்குப் பிறகு வரப்போகும் கல்கியின் வளர்ச்சியிலிருந்து நம் பூமி இன்னும் சக்தி நிலை நிறைந்ததாகத்தான் சுழலப் போகின்றது. இன்று சூரியனின் சக்தியினால் சக்தி கொண்டு சுழலும் நம் பூமியே சூரியனின் நிலைக்கொப்பச் சுழலப் போகின்றது.

ஒவ்வொரு பூமியின் நிலையும் ஒவ்வோர் உயிராத்மாவின் சக்தியினால் செயல் கொண்டு சுழல்கின்றது அதனதன் நிலைக்கொப்ப...!