ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2020

பித்தனைப் போன்று சுழன்று கொண்டிருக்கும் ஈஸ்வரபட்டரின் பூர்வீகம்


நமது குருநாதர் ஈஸ்வரபட்டர்... தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய்ப் பொருளை கண்டுணர்ந்து உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்.

அவர் விண் சென்ற நாள் தான் வைகுண்ட ஏகாதசி. எந்த உடலுக்குள்ளும் புகாது... எதற்குள்ளும் சிக்காது பேரண்டத்தின் உணர்வைத் தனக்குள் உணர்வின் ஒளியாக மாற்றி என்றும் ஏகாந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது குருநாதர்.

அதற்கு முந்திய மகரிஷிகளும் உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

நமது குருநாதர் அவர் வாழ்க்கையில் எத்தனை சரீரங்களை எடுத்தாரோ... எத்தனை வேதனைகளைப்பட்டாரோ... எத்தனை இன்னல்களை அவர் பட்டாரோ... அந்த உணர்வுகளிலிருந்து நீங்கும் எண்ணத்தைக் கொண்டு தான் வளர்ந்தார். ஏனென்றால் அவரும் பல இன்னல்களைச் சந்தித்தவர் தான்...!

மங்களம் என்ற ஊர் ஒன்று உண்டு. அதிலே ஒரு குக்கிராமம் அதாவது கேரளா எல்லையும் கர்நாடக எல்லைக்கு அருகிலே அமைந்தது தான் ஈஸ்வர மங்களா...! என்ற ஊர்.. அந்தக் குக்கிராமம்.

குறைந்தபட்சம் அதிலே பத்து வீடுகள் இருப்பதே அதிகம் தான். ஆக தனித்துத் தனித்து இருக்கும் நிலைகளில் நமது குருநாதரின் பூர்வீகம் அதுவாக இருப்பினும் அவருடைய தாய் தந்தையர்கள் அங்குள்ள ஆலயத்தில் சேவை செய்து பூஜை செய்து அங்கே மந்திர ஒலிகளை ஒலித்துக் கொண்டிருந்தவர்கள்தான்.

அக்காலத்தில் அகஸ்தியன் தனது ஐந்தாவது வயது அடையப்படும் போது தன் அன்னை தந்தையை இழந்த நிலையில் அன்னை தந்தையின் ஏக்கம் கொண்டு இருக்கப்படும் போது அந்த இரண்டு ஆன்மாக்களும் அகஸ்தியன் உடலுக்குள் புகுந்து... அவர்கள் கண்டுணர்ந்த உணர்குகளை எல்லாம் இந்த உடலுக்குள் நின்று அந்ப் பச்சிளங்குழந்தையைக் காத்து மெய் உணர்வைப் பெறும் தகுதி ஏற்படுத்தினரோ அதே போன்றுதான் நமது குருநாதர் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.

குருநாதருடைய தாய் தந்தையர்கள் கோயில்களில் பூஜை செய்து கொண்டிருக்கும்போது இவர் ஐந்து வயது அடையப்படும் போது அவரது அன்னை தந்தை இருவரும் சந்தர்ப்ப பேதத்தால் உடலை விட்டுப் பிரிந்து விடுகின்றார்கள்.

தவித்துக் கொண்டிருந்த இந்தப் பச்சிளங்குழந்தை தன் அன்னை தந்தையைக் காக்க வேண்டுமென்ற ஏக்க உணர்வு கொண்டு ஏங்கிய நிலையில் அந்த ஆன்மாக்கள் இவர் உடலில் புகுந்து விடுகின்றது.

தாய் தந்தையரோ பல மந்திர ஒலிகளை எழுப்பிப் பல யாகங்களும் பல வேள்விகளும் செய்தவர்கள் தான். அந்த உணர்வின் ஞானத்தால் பல உண்மைகளை அறியும் ஆற்றலும் பெறுகின்றார்.

அதன் வழியில் அன்றைய மகாபாரதப் போரின் நிலைகள் எவ்வாறு...? என்று வியாசகர் வெளிப்படுத்திய தத்துவ நிலைகள் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் கவரப்படுகின்றது.

மகாபாரதமும் அதனின் தொடர் வரிசையில்...
1.சாஸ்திரங்களில் கூறப்பட்டிருந்த உணர்வுகள் அனைத்தும் இந்த பிஞ்சு உள்ளங்களிலே கவரப்பட்டு
2.அந்த உணர்வின் துணையால் இந்த பூமியின் எந்த மூலைக்கும் தன்னிச்சையாகச் செல்லும் சக்தியும் திறனையும் பெற்றார்.

அதன் வழியிலேயே தான் அவருக்குள் அன்னை தந்தையரின் உணர்வுகள் இயக்கப் பெற்றுப் “பேரண்டத்தை அறியும் ஆற்றலும்...” அவருக்குள் கிட்டியது.

சாங்கிய சாஸ்திரப் பிடிப்பில் சிக்கிய அந்தக் குடும்பத்தில் அத்தகைய நிலைகள் கொண்டு கண்டுணர்ந்தாலும்...
1.மந்திர ஒலியில் சிக்காது அவருடைய எண்ணங்கள் விண்ணை நோக்கி ஏகி
2.அந்த உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களின் உணர்வினைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார் நமது குருநாதர்.
3.அதுவும் அவருடைய சந்தர்ப்ப பேதங்கள்தான்.

தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு உலகம் எங்கிலும் சுற்றி வந்து... உலகில் உள்ள சாங்கிய நிலைளைத் தனக்குள் கண்டுணர்ந்து... சாங்கியத்தால் பெற்ற அந்த தீமையில் இருந்து விடுபட வேண்டுமென்ற உணர்வினைத் தன்னுள் பதியச் செய்து...
1.விண்ணுலக ஆற்றலைப் பெற்றுணர்ந்த நமது குருநாதர்
2.அந்த உண்மைகள் மக்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும் என்றுதான்
3.பித்தனைப் போலவே அவர் பல காலம் பல நிலைகளிலும் சுழன்று கொண்டுள்ளார்...!