ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2020

தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள் - ஈஸ்வரபட்டர்

 

தீப ஜோதியைக் கண்டிடவே தீபங்களை ஏற்றி வைத்து புனித  நன்னாளாய்க் கார்த்திகைத் திருநாளைத் தீபத்தின் ஜோதியிலே ஜோதியாய் வணங்குகின்றீர்.
 
தீபம் ஏற்றி வணங்கிடும் நாளில்…
1.தீப ஜோதியையே உம்முள் ஐக்கியப்படுத்திடும்
2.ஜோதி தீபங்களாய் வாழ்ந்திடும் “எண்ண தீபத்தை ஏற்றிடுங்கள்…!”
 
எண்ணெயும் திரியும் ஏற்றுவதற்குத் தீக்கோளப் பெட்டியும் செயற்கை கொண்டு தீபம் ஏற்றி தீப விழாவாக்கி மகிழ்ந்திடும் நன்னாளை…
1.என்றுமே தீபமாய்ச் சுடர்விடும் ஆத்ம விளக்கை
2.”எண்ண தீபத்தில் இயற்கையின் சக்தியில் கலக்கவிடுங்கள்…!”
 
நம் பூமியின் ஒலியினால் ஒளியாகி ஒளியுடனே வாழ்ந்துள்ள நாம் நம்மைப் போன்ற ஒவ்வொரு மண்டலமும் ஒலி கொண்டு ஒளி பெற்று வாழ்வதைப் போல்…
1.மற்றச் சாதனங்களினால் எரிந்து ஒளிவிடும் ஒளியாய் இல்லாமல்
2.தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள்.
 
சூரியனும் மற்ற அனைத்து மண்டலங்களும் தானாகவே தன்னுள்ளேயே ஒளியினால் ஒளி பெற்றுச் சுற்றிடும் ஜோதி மயம் போல் ஒவ்வோர் ஆத்மாவுமே…
1.அவரவர்களின் ஆத்மாவுடன் ஜோதியின் சக்தியைப் பெற்று
2.ஜோதி  மயமான ஜோதியுடனே கலந்தும் தனிப்பெரும் சக்தியினைப் பெற்றிடலாம்.
 
நம் ஆத்மாவிற்கு உள்ள சக்தியினை நாம் உணர்ந்திடல் வேண்டும். நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும். ஆனால் நம் சக்தியை நாம் அறிந்திடாமல் பல தீய சக்திகளுக்கு நம்மை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்.
 
1.வாழ்க்கையுடனே தியான வழியின் ஜோதித் தொடரை வளரவிட்டு வாழ்பவருக்கு
2.நம் ஆத்ம ஜோதியின் சக்தியினைப் பூர்ணமாக அறிந்திடும் சக்தி நிலை வந்தடையும்.
 
வாழும் காலம் குறுகியதுதான்…! “மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் காலத்தில்தான்…” நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் கிட்டுகின்றது.
 
உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களுக்கு… ஆத்ம வளர்ச்சி வளர்ச்சி என்பது சக்தி நிலை கூடிடும் நிலையில்லை. உடலுடன் கொண்ட ஆத்மாக்களினால்தான் வாழ்ந்திடும் பக்குவத்தில் ஆத்மாவை ஜோதியாக்கிட முடிந்திடும்.
 
வாழ்வும் சாவும் என்ற இரண்டு நிலைகளைத்தான் உணர்ந்துள்ளோம்.
1.பிறந்த பின் நம் நிலையை நாம் உணரப் போகின்றோமா…? என்ற பக்குவம் பெறாத நிலையில்
2.நாம் பிறப்பதுவே நம் தாய் தந்தையரின் நிலையினால் வந்தது...
3.நாமாகப் பிறவிக்கு வரவில்லை… ஆகவே வாழும் காலத்தை அனுபவித்து வாழலாம் என்றெல்லாம்
4.நம் ஆத்ம சக்தியைப் புரிந்திடாமல் எண்ணி வாழ்ந்திடும் நாம்
5.இனி வரும் காலத்தை நாம் எடுத்திடும் சுவாச நிலையின் ஒளியினால்
6.நம் ஆத்மாவை ஒளி கொண்ட ஒளியாக்கித் தீப ஒளியாக வாழ்ந்திட வேண்டும். 

எமது அருளாசிகள்…!