ஒரு குழந்தை அழகாகப் பிறக்க வேண்டுமென்றால்… அருள் ஞானியாகப் பிறக்க
வேண்டுமென்றால்… அதற்குண்டான உவமையும் அழகுபடுத்த தெய்வாம்சம் கொண்ட படங்களை வீட்டிலே
வைத்து மெய் ஞான அறிவுப்படி கருவுற்ற பெண்களை அதை உற்றுப் பார்க்கும்படி
செய்தார்கள் ஞானிகள்.
சரஸ்வதி படத்தை உற்று நோக்கி… “கல்வியில் சிறந்தவர் கருத்தறியும் உணர்வுகள்
கொண்டவர் இசையில் வல்லவர்” என்ற இந்த உணர்வின் தன்மையை எண்ணி எடுக்கும்படி
செய்தனர்.
இலட்சுமி படத்தை உற்று நோக்கி… “அழகையும் செல்வத்தையும் செழிப்பையும்”
எண்ணி எடுக்கும்படி செய்தனர்.
பராசக்தி படத்தை உற்றுப் பார்க்கும் பொழுது “சர்வத்தையும் தனக்குள்
உருவாக்கும் உணர்வுகள் உண்டு” என்று அந்த ஆற்றல்களை எண்ணி எடுக்கும்படி செய்தனர்.
இந்த மூன்று படங்களை ஒன்றாக இணைத்து… ஒன்று இசை இன்னொன்று அழகு செல்வம் மற்றொன்று
சக்தி என்று எண்ணி எடுக்கும் நிலையில்… எந்த குணத்தின் தன்மையோ அதை இலட்சுமி
தனக்குள் அதை வளர்த்துக் கொள்ளும் என்று காட்டுகின்றார்கள்.
1.அதாவது உயிரிலே ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும்…
2.உணர்வின் தன்மை எதை இசையோடு இணைக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மையைக்
கருவாக்கும் என்றும்
3.ஈர்க்கும் உணர்வுகள் உயிரிலே மோதும் போது அதிலிருக்கும் வெப்பத்தின் தணல்
கொண்டு ஒன்றென இணைந்து
4.”அந்த உணர்வின் தன்மைகள் கருவாகும்…” என்பதை நினைவுபடுத்தி
5.சாதாரண மக்களுக்கும் தன் குடும்பத்தில் தன் கருவிலே விளையும் சிசுக்களை
6.அருள் ஞானக் குழந்தைகளாக வளர்த்திட ஞானிகள் தெளிவாக்கினார்கள்.
வீட்டிலே இத்தகைய தெய்வப் படங்களை வைத்து அதிலே சூரிய ஒளிக்கதிர்கள்
படும்போது அந்த நிலைகள் அலைகளாகப் படர்கிறது.
அதை உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த அலைகளை நாம் நுகர நேர்கின்றது.
நுகர்ந்தது நம் உயிரிலே படும்போதுதான் அந்த படத்தையே… அந்த அழகையே… ரசிக்கும்
தன்மை நமக்குள் வருகின்றது.
இத்தகைய நிலைகளை கருவுற்ற தாய்மார்கள் நுகர்ந்து கருவிலே வளரும் சிசுக்களை அழகாகவும்
அருள் ஞானியாகவும் உயர்ந்த குணங்களை வளர்ப்போராகவும்… இப்படிப்பட்ட உயர்ந்த நிலைகளைத்
தனக்குள் உருவாக்கும் சக்தியாகப் பெறுவதற்காக இந்த மூன்று படங்களையும் வைத்தனர்
ஞானிகள்.
அந்தப் படங்களைப் பார்க்கும் போது அதில் உள்ள கருத்தை எண்ணத்தால் தனக்குள்
கருவாக்கி… கர்ப்பமுற்ற அந்தத் தாயை எண்ணும்படி செய்கின்றனர்.
அதே போல் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் கருவில் வளரும் சிசுவிற்கு
அந்த ஆற்றல் பெற வேண்டுமென்று இந்த உணர்வின் தன்மையை உருவாக்கப்படும்போது கருவிலே
வளரும் அந்த சிசு அழகாகவும் அருள் ஞானியாகவும் கருத்தறிந்து செயல்படும்
சக்தியாகவும் வளர்கின்றது.
1.நல்லதை உருவாக்கும் அணுக்கதிர்களை எடுத்து…
2.கருவில் வளரும் சிசுக்களை மெய் ஞானிகளாக வளர்க்க முடியும் என்று தான்
3.வீட்டிலே இததகைய படங்களை வைக்கச் சொன்னார்கள் ஞானிகள்.
ஆனால் அழகான படத்தைப் பார்த்து… அருள் ஞானத்தை எண்ணி எடுப்பதற்குப் பதில்… குடும்பத்தில்
இருக்கும் சங்கடங்களையும் வேதனை கொண்ட இசைகளையும் இணைத்து… இந்த உணர்வுகளைக்
கருவுற்றிருக்கும் தாய் நுகர்ந்தால் என்ன ஆகிறது…?
கருவிலிருக்கும் அந்த சிசுவிற்கும் இதே சங்கட அலைகள் இணைந்து அதனுடைய அழகான
ரூபங்கள் தொலைந்து… சிந்திக்கும் உணர்வுகளும் இழக்கப்பட்டு
1.குழந்தை பிறந்த பின் வெறுப்பும் வேற்றுமையும் கொண்டு
2.மேனியில் அழகு குறைந்த நிலைகளாகவும் சில குடும்பங்களில் இப்படி வளர்கின்றது.
ஆக.. இது போன்று ஆகாதபடி நல்லொழுக்கப்படுத்த அன்று தத்துவ ஞானிகள் இப்படி எத்தனையோ
வழிகளை நமக்குக் காட்டியுள்ளார்கள்.
நம் வீடுகளில் சாமி படங்கள் பலவும் உண்டு. அதனை வைத்துப் பூஜிக்கும்
அனைவரும் எப்படிப் பூஜிக்கின்றோம்…?
குடும்பத்தில் கஷ்டமாக இருந்தது என்றால் அந்தக் கஷ்டத்தையே சொல்லி வழிபடுவர்.
நான் உன்னையே எண்ணி நாள் முழுவதும் வழிபடுகின்றேன்… எனக்கு ஏன் இந்தச் சோதனை…?
என்ற உணர்வுகளைத் தான் நாம் எண்ணுகின்றோம்.
இந்த நிலையில் நாம் எண்ணிய வேதனை உணர்வுகளை நமது உயிர் “ஓ…” என்று அணுவாக
மாற்றுகின்றது. “ம்…” என்று உடலாக மாற்றுகின்றது.
1.நாம் வளர்த்த அந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் ஆண்டவனாக ஆண்டு கொண்டு
இருக்கின்றது
2.மீண்டும் அதை எண்ணும்போது அந்த உணர்வை இயக்கி நமக்கே உணர்த்துகின்றது
நமது உயிர்.
3.உயிரின் வேலை அதுதான்...!
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் கொடுத்த நல்வழிகளை
வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.