ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2019

துருவ நட்சத்திரத்தை இடைமறித்து அதன் சக்திகளைப் பெறுதல் வேண்டும்


மகரிஷிகள் இந்த உலகப் பற்றை உடலின் பற்றை விட்டு உயிரின் பற்றிலே விண் சென்றவர்கள்.
1.உயிரின் சேர்க்கை
2.உயிர் ஒளியால் உணரப்பட்ட உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றப்படும் பொழுது
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக ஆனவர்கள் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் வழியில் குருநாதர் காட்டிய இந்த நெறியை நாம் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

ஏனென்றால் விண்ணுலக ஆற்றலை இந்த மண்ணுலகில் வந்து அதனைத் தனக்குள் கண்டான் விஞ்ஞானி. மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான்.

ஆனால் அதே சமயத்தில் ஒரு இராக்கெட்டை ஏவும் போது இந்த பூமியின் ஈர்ப்பு நிலை சுற்று அதைப் போல பன்மடங்கு வேகத் துடிப்பினை உந்து விசையாக அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்துச் சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே மிதக்கும் நிலை வருகின்றது. எந்த வேகத் துடிப்பின் நிலை கொண்டிருக்கின்றானோ அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக ஆற்றலையும் அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்ததையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

1.ஈஸ்வரபட்டர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் (ஞானகுரு) இணைத்தார்.
2.நான் உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.

அணுவின் ஆற்றலை தனக்குள் அறிந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதையும் சேர்க்கின்றார்.

நமது பூமி தனக்குள் இழுக்கும் போது இடைமறித்து உணர்வை நுகர்ந்து அந்த வலுவை பெறுகின்றார். அதனால்தான்
1.காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை இடைமறித்து
2.அதிலிருந்து வரும் சக்திகளை அந்த வழிகளில் உங்களை சேர்க்கச் சொல்வது.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அங்கு இருக்கும் பொருள் தெரிவது போல் அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகளை நமக்குள் ஒளியாக மாற்றும்போது
1.நம்மை அறியாது பிறிதொரு உடலில் விளைந்த உணர்வுகள்
2.நம்மை எப்படி இயக்குகின்றது என்பது தெரிகின்றது.

திடீரென்று ஒருவர் ஏதாவது சொல்லி விட்டார் என்றார் நம்மால் அடக்க முடிகின்றதா...? இல்லையே...!

ஏனென்றால் அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்தபின் நம்மை எப்படி இயக்குகின்றது என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இதைப் போல அந்த மகரிஷிகள் உணர்வுகளை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் போது நமக்குள் அந்த உணர்வின் இயக்கத்தையும் உணர முடிகின்றது

நம் தெளிந்த அறிவு மறைக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. இருளிலிருந்து விடுபட முடியாத போது அந்த மகரிஷிகளின் அருள் ஒளி கண்டபின் இருளிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கின்றது.
1.அதனால்தான் உங்களை அதிகாலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும்
2.அந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்வதும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?

நம் நினைவினை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். மகரிஷிகளின் உணர்வின் ஒளிகளை எடுத்து நமது உயிருடன் ஒன்றச் செய்து நமது உடலிலுள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

1.உயிரிலே நம் குருநாதர் கொடுத்த அச்சக்தியை எண்ணி
2.உள்முகமாக உடலுக்குள் செலுத்தி
3.ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.