ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 23, 2019

இந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…?


நம் வாழ்க்கையில் “நமக்கு இப்படியெல்லாம் ஒருவன் துரோகம் செய்தான்… அவனை விடுவதா…?” என்று இறுக்கப் பிடித்துக் கொண்டால் இந்த உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்வோம்.
1.அந்த உடலுக்குள் சென்று நோயைத்தான் உருவாக்குவோம்.
2.பின் அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலை நம் உயிர் உருவாக்கிவிடும்.

அதே போல் நம் பையன் மேல் அதிகப் பற்றும் பாசமாக இருந்தால் அவன் வழியில் அவன் உடலுக்குள் சென்றுவிடும். ஏனென்றால் தன்னுடைய குழந்தைகளின் மீது மிகுந்த ஆசையாக இருக்கும் பொழுது சந்தர்பப்பத்தால் ஏற்பட்ட இன்னல்களால் “தன்னால் முடியவில்லை” என்ற நிலையில்… தாங்காதபடி தற்கொலை செய்து கொண்டால் அந்த நிலை ஆகிவிடும்.

எந்தக் குழந்தை மீது பாசமாக இருக்கின்றதோ அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று தற்கொலை செய்யும் பொழுது “எத்தனை வேதனை இருந்ததோ” அதை எல்லாம் அந்தக் குழந்தை உடலிலும் உருவாக்கும்.
1.குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று உருவான அந்த நல்ல உணர்வுகள்
2.கடைசியில் குழந்தையைக் காக்க முடியாது போய்விடுகின்றது.
3.(இதை எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்)

ஏனென்றால் இன்று தீவிரவாதம் என்ற நிலையில் உலகம் முழுமைக்குமே விஷத் தன்மை பரவியிருக்கும் நேரத்தில் வெறித் தன்மையாகப் பிறரைத் தாக்கிக் கொல்லும் உணர்ச்சிகளே அதிகமாகின்றது.

அந்தக் கொல்லும் உணர்ச்சிகள் உடலிலே சேர்க்கப்படும் பொழுது மனித நிலையையே இழக்க நேர்கின்றது. மிருகங்கள் மற்றதை அசுரத்தனமாகத் தாக்கிக் கொல்வது போல் இந்த அசுர உணர்வுகளை உடலில் சேர்த்தவுடனே அசுர உணர்வின் அணுக்கள் நமக்குள் அதிகரித்துவிடுகின்றது.
1.மனிதனுடைய சிந்தனை இழக்கப்பட்டு
2.மனிதனும் மிருகச் செயல்களைச் செயல்படும் தன்மைக்கே இன்று மாறிவிட்டான்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட உணர்வுகள் அனைத்தும் அதே சமயத்தில் மதம் இனம் மொழி என்ற நிலைகளால் தீவிரவாதம் என்று ஏற்பட்ட விளைவுகளாலும் உடலுக்குப் பின் நாம் மிருகங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.
1.இன்று நாம் மனிதனாக இருந்தாலும் மனிதனின் உணர்வுகள் இழக்கப்பட்டு
2.மிருகத்தின் உணர்வுகளாக மனிதன் இப்பொழுது இயக்கும் காலமாக மாறிவிட்டது.

இதைப் போன்ற நிலைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கிலிருந்து ஆறு மணி வரையிலும் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை முறைப்படி துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து வாழ்க்கையில் அவ்வப்பொழுது வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தால் அது நமக்குள் உட்புகாது தடுத்துப் பழகுவதே துருவ தியானத்தின் நோக்கம்.

ஆகையினால் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் கஷ்டங்களைக் கேட்டறிந்தால் அறிந்தபின் உடனே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் செலுத்திவிட்டு
2.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
3.எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்கி ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்தித் தியானித்தால்
4.நம் உடலில் உள்ள அணுக்கள் மற்றவர் சொல்லும் கஷ்டமான உணர்வுகளை நம் உடலில் சேராது அது நீக்கிவிடும்… சுத்தப்படுத்திவிடும்…!

அதற்குப் பின் யார் கஷ்டம் என்று சொன்னார்களோ அவர் உடலிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாய்ந்து அவர் உடலில் உள்ள கஷ்டங்கள் நீங்கி அவர் உடல் நலம் பெறவேண்டும் அவர் குடும்பம் நலமாக வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும்.

1.இதை நாம் வைராக்கியமாகச் செயல்படுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகின்றது.
3.அதே சமயத்தில் நமக்கும் நல்லதாகின்றது.
4.நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்து விடுகின்றது.
5.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நிலை பெறுகின்றோம்.