ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2019

விமான விபத்திலிருந்து எல்லோரையும் காப்பாற்றிய அனுபவம் – நடந்த நிகழ்ச்சி


குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய வழியில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சமயம் நான் (ஞானகுரு) பத்ரிநாத் போய் விட்டு வந்து கொண்டிருந்தேன்.

எனது நண்பர் என்ன செய்தார்...! சென்னைக்குப் போகலாம்...! என்று சொல்லி என்னைக் கூட்டிக் கொண்டு போகிறார். என் கையில் பணம் இல்லை.

டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். விமானம் டெல்லியை விட்டுப் புறப்பட்டு மேலே பறந்து சென்று சிறிது நேரம் தான் இருக்கும்.
                                         
அந்த விமானிக்கும் தெரியவில்லை. அந்த நேரத்தில் எப்படி... என்ன ஆனது... என்று தெரியாதபடி “கிர்...ர்ர்...” என்று எவ்வளவு உயரத்தில் மேலே போனதோ அதே வேகத்தில் “கிர்...ர்ர்...” என்று விமானம் கீழே இறங்குகிறது.

அப்பொழுது குருநாதர் அங்கே அதனுடைய இயக்கங்களைச் சொல்கிறார். இயற்கையின் நியதிகளில் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த இருபத்தியே ஏழு நட்சத்திரங்களும் இருபத்தியேழு விதமான உணர்வுகளை எடுத்துக் கொள்கிறது.

ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் துகளும் இன்னொரு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் அது பிரபஞ்சத்தில் பூமிக்கு வெளியே மோதினால் அது ஆவிகளாக மாறப்படும்போது எந்தெந்தக் கோள் அந்தப் பாதையில் வருகின்றதோ அதனின் சத்தை அது எடுத்துக் கொள்கின்றது

ஆனால் எதிர்நிலையான நட்சத்திரங்களின் துகள்கள் வரப்படும்போது அது ஒன்றோடு ஒன்று மோதினால் என்ன ஆகின்றது...?

நம் பூமியில சூறாவளி என்று சொல்கிறோம் அல்லவா...! இதே போல் நம் பிரபஞ்சத்திற்குள்ளும் சூறாவளி உண்டு. அதைத்தான் அங்கே காட்சியாக உணர்த்துகின்றார் குருநாதர்.

பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் மேலே செல்லப்படும் பொழுது அங்கே அனுபவரீதியிலே காட்டுகின்றார்.
1.அங்கே எதிர்மறையான நட்சத்திரங்களின் உணர்வலைகள் அதிகமாகப் பரவி இருக்கும்போது
2.ஈர்க்கும் காந்தம் அங்கே குவிந்திருக்கின்றது.
3.விமானம் அந்த இடத்தின் அருகிலே சென்றதும் குவிந்த நட்சத்திரத்தின் அலைகள் கிர்...ர்ர்..! என்று கீழே இழுத்துக் கொண்டு போகிறது. (அந்த நேரத்தில் காட்டுகின்றார் குருநாதர்)

அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அத்தனை பேரும் அப்படியே கதிகலங்கிப் போனார்கள்.
1.எல்லோரும் சத்தம் போட்டார்கள்...!
2.நான் அசையாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன்.

ஏதாவது அசம்பாவிதங்கள் ஆனால் விமானத்தை ஓட்டுகிறவர்கள் பயணிகளுக்குத் தைரியத்தைச் சொல்வார்கள். ஆனால் திடீரென்று இப்படி ஆனவுடனே விமானி (PILOT) முதல் எல்லோரும் கதிகலங்கிப் போனார்கள்.

வானியலை முன் கூட்டியே அறிந்து தான் விமானத்தை ஓட்டுகின்றனர். ஆனாலும்
1.சில பகுதிகளில் இதே மாதிரி மற்ற நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகரித்து
2.அதாவது எதிர்மறையான நட்சத்திரத்தின் துகள்கள் நம் பூமியின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டால்
3.அது மின் கதிர்களாக மாற்றப்படும் போது இது எதிர் நிலை ஆகிச் சுழல் காற்றாக மாறுகின்றது.
4.அப்படிப்பட்ட சுழல் காற்றுக்குள் நேராக விமானம் போகும் போது
5.ஒரு நொடியில் கீழே இறக்குகின்றது...! என்பதை அனுபவமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நம் குருநாதர் சாதாரணமானவர் அல்ல...!
1.பைத்தியக்கான் தான்...!
2.கிழிந்த வேஷ்டியைத் தான் கட்டி இருந்தார்.
3.ஒவ்வொரு நொடியிலும் இந்த நிலையைக் காட்சி கொடுத்து உபதேசித்துக் கொண்டே வந்தார்
4.அந்தச் சந்தர்ப்பம் நான் தெளிவாகிக் கொண்டேன். அதனால் சிரித்துக் கொண்டே இருந்தேன்.

கடைசியில் விமானம் வர வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக வந்து இறங்கியது. அங்கே இறங்கியவுடன் எல்லாரும் சேர்ந்து என்னிடம் வந்து
1.நீங்கள் ஏன் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்...? என்று கேட்டனர்.
2.நீங்கள் சிரித்துக் கொண்டு உட்கார்ந்ததைப் பார்த்தால்
3.நீங்கள் எங்கள் கூட வந்ததால் தான் நாங்கள் தப்பித்தோம் என்றனர்.

விமானத்தில் வந்த எல்லோரும் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். விமானத்திலிருந்து நான் கீழே இறங்கி வர முடியவில்லை.

ஐயா எனக்கு ஒன்றும் தெரியாது...! என்று நான் சொன்னேன்.

இல்லை இல்லை...! விமானம் கிர்... என்று கீழே இறங்குகிறது. நீங்கள் மட்டும் சிரிக்கிறீர்கள்.. உங்களிடம் ஏதோ சக்தி இருக்கிறது...! என்று என்னைப் பிடித்து கொண்டார்கள்

ஆனால் எனக்குத் தெரியாமல் குருநாதர் என்னை அப்படி அங்கே இயக்கினார். அனுபவரீதியில இதை அந்தச் சந்தர்ப்பத்தில் உணர்த்திக் காட்டினார்.

விமானத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு நுட்பமாகச் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தில் இதைப் போன்ற விபத்துக்கள் நிறைய ஏற்பட்டு விடுகிறது.

குருநாதர் காட்டிய வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டால் நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சக்திகள் நம்மை நிச்சயம் காக்கும்...!

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இந்த அனுபவத்தை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).