ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2019

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றான்...?


நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே.. அண்டமே... அகண்ட நிலைகள் கொண்டிருப்பினும் அது “இருண்ட நிலைகள் கொண்டது தான்...!”

1.ஒரு வீட்டைத் தொடர்ந்து சில நாள்கள் அடைத்து வைத்திருந்தால்
2.அதற்குள் தன்னிச்சையாக வெப்பமாகி அதில் ஓர் ஆவி போல் உருவாகும்.
3.அந்த ஆவி நாளடைவில் ஒரு நெடி கலந்த “விஷத் தன்மை” அடைகின்றது.

இதைப் போல் தான் பேரண்டம் அகண்ட நிலைகளில் இருக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது. அந்த வெப்பத்தின் தணலால் அது ஆவியாக மாறி “அடர்த்தி ஆகி விஷத்தின் தன்மை” அடைகின்றது.

அடுத்தடுத்து இந்த விஷத்தின் தன்மை ஆகி அதனால் ஆவியின் தன்மைகள் வரப்படும் பொழுது
1.இந்த விஷத்தின் தன்மை மீண்டும் தாக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது.
2.வெப்பத்தின் தன்மை அடையும் பொழுது நகர்ந்து ஓடுகின்றது.
3.ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தம் என்ற நிலை வருகின்றது.

முதலில் வெப்பம்... பின் ஆவியின் நிலை நாளடைவில் விஷமாகி... மீண்டும் சாந்த நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது இது அணுக்களாகப் பிரிந்து சென்ற பின்
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற இந்த மூன்று நிலை பெறுகின்றது.
2.இதைத் தான் மும்மலம் என்று சொல்வது.
3.ஆதிபராசக்தி என்பது வெப்பம்... ஆதிலட்சுமி என்பது காந்தம்... ஆதி சக்தி என்பது விஷம்.
4.விஷத்தின் தன்மை கொண்டு இப்படி மூன்று சக்திகளாக இயங்குகின்றது.

இருப்பினும் அணுத் தன்மை பெற்ற பின் இதைப் போன்று ஒரு உணர்வின் சத்து உருவாகிறது என்றால் காந்தம் தன்னுடன் அதை இழுத்த பின் மோதுகின்றது.

மோதிய நிலைகள் கொண்டு அது தன்னுடன் இணைத்த பின் அந்தச் சத்தின் தன்மை இரண்டறக் கலந்து விடுகின்றது.
1.அந்தச் சத்திற்குப் பெயர் சீதா என்றும்
2.அந்த மணத்திற்குப் பெயர் ஞானம் என்றும்
3,.இந்தச் சத்து தன்னுடன் இணைத்து இரண்டறக் கலந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்
4.”பிரம்மா உருவாக்குகின்றான்...!” என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் சத்து ஞானம் என்று இப்படி ஐந்து நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது. எந்த மணத்தை இதனுடன் இணைத்ததோ “புலனறிவு ஐந்து...!” என்று ஆகின்றது.

எதற்குள் சென்றாலும் அதன் வலு கொண்டு தனக்குள் இருக்கும் அந்த மணத்தை இயக்கும் என்று பொருள் படும்படியாக நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. இப்படி உருவானது தான்... எல்லாமே...!

ஏனென்றால் கடவுள் எப்படி இருக்கிறான் என்ற நிலையில் நாம் தெரிந்து கொள்வதற்குத்தான்...
1.கடவுள் எங்கேயோ இருக்கின்றார்...
2.அவரே தான் நம்மைக் காக்கின்றார்...! என்ற நம்பிக்கை தான் மனிதர்களிடத்தில் இருக்கின்றது.

ஆனால்
1.உணர்வின் தன்மை ஒன்றுக்குள் ஒன்று உள் நின்று இயக்கும் நிலை தான் கடவுள் என்றும்
2.ஒன்றினுள் ஒன்று இணைக்கப்படும் பொழுது உருவாவது ஈசன் என்றும்
3.ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் பொருள் பரப்பிரம்மம் என்றும்
4.இப்படி இயற்கையின் நிலைகள் எப்படி உருவாகிறது என்ற நிலையைத் தெளிவாக்கியது ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தான்.
5.அந்த அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் இப்பொழுது அதை நான் (ஞானகுரு) பேசுகிறேன்.

அகஸ்தியன் தனக்குள் கண்டறிந்து அவனுக்குள் விளைந்து வெளிபட்ட அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இங்கே படர்ந்திருக்கின்றது.

அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. நீங்களும் அதை நுகரலாம்.
1.இந்த உலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து
2.அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது பெற முடியும்.
3.அதைத்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று சொல்வது.
4.தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லோராலும் பெற முடியும் என்பதே அதனின் தத்துவம்.

இப்பொழுது ஒருவர் திட்டிவிட்டார் என்றால் “என்னைத் திட்டுகிறான்...! என்ற எண்ணத்தைப் பதிவு செய்துவிட்டால் மீண்டும் என்ன செய்கிறீர்கள்...?

என்னைத் திட்டினான்.. திட்டினான்... திட்டினான்...! என்றால் அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி அவன் மேல் வெறுப்பாகி நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்குள்ளும் வெறுப்பின் தன்மை கலந்து இரத்தக் கொதிப்பு போன்ற பலவிதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

ஆகவே ஒரு திட்டியவனின் உணர்வைக் கவர்ந்து பதிவாக்கி அதை நினைவாக்கும் பொழுது நோயாக உருவாவது போல்
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.இயற்கை எப்படி விளைகின்றது என்ற உண்மைகளையும் பதிவாக்கிக் கொண்டு
3.மீண்டும் அதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.நாமும் அந்த அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும்.
5.அதற்காக வேண்டித்தான் இதை உபதேசிக்கின்றோம்.