சூரியனை மையப்படுத்திக் கொண்டு பூமி சுழன்று ஓடும்
நிலையில் ஏற்படும் இயற்கையின் பருவ மாற்றங்களின் செயலால் பரவெளியில் படர்ந்துள்ள அமில
குணத்தன்மைகளைப் பூமி தன் ஈர்ப்பின் சுவாசம் கொண்டு ஈர்த்துக் கொள்கிறது.
அவ்வாறு பூமி தன்னை வளர்ச்சிப்படுத்திடும் செயலில்
எண்ணம் கொண்டே ஆத்மாவாக உயிரணுக்கள் பல பிறப்பிற்கு வருகின்றன.
1.ஜீவன் என்ற சரீர பிம்பம் பெறும் இந்த உயிராத்மா
2.இயற்கையின் கதியில் சரீரம் கொண்டு வளர்ச்சி கொள்ளும்
செயலின் தொடராக இருந்தாலும்
3.தான் பெற்ற இந்தச் சரீரத்தையே “இறப்பு…” என்ற
கதி நிகழ்வுக்கு உட்பட்டே வினைச் செயல் புரிகின்றது.
இது எல்லாம் தன்னை உணர்ந்திடும் பக்குவமாக இயற்கையின்
கதியைத் தன்னுள் கண்டுணரச் செய்திடும் தெளிந்த உயர் ஞானமாக மெய் ஞானமாக ஞானிகளால் உலகினுக்குப்
போதனைகளாகக் கொடுக்கப்பட்டது.
ஒரு உயிரணு சிசுவாக வளர்ச்சி கொண்டிடும் காலத்தில்
தான் கொண்ட எண்ணத்தின் செயலில் உணர்வுகளாகத் தாய்மை கொண்ட எண்ணமுடன் தன் உணர்வுகளையும்
கூட்டித்தான் உருவத்திற்கு வருகின்றது.
அந்த உருக்கோலம் கொள்ளும் பிம்பத்திற்கு வேண்டிய
ஆகாரத்தைத் தாயின் இரத்த நாளங்களுடன் ஒன்றியே எடுத்து வளர்த்துக் கொள்கிறது.
பஞ்ச பூதங்களின் அமைப்பாகத் தனக்கு ஒவ்வொரு அவையங்களும்
அமைவு கொள்ள தாயின் ஆகாரத்திலிருந்து அமில குணத் தன்மைகளை ஈர்த்துக் கொள்கிறது.
எந்தத் தாயின் சரீரத்தினுள் இணைந்து தன்னை உருவாக்கிக்
கொள்கின்றதோ அந்தச் சரீரத்தினுள் அமைத்திட்ட சகல நாடிகளில் ஓடிடும் சுவாசத்தின் செயல்
தன்மைகளையும் ஈர்த்து சிசு முழுமை பெறுகிறது.
முழுமை பெற்ற பின் தாயின் உடலிலிருந்து வெளியேறும்
உந்துதலை உணர்த்தி அந்த உந்துதலின் செயலைத் தாய்கும் ஊட்டுகின்றது.
அந்த உந்துதலில் தாயின் சரீரத்தில் செயல்படும் நாடிகளில்
உலவிடும் மறைமுகக் காற்று ஒன்று பிறப்பின் செயலுக்குத் துணை புரிந்து சிசு வெளியேற
உதவிடும் செயல் முறை உள்ளது.
ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற இந்த முத்தொடரின்
சூட்சமத்தை இயற்கையின் கதியில் அறிந்து கொள்ள வேண்டும்.
1.பூமித் தாயின் செயலுக்கும்
2.பூமி ஈர்த்து வெளிக்கக்கும் சுவாச அலைகளில் பூமியினுள்
நிறைந்திருக்கும் காற்றின் தொடர்பிற்கும்
3.பற்பல செயல்கள் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது.
கடல் நீரிலிருந்து உப்பு விளைவதுவும் கற்பபறைகளின்
முதிர்விலிருந்து உப்பு வெளிப்படுவதுவும் மண்ணின் குணத்தன்மைகளில் சில இடங்களில் உயர்
அமிலமாகி அதுவே பொருளாக வெளிப்படும் செயலுக்கும் காற்றின் தொடர்பு உண்டு.