ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2019

நம் எண்ணங்களும் குணங்களும் ஏன் மாறுகின்றது..? ஒரே நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும்...?


ஒரு கருடன் தன் இரைக்காகப் பாம்பை எடுத்துத் தூக்கிச் செல்கின்றது. ஏற்கனவே அது விஷம். இருந்தாலும் இந்தக் கருடன் அந்தப் பாம்பைத் தூக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேதனைப்படும்படி செய்து அதை உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது.

ஆனால் பாம்போ கூர்மையாக அந்தத் கருடனையே உற்றுப் பார்த்து  வேதனை உணர்வைக் கவர்ந்து தன் உடலில் உள்ள அணுக்களுக்குள் அதிகமாகச் சேர்கின்றது.
1.மரணம் அடையும்போது இந்தப் பாம்பின் உயிரான்மா கருடனுக்குள் சென்று
2.அதன் உணர்வைக் கவர்ந்து அதற்குத் தக்கவாறு கருடனாக மாறுகிறது.

அதனால் தான் இந்த மாதிரி விஷத் தன்மையான உணர்வுகளைக் கருடன் சாப்பிட்டாலும்
1.இந்தக் கருடனாக உடல் மாறும் பொழுது
2.விஷம் கொண்ட பாம்புகள் அதைத் தீண்டினாலும் கருடன் மடிவதில்லை.

அதே சமயத்தில் அது உடலில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் உதாரணமாக... ஒரு பாம்பு கீழே போகிறது என்றால் கருடன் பறக்கும் போது அதனுடைய இறக்கையின் காற்றலைகள் பட்டாலே அந்தப் பாம்பிற்கு ஒரு மாதிரி மயக்கம் வரும். இதைக் குருநாதர் காட்டியுள்ளார்.

இதைப் போன்று தான் நம் உடலில் எத்தனையோ பல உணர்வுகள் உண்டு. அதிலே வேதனையான உணர்வுகளை உடலில் உள்ள அணுக்கள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு இருக்கும் போது அடுத்து நாம் நல்ல உணர்வின் தன்மை பெற்றாலும் கூட நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதாவது ஒருவர் மிகவும் வேதனைப்படுகிறார்... சங்கடப்படுகிறார் சலிப்பான நிலைகளில் இருக்கிறார்...! என்றால் அவர்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு நிச்சயம் மயக்கம் வரும்.
1.ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அது வாயுவாக மாறுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது.

அது பரவப்படும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகும் போது விஷத்தின் இயக்கமாக இருப்பினும் அதிகமான விஷத்தின் தன்மை வரப்படும் போது நல்ல அணுக்கள் மயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆக கருடனுடைய உணர்வுகள் பரவப்படும் போது பாம்பினம் கீழே செல்லப்படும் போது அதனுடைய காற்றலைகள் பட்டவுடன் பாம்புக்கு மயக்கம் வருவது போல நமக்கும் அந்த நிலைகள் ஏற்படுகின்றது.

நம் உடலில் உள்ள உணர்வுகள் வேதனைப்படுவோரைக் கூர்மையாகப் பார்த்து அந்த விஷத்தின் தன்மையைக் கவர்ந்த பின்
1.அது நம் உடலில் முட்டையாகின்றது... வேதனை என்ற உணர்வுகள் அந்தக் கருத்தன்மை வளர ஆரம்பிக்கிறது.
2.வேதனைப்படும் உணர்வுகளை அதிகமான ஆகாரமாக அந்தக் கருக்கள் எடுக்கும் பொழுது
3.அது வேதனையான அணுக்களின் பெருக்கங்களாக ஏற்படுகிறது.

அதைக் குறைப்பதற்காக வேண்டித்தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியை உடலுக்குள் சேர்த்துச் சிறுகச் சிறுகக் கலக்கும்படி செய்கின்றோம்.

உதாரணமாக வர்ணங்கள் கொடுக்கும் இடங்களில் ஒரு கலருடன் பல விதமான கலரைச் சேர்க்கின்றோம். அதிலே எந்தக் கலரை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கலரின் ரூபங்களாக  மாற்றுகின்றது.

நீலமும் மஞ்சளும் சேர்க்கப்படும் போது அது ஒரு விதமான பச்சைக் கலராக வரும். நீலமும் ஆரஞ்சும் சேர்த்தால் காப்பிக் கலராக வரும். அதனுடன் வெள்ளையைச் சேர்க்கும் பொழுது வித்தியாசமாக வரும்.
1.இதைப் போன்று தான் நமது சுவாசங்களில் கலர்களின் ஓட்டங்கள்
2.வித்தியாசமாகக் கலந்து பல பல நிலைகள் மாறும்.

அப்படிக் கலக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்களுக்கு எதிர் நிலையான மாற்றமாகி
1.நம் அணுக்களும் வித்தியாசமாக மாறும்.
2.நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

எந்தெந்த குணங்கள் அதிகமாகின்றதோ அதெல்லாம் நம்  ஆன்மாவில் சேர்ந்து விடுகின்றது. மொத்தமாகச் சேர்த்துச் சுவாசிக்கும் பொழுது எதன் வலு அதிகமாக இருக்கிறதோ அதன் வழி நம் உடல்களில் வித்தியாசங்கள் வந்து கொண்டே இருக்கும்.  அப்பொழுது நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

இதையெல்லாம் மாற்றுவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும்.
1.உபதேச வாயிலாகக் கொடுத்த சக்தியை வைத்து
2.அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் சேர்த்துச் சேர்த்து
3.உடலுக்குள் வரும் உணர்வுகளை மாற்றப்படும் போது
4.தீமையான அணுக்களை அதிகமாக வளர விடாது தடுக்க முடியும்.

நம் குணங்களும் எண்ணங்களும் மாறாது எப்பொழுதும் நல்ல உணர்வாக ஒரே நிலையாகக் கொண்டு செல்ல முடியும்.