ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2019

அச்சுறுத்தும் உணர்வுகளிலிருந்து மீண்டு மன பலத்தைப் பெறும் வழி


யாம் (ஞானகுரு) காட்டினுள் இருந்தபொழுது பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும் மற்றவைகள் அஞ்சி ஓடுவதும் சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும் போன்றவைகளைக் கண்டு  யாம் அச்சப்படும் நிலை உண்டானது.

1.அவைகள் செய்த துயர நிலைகளால் துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது...? என்றும்
2.இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்...? என்றும் எமக்குக் குருநாதர் உபதேசித்தார்.

மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வை உன்னிடத்தில் வளர்த்துக் கொண்டால் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள் உன்னைப் பார்த்தாலும்
1.உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு அது அஞ்சி ஓடும்.
2.அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும் அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.

எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும்பொழுது வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல் மற்ற உயிரினங்களுக்கு உண்டு.

இதனை நுகரும் உயிரினம்
1.இவன் நம்மை அடக்கி விடுவான் என்ற உணர்வு கொண்டு அது அஞ்சி ஓடும் என்ற நிலைப்படுத்தி
2.அதை நிதர்சனமாகக் காண்பித்தார் குருநாதர்.

இந்த உண்மைகளைக் குருநாதர் எமக்கு உணர்த்தி எம்முள் உணர்ச்சிகளை தூண்டச் செய்து எமக்குள் இதனின் நினைவின் ஆற்றலைப் பதியச் செய்து அந்தத் துருவ மகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு...! என்றார்.

ஆகவே நாம் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

 இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி
1.நமக்குள் இருக்கும், துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன்
2.மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது
3.அது நம்முள் தீமைகளைக் கவர்ந்திடும் நிலைகளை மாற்றி
4.அருள் மகரிஷிகளின் இனங்களைக் கவர்ந்திடும் நிலை வருகின்றது.

இப்படி மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது. நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது. தெளிந்த மனதின் தன்மை நம்மில் உருவாகின்றது.