ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2019

எண்ணத்தில் பீடித்துள்ள நோய்களை நீக்க நற்சுவாசம் என்ற பரிசுத்தம் (பரிபூரணம்) தேவை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது...” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்...” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை...” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்... “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன...?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.
4.இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்...?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது... அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு...” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றை மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையையும் கூட உயர்வு பெற முடியும்.