ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2019

சிவ தனுசு விஷ்ணு தனுசு - விளக்கம்


நமது வாழ்கையில் இந்த உடலின் இச்சையின் வாழ்கையில் நுகர்ந்த உணர்வெல்லாம் அந்தந்த உணர்வின் எண்ணங்களாக நமக்குள் பாய்கின்றது.

ஒருவனைக் கெடுக்க வேண்டும் என்றால் இது உடலில் இருந்து ஏற்பட்ட அந்த எண்ணத்தின் உணர்வுகள் நினைவாக்கப்படும் போது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இதற்குப் பெயர் சிவ தனுசு. அந்த உணர்ச்சியின் இயக்கமாக மற்ற ஒருவனைத் தாக்கும் நிலை வருகின்றது.

ஆக சிவ தனுசு என்றால்… இந்த உடலைப் பாதுகாக்கும் நிலைகள் பரசுராம். எந்தக் குணத்தின் உணர்வைப் பெருக்கினோமோ இந்த உடலின் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தைத் தேடவும் அதே சமயத்தில் தீமைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அத்தகைய உணர்வுகள் வரப்படும் போது அது நமக்குள் செயலாக்கி அந்தச் சொல்லையும் அந்தச் செயலையும் செயல்படுத்தச் செய்து சிவ தனுசாக மாறுகின்றது.

1.சிவம் என்றால் நமது உடல் என்றும்
2.எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்ச்சிகள் நமக்குள் பாய்ந்தும்
3.அது இயக்கச் செய்யும் பொழுது தனுசு என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

தன்னைக் காத்துக் கொள்ள மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் அவர்களை நம்மிடம் அணுகாத நிலைகள் செயல்படுத்துவது தான் சிவ தனுசு என்றும் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கபட்டுள்ளது.

இதைப்போல அன்று அரசர்கள் தனுர் வேதத்தைப் பயன்படுத்தினார்கள். தனுர் வேதம் என்றால் இன்னொரு மனித உடலில் இருந்து அந்த உணர்வுகளைப் பிரித்து அந்த உணர்வின் தன்மையைத் தான் நுகர்ந்து மற்றவர்கள் மீது பாய்ச்சுவது தான்.

1.யாக வேள்விகளை நடத்தி அதர்வண வேத அடிப்படையில் மந்திரங்களைச் சொல்லி ஏவுவதும்
2.மந்திர ஏவலால் மற்றவர்களைச் செயல் இழக்கச் செய்வதும்
3.மற்றவர்களைச் செயலற்றவராக மாற்றுவதும் போன்ற நிலைகளைச் செயல்படுத்தி வந்தார்கள் அரசர்கள்.

அந்தத் தனுர் வேதம் இல்லாதவர்கள் எந்தப் போர் முறைகளையும் வெற்றி பெற முடியாது என்ற நிலை தான் அக்காலங்களில்.

கொடூர நிலைகளும் கொதித்து எழும் உணர்வுகளும் பிறரை இரக்கமற்றுத் தாக்கும் உணர்வுகளை மனிதனின் வாழ்க்கையில் இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் போது இது சிவ தனுசாக மாறுகின்றது.

உடலில் இருந்து எழும் உணர்ச்சிகள் அந்த உடலை வீரியமாக இயக்கச் செய்து அந்த வீரிய உணர்வு கொண்டு ஒரு மனிதரைத் தாக்குவதும் அவனை மடியச் செய்வதும் அல்லது அவனைக் காணாமல் போகச் செய்வதும் அவர் சொத்துக்களை விரயமாக்குவதும் அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும்  தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை தான் அது…!

உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் அமெரிக்கா தன் ஆயுத நிலைகள் கொண்டு மற்ற நாடுகளை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்றும் அவர்களைப் பலவீனப்படுத்தினால் தான் “தன் நாடு காக்கப்பட முடியும்…!” என்று இன்று செயல்படுகிறது.

இதைப் போன்று சீனாவும் அதனைக் காட்டிலும் வல்லமை கொண்டது என்றும்  அதே போன்று ரஷ்யாவும் அடுத்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் ஒன்றைப் பார்த்து ஒன்று
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை கொண்டு
2.பிறரை வலிமை இழக்கச் செய்ய வேண்டும்..! என்றும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய உணர்வுடன் மனிதன் இயங்கி கொண்டு இருக்கும் நிலையில் விஞ்ஞான அறிவு கொண்டு கடும் விஷத் தன்மைகளை எப்படிப் பரப்புவது…? ஒவ்வொரு நாட்டையும் எப்படி அழிப்பது…? மக்களை எப்படிச் செயலற்றவர்களாக மாற்றுவது…? என்று இன்று வந்து விட்டார்கள்.

ஒரு மனித உடலுக்குள் இருக்கும் உணர்வினை எடுத்து அதை மந்திரங்களாகச் சொல்லிப் பாய்ச்சி ஏவுதல் அழித்தல் கொலை செய்தல் என்று இத்தகைய நிலைகளை வைத்துத் தான் அன்றைய அரசுகள் செய்து வந்தனர்.

இன்று அந்த அரசுகள் எல்லாம் மடிந்து விட்டது.  ஜனநாயகம் என்ற மக்கள் ஆட்சி வந்து விட்டது.

அரசர்கள் வீழ்ந்து மக்கள் ஆட்சி என்று வரப்படும் போது ஆட்சி பீடத்திற்குத் தான் வந்த பின்
1.அந்த ஆட்சியில் தனக்கு அடிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2.தான் தான் எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும்
3.உலக நிலைகளிலேயே நாம் புகழ் பெற வேண்டும் என்று போற்றித் துதிக்கும் உணர்ச்சிகள் அங்கே தூண்டப்பட்டு
4.நாட்டு மக்களைச் சீர்படுத்தும் நிலைகள் அற்று அவர்களைச் சீர் கெடச் செய்து அதற்குக் கீழ் அவர்களை வலு இழக்க செய்து
5.அதன் வழியில் அவர்கள் ஆட்சிகள் புரியும் காலமாக வந்து விட்டது… இது சிவ தனுசாக உருவாகும் இந்த நிலை.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் விஷ்ணு தனுசைப் பயன்படுத்த வேண்டும். நமது உயிர் விஷ்ணு.

விஷ்ணு என்ற நிலையில் இந்த உயிரின் தன்மை கொண்டு உயிரைப் போன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரத்திரமாக இருக்கும் அதனின்று வரும் உணர்வுகள் சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பிரபஞ்சத்தில் பரவுகிறது.

அப்படிப் பரவி வரும் அந்த அலைகளை நான்கு மணியில் இருந்து நமது பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமது பூமிக்குள் பரவச் செய்கின்றது. அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று  நாம் எண்ணத்தால் ஏங்கும் போது அந்த உணர்வுகள் நம் உயிரிலே படுகின்றது. இதற்குப் பெயர் தான் விஷ்ணு தனுசு.

1.துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் தீமைகளை அழிக்கும் சக்தி கொண்டது. நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றது.
2.இந்த உணர்வினை நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதன் வீரிய உணர்வுகள்
3.நம் உடலுக்குள் தீமை செய்யும் உணர்ச்சிகளை அடக்கவும் தீமையான செயல்களைத் தடைபடுத்தவும்
4.அருள் ஒளியைப் பெருக்கச் செய்யவும் என்று அந்த அருள் வழியில் அது வருகின்றது.

பரசுராமன் சீதாராமன் இருவருக்கும் போர் நடந்தது என்றும் பரசுராமன் உடலைச் சமப்படுத்தும் சிவ தனுசை எடுத்தான் என்றும் இராமன் உயிருடன் ஒன்றி ஒளியாக்கும் விஷ்ணு தனுசை எடுத்ததால் இராமன் வென்றான் என்றும் காட்டினார்கள்.

வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளை மாற்றி  ஒளி என்ற ஒரே நிலையில் மாற்றுவது தான் விஷ்ணு தனுசு. ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது தான் நமது உயிர்.

நமது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் உருவாக்கி உடலுக்குள் அதைப் பெருக்கினால் இது விஷ்ணு தனுசு.

பூமிக்குள் பரவி வரும் விஷத் தன்மைகளை நமக்குள் வராது தடுத்து நமது உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போல ஒளியின் தன்மையைப் பெறச் செய்து
1.ஒரு கூட்டமைப்பாகத் துருவ நட்சத்திரத்திம் ஒளிர்வது போல
2.நாமும் இந்த உடலுக்கு பின் ஒளிரும் நிலை பெறுதல் வேண்டும்.