ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2019

மனிதனுக்கு ஜாதகம் உண்டா…?


இன்று வாழும் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களைச் செய்துள்ளனர். விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ சாதனைகளைச் செய்கின்றனர்.

விமானம் பறப்பதற்கு, ஜாதகமா பார்க்கின்றனர்...?

விஞ்ஞான அறிவு கொண்டு மேகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்குமானால் விமானத்தை விடவேண்டாம்...! என்று உணர்கின்றனர். இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு மனிதர் தம்மைக் காத்துக் கொள்கின்றனர்.

1.மனிதர்களுக்கு ஜாதகமில்லை...!
2.எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவர்கள் தான்  ”மனிதர்கள்...!”

ஆனால் மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில் நாம் செயல்பட்டால் நம்முள் பகைமை உணர்வுகள் வராது காக்கலாம்.

நாம் உடல் அழுக்கைப் போக்கச் சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்கின்றோம். இதே போன்று நமது ஆன்மாவில் அறியாது சேர்ந்த அழுக்கை நீக்க வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நம்முள் இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நம்முள் செலுத்தும் பொழுது நமது ஆன்மாவில் தீமைகள் சேராது தடுத்து, ஆன்மாவில் பட்ட அழுக்கை நீக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவ ஆன்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும்.

எங்கள் வாழ்க்கையில் யார், யாரையெல்லாம் பார்த்தோமோ அவர்களுடைய குடும்பம் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெறவேண்டும்.

அவர்களின் குடும்பத்தில், அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற, இந்த உணர்வின் எண்ணங்களை நமது உடலில் பதிவாக்குதல் வேண்டும்.

அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்.

இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது நம் உடலில் அறியாது சேர்ந்த தீய உணர்வின் அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடுக்கப்படுகின்றது.

இப்படித் தீமைகளை நம்முள் புகாது தடைப்படுத்தி விட்டால் அவைகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும். நமது ஆன்மா சுத்தமாகிவிடும்.

ஆகவே
1.துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றுங்கள்.
2.உடலின் பற்றைப்  பற்றற்றதாக்குங்கள்.
3.அருள் ஞானத்தைப் பற்றுடன் பற்றுங்கள்.
4.பகைமையற்ற வாழ்வு வாழ்ந்திடுங்கள்.
5.இருளான உணர்வுகளை நீக்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுங்கள்.
6.மெய் வாழ்க்கையாக வாழ்ந்திடுங்கள்.

இதன் வழி, அருள்ஞானம் பெறவேண்டும் என்று ஏங்கி இருப்போர் அனைவருக்கும்,  எமது குரு அருளும், எமது அருளும் என்றும் உறுதுணையாக இருக்கும்.