ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 24, 2019

நல்லதைக் காக்க வேண்டும் என்றால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது...!


தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு கல்யாணம் செய்து கொள்கிறார் என்றும் கங்கணமே கழட்டவில்லை என்றும் காவியத்தில் சொல்வார்கள். அதாவது
1.விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தியைத் தனக்குள் கவர்ந்து
3.தன்னுடன் சேர்த்துக் கொண்டே உள்ளது என்பதை அவ்வாறு காட்டுகின்றார்கள்.

தசரதச் சக்கரவர்த்தி என்றால் நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றி மனிதன் ஆனபின் “பத்தாவது நிலை (கல்கி - ஒளி நிலை) அடையக்கூடிய பருவம் பெற்றவர்...” என்று பொருள்.

நாம் எண்ணக்கூடியது அனைத்தையும் நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றி அந்தச் சக்தியைத் தன்னுடன் இணைத்து தன்னுடன் இயங்கச் செய்கின்றது.

அதனால் தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தருணத்தில் அவர் என்ன ஆனார் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.
1.ஏனென்றால் அவருக்குள் எத்தனையோ விதமான குணங்கள் இருக்கின்றது
2.அது எல்லாம் அவருடன் சேர்ந்து இயக்கும் சக்தி (மனைவி) என்று பொருள்.

இராமனின் தாயோ எல்லாவற்றையும் அது பரிவுடன் பண்புடன் அரவணைக்கும் சக்தி கொண்டது. அதனால் அந்தச் சக்தியின் துணை கொண்டு அதனின்று உருவாகும் இந்த உணர்வின் அணுக்கள் மற்றவர்களை அரவணைக்கும் சக்தி கொண்டது என்று உணர்த்துவதற்காக
1.இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து
2.அவனிடம் இந்தச் சாம்ராஜ்யத்தை ஒப்படைக்கலாம்...! என்பது தசரதச் சக்கரவர்த்தியின் எண்ணம்.

தனக்குள் எடுக்கும் நல்ல குணம் கொண்டு அந்த நல்ல குணத்தைக் கொண்டே இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்ற எண்ணங்கள் கொள்கின்றார் தசரதன்.

அந்த நல்ல குணங்கள் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணுகின்றார். இருப்பினும்
1.பரதனின் தாயாரோ தனக்குள் ஆசை கொண்டது.
2.தன் பையனுக்கே பட்டத்தைச் சூட்ட வேண்டும் என்று அது பிடிவாதம் பிடிக்கின்றது.

(உயிர் - தசரதன்; உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் – மனைவியாக இணைகிறது; அதனால் தான் தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவிகள் என்று சொல்வது.)

அப்படிப்பட்ட அந்த உயிரின் இயக்கத்தில்
1.எந்த உணர்வின் தன்மை வலிமை பெறுகின்றதோ
2.அந்தக் குணத்தின் தன்மை - தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகின்றது.
3.அதனால் உடலுக்குள் உருவான மற்ற நல்ல அணுக்களுக்கெல்லாம் கலக்கங்கள் ஏற்படுகின்றது என்பதைக் காட்டுகின்றனர்.

இருந்தாலும் உடலுக்குள் சகோதரத்துவமாக வளர்ந்த பரதனோ அண்ணனே (இராமனே) ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்பினாலும் “தன் குழந்தைக்கே பட்டம் சூட்ட வேண்டும்...” என்ற இந்தப் பிடிவாத குணங்கள் அங்கே கைகேயிக்கு எப்படி உருவாகின்றது என்பதைக் காட்டுகின்றார்கள்.

நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலுக்குள் வந்த பின் அது விளைந்து
1.அதனுடைய பருவ காலம் வந்த பின்
2.நல்லதையே இயக்கவிடாது எப்படித் தடுக்கிறது...? என்பதையே அங்கே தெளிவாக்குகின்றார் வான்மீகி.

தீமை என்று அறிந்த கணமே அதை நமக்குள் சேராது அது நம் உடலுக்குள் விளையாது தடுக்க வேண்டும். அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று உடலுக்குள் இப்படிச் செலுத்தினால் இதற்குப் பெயர் ஆத்ம சுத்தி.

நஞ்சை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலுக்குள் சென்று அது அணுவாக விளைந்து அதிலிருந்து வெளிப்படும் மணம் தீமைகளை வேக வைத்து அதை ஒளியாக மாற்றிவிடும். தீமைகள் அனைத்தும் செயலற்றதாகின்றது.