ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2019

தூக்கத்தில் “திடுக்...” என்று பயந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்...?


தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்துத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு வரும் ஒரு சிலருக்குத் தூக்கத்தில் “திடுக்” என்று முழிப்பு வரும். சிலர் பயந்துவிட்டேன் என்பார்கள். கறுப்பாக உருவம் தெரிந்தது.. அல்லது வெள்ளையாக ஆவி தெரிந்தது...! என்பார்கள்.

அது மட்டுமல்ல...
1.அந்த நேரத்தில் கை கால்களை என்னால் அசைக்க முடியவில்லை...
2.பேச முடியவில்லை... எழுந்திருக்கவும் முடியாது போல் தோன்றியது என்று சொல்வோரும் உண்டு.
3.இன்னும் சிலருக்கு உடல் முழுவதையும் அமுக்குவது போலவும் மூச்சுத் திணறல் போல இருந்தது...! என்றும் கூடச் சொல்வார்கள்.

இதுகள் எல்லாம் நாம் ஏற்கனவே நமக்குள் எடுத்துக் கொண்ட சில மனித உணர்வுகள் அது இறக்கப்படும் பொழுது நுகர்ந்த உணர்வுகள் ஆகும். நம்முடைய ஈர்ப்புக்குள் வந்த பின் அது இப்படி எல்லாம் தெரியும்.

ஏனென்றால் நாம் புலனடங்கித் தூங்கும் பொழுது நம் நினைவோட்டம் இல்லாத நேரத்தில்
1.அத்தகைய உணர்வுகள் தன் பசிக்குப் பகலில் உணவை எடுக்க முடியாதபடி வரும் பொழுதும்
2.நாம் எடுக்கும் தியானத்தின் சக்தியால் அது களைந்து நல்லதாக மாறும் சமயங்களிலும்
3.உயிரிலே மோதும் சமயம் அத்தகைய உருவங்களும் உணர்ச்சிகளும் நமக்குத் தெரிய வரும்.

இதைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை....!

அப்படித் தூக்கத்தில் முழிப்பு வந்து விட்டது என்றால் எழுந்து ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து
1.புருவ மத்தியில் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா...! என்று மூன்று முறை சொல்லி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்கலாம்.
4.இல்லை பாதி நினைவு இருந்தாலும் அப்படியே படுக்கையில் படுத்தபடியே திரும்பத் திரும்ப அதைச் சொல்லிச் செய்யலாம்.
5.மீண்டும் தூக்கம் தன்னாலே வந்து விடும்.

முக்கியமாகப் புருவ மத்தியில் ஓ...ம் ஈஸ்வரா குருதேவா...! என்று
1.நம் உயிரை அழுத்தமாக எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இழுத்துச் சுவாசித்து உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த வலுக் கூடினால் எந்த ஆன்மாவின் இயக்கமும் நம் ஈர்ப்புக்குள் வராது. நம்மை இயக்காது. பயத்தின் உணர்ச்சியாக நம்மை இயக்காது.  அந்த அச்சுறுத்தும் உணர்வுகளுக்கு நாம் எடுக்கும் அருள் சக்திகள் அச்சுறுத்தலாகிவிடும்.

சந்தேகமோ பலவீனமோ நமக்குள் வராது. நமக்குள் மன பலம் அதீதமாகக் கூடும்... தெளிந்த சிந்தனையும் வரும். பிற உணர்வுகளின் இயக்கங்களை முன் கூட்டியே அறியவும் முடியும்.

செய்து பாருங்கள்...!